Published:Updated:

`விக்ரம் லேண்டரைப் பார்த்தீங்களா?'- விண்வெளியில் இருக்கும் நாசா விஞ்ஞானியிடம் விசாரித்த பிராட் பிட்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் நாசா விஞ்ஞானியிடம் பேசிய ஹாலிவுட் நடிகர் பிராட் பிட், அவரிடம் சந்திரயான் 2-வின் விக்ரம் லேண்டர் குறித்து விசாரித்திருக்கிறார்.

Nick Hague, Brad pitt
Nick Hague, Brad pitt ( NASA )

நிலவில் யாரும் பெரிய அளவுக்கு ஆய்வுகள் நடத்தாத தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ, சந்திரயான்- 2 விண்கலத்தை அனுப்பியது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, கடந்த ஜூலை 22-ம் தேதி ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட சந்திரயான் - 2 விண்கலம், கடந்த 7-ம் தேதி நிலவில் தரையிறங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. சாஃப்ட் லேண்டிங் மூலம் நிலவின் பரப்பில் தரையிறங்கத் திட்டமிட்டிருந்த நிலையில், சந்திரயான் 2-வின் லேண்டருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. லேண்டருடனான தொடர்பை மீட்க இஸ்ரோ முயற்சி செய்துவருகிறது. இதற்காக, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவும் உதவ முன்வந்திருக்கிறது. இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாமக்கல் மண்ணும் சேலம் ஸ்டீலும் சேர்ந்து செஞ்ச சந்திரயான்-2!
Brad Pitt
Brad Pitt
NASA

இந்த நிலையில், சந்திரயான் 2-வின் விக்ரம் லேண்டர் குறித்து சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் நாசா விஞ்ஞானியிடம் விசாரித்திருக்கிறார், ஹாலிவுட் நடிகர் பிராட் பிட். விண்வெளிப் பயணத்தை மையமாக வைத்து பிராட் பிட் நடித்துள்ள, `அட் அஸ்ட்ரா' (Ad Astra) படத்துக்கான புரமோஷன் வேலைகளில் அவர் ஈடுபட்டிருக்கிறார். அதன் ஒருபகுதியாக, சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் நாசா விஞ்ஞானி நிக் ஹேக் (Nick Hauge) உடன் அவர் பேசினார். சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருக்கும் அனுபவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடினார். இவர்களுக்கிடையிலான உரையாடலை நாசா நேரலையில் ஒளிபரப்பியது.

`சந்திரயான் -2 மூலம் ஊக்கமளித்துள்ளீர்கள்; சூரிய மண்டலத்தை இணைந்து ஆய்வு செய்வோம்!’ - நாசா

பிராட் பிட் பேசுகையில், இஸ்ரோவின் சந்திரயான் - 2 விண்கலம் குறித்தும் ஹேக்கிடம் கேட்டார். அவர், ``கலிஃபோர்னியாவில் உள்ள நாசாவின் ஜேபிஎல் ஆய்வகத்துக்கு (Jet Propulsion Laboratory) கடந்த வாரம் சென்றிருந்தேன். இந்தியாவின் சந்திரயான் - 2 விண்கலம் நிலவில் தரையிறங்க முயற்சி செய்த நாள் அது. அவர்களுக்கு அமெரிக்காவும் உதவிசெய்தது. நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து அதை உங்களால் பார்க்க முடிந்ததா?'' என்று கேட்டார்.

Vikram lander
Vikram lander
ISRO

நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து அதைப் பார்க்க முடியவில்லை என்று பதிலளித்த நிக் ஹேக், செய்திகள் வாயிலாகவே அதைத் தெரிந்துகொண்டதாகவும் கூறுகிறார். விண்வெளி மையத்தில் இருப்பது குறித்து பிராட் பிட்டிடம் பேசிய நிக் ஹேக், `பாதத்தைத் தரையில் ஊன்றி நடந்தே பல நாள்கள் ஆனதால், அது இல்லாததுபோல் உணருகிறேன்'' என்றார். `இது, பார்ப்பதற்கே பிரமிப்பாக இருக்கிறது' என்று பிராட் பிட் அதற்குப் பதிலளித்தார்.

விண்வெளியில் அமைக்கப்பட்டிருக்கும் சர்வதேச விண்வெளி மையத்தில் தற்போது, 3 அமெரிக்க விஞ்ஞானிகளுடன் ரஷ்யாவைச் சேர்ந்த 2 விஞ்ஞானிகளும் இத்தாலியைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானியும் தங்கியிருக்கிறார்கள். நிக் ஹேக்குடன் பிராட் பிட் பேசும் நிகழ்வு, வாஷிங்டனில் உள்ள நாசாவின் தலைமையகத்தில் இருந்து நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

Nick Hague, Brad pitt
Nick Hague, Brad pitt
NASA
சந்திரயான்-2 மீண்டும் உயிர்பெற வாய்ப்பு உண்டா?- நம்பி நாராயணன் பதில்

குவின்டன் டொராண்டினோவின் 'ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்' படத்துக்குப் பின்னர், 'அட் அஸ்ட்ரா' என்று பெயரிடப்பட்டுள்ள விண்வெளிப் பயணம் தொடர்பான படத்தில் பிராட் பிட் நடித்திருக்கிறார். தொலைந்து போன தனது தந்தையைத் தேடி விண்வெளியில் பயணம் செய்யும் மகனைப் பற்றிய அந்தப் படம், வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, அமோக வரவேற்பைப் பெற்றது. இந்த மாத இறுதிவாக்கில், படம் உலக அளவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.