மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் (எம்.சி.யூ) சர்ப்ரைஸ்களுக்குப் பஞ்சம் வைத்ததே இல்லை. ஒரு மாதத்துக்கு முன்னதாக அதன் நான்காம் கட்டம் குறித்த அறிவிப்பையும், அதில் இடம்பெறும் படங்களின் பட்டியலையும் வெளியிட்டது மார்வெல் நிறுவனம். `எட்டர்னல்ஸ்', `ஷாங் சீ' போன்ற புதுவரவுகள் உட்பட தோர் - 4, டாக்டர் ஸ்ட்ரேஞ் - 2, பிளாக் விடோ என்றும் பல படங்களை தனது நான்காம் கட்டத்தில் வெளியிடவிருக்கிறது.

என்றாலும், ஆண்ட்-மேன் 3, கேப்டன் மார்வெல்-3, பிளாக் பேந்தர்-2, கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி-3 குறித்த அறிவிப்புகள் இல்லாதது ஒரு ஏமாற்றமாகவே இருந்தது. மேலும், கடந்த வாரம், ஸ்பைடர்-மேன் மீது டிஸ்னிக்கும், சோனிக்கும் இருந்த ஒப்பந்தம் புதுப்பிப்பதில் இருந்த சிக்கலால் அந்த ஏமாற்றம் மேலும் அதிகரித்தது.
இந்த நிலையில், தற்போது பிளாக் பேந்தர் படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்லார் மார்வெல் நிறுவனத்தின் தலைவர் கெவின் ஃபைகி. இந்த அறிவிப்பின்படி, 2022-ம் ஆண்டு மே 6ல் இந்தப் படம் வெளியாகவிருப்பதாக கெவின் அறிவித்துள்ளார்.

பொதுவாக கறுப்பினத்தவர்களை சூப்பர் ஹீரோ படங்களில் சைடு கிக்காகத்தான் வைத்திருப்பார்கள். கேப்டன் அமெரிக்கா, அயர்ன்-மேன், டாக்டர் ஸ்ட்ரேஞ் என எல்லோரது சைடு கிக்கும் கறுப்பின ஹீரோதான். அந்த வரிசையில், முதல்முறையாக ஒரு கறுப்பின சூப்பர் ஹீரோ படமாக 2018-ல் பிளாக் பேந்தர் வெளியானது. படத்திலும் கறுப்பின அரசியல் ஓரளவுக்குப் பேசப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.