Published:Updated:

`முடிக்க வேண்டிய காரியம் இன்னும் இருக்கு!' - மீண்டும் வருகிறாள் #BlackWidow #TeaserTrailer

எல்லோருக்கும் தன் கடந்த காலத்தை மாற்றி எழுத வேண்டும் என்ற ஆசை வாழ்க்கையின் ஏதோவொரு புள்ளியில் தோன்றும். மார்வெல் சினிமாட்டிக் யூனிவர்ஸ்ஸின் சூப்பர் ஹீரோயின் ப்ளாக் விடோ என்கிற நட்டாஷா ரோமனோவுக்கு இப்போது அந்த ஆசை வந்துவிட்டது. ஆம், எம்.சி.யூ-வில் வெளியாகவிருக்கும் நட்டாஷாவின் தனிக்கதை படமான `ப்ளாக் விடோ'வின் கதை இதுதான்.

Black Widow
Black Widow

இன்று வெளியான இந்தப் படத்தின் டீசரில் எப்போதும்போல தனக்கே உரிய கெத்தைக் காட்டியிருக்கிறார் நடிகை ஸ்கார்லெட் ஜோஹான்சன். `கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்' படத்தின் நிகழ்வுகளுக்கும், `அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்' படத்தின் தொடக்கத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்வதாக இந்தப் படம் உருவாகியுள்ளதாக மார்வெல் நிறுவனம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்தப் படம் அடுத்த ஆண்டு மே மாதத்தில் வெளியாகவிருக்கிறது. `கேப்டன் மார்வெல்' படத்துக்குப் பிறகு வெளியாகும் எம்.சி.யூ-வின் முழுநீள சூப்பர்ஹீரோயின் படமும் இதுதான்.

``மார்வெல் எல்லாம் சீக்வெல்கள் அல்ல... அவை ரீ-மேக்... ஏனென்றால்?!'' விளக்கும் மார்ட்டின் ஸ்கார்சஸி

அதனால், சிவில் வார் கலகத்துக்குப் பிறகு தலைமறைவாக இருந்த நட்டாஷா என்ன செய்துகொண்டிருந்தாள், என்னென்ன சிக்கல்களெல்லாம் அவளுக்கு நேர்ந்தது என்பதை இந்தப் படம் காட்சிப்படுத்தும். ஏற்கெனவே `அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான்' படத்தில் தன்னுடைய கடந்த காலம் எத்தனை கொடியதாக இருந்தது என்றும், அதில் ரெட் ரூம் என்ற இடத்தில் அவள் எப்படி ஓர் இரக்கமற்ற போராளியாக உருவாக்கப்பட்டாள் என்றெல்லாம் கதையாக சொல்லியிருந்தாள் நட்டாஷா.

Red Guardian
Red Guardian

இந்தப் படத்தில் அந்தக் கொடிய கடந்த காலத்தின் சில எதிர்வினைகள் அவளைத் துரத்தவிருக்கின்றன. அதற்கு, அவளுடைய பழைய குழுவும் குடும்பமுமான ரெட் கார்டியன், ஏலேனா, மெலீனா உள்ளிட்டோருடன் இணைந்து தனது தவற்றையெல்லாம் எப்படித் திருத்தி எழுதுகிறாள் என்பதைப் படமாக்கியிருக்கிறார்கள். அடிப்படையில் அவள் ஒரு ரஷிய நாட்டுப் போராளி என்பதால், அந்தத் தாக்கம் இதில் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். கேப்டன் அமெரிக்காவுக்கு நிகரான ரஷிய ஹீரோவான ரெட் கார்டியனுக்கும் நட்டாஷாவுக்கும் இடையே இருக்கும் நட்பும் இந்தப் படத்தில் விரிவாக விளக்கப்படும். இது ஒருபுறமிருக்க, தலைமறைவாக இருக்கும் நட்டாஷாவுக்கு ஷீல்ட் எப்படிப்பட்ட அச்சுறுத்தலைக் கொடுக்கும் என்பதும் படத்துக்கான கூடுதல் சுவாரஸ்யத்தைக் கொடுக்கும் என்று எதிர்பாக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு