Published:Updated:

Oscars 2023: சிறந்த நடிகர் Brendan Fraser - கம்பேக் கொடுத்த 90ஸ் கிட்ஸ் ஹீரோ; நெகிழ வைத்த ஏற்புரை!

The Whale - பிரெண்டன் ஃப்ரேசர் (Brendan Fraser)

"நான் 30 வருடங்களுக்கு முன்னர் நடிக்கத் தொடங்கினேன். எனக்கு எதுவும் சுலபமாகக் கிடைத்துவிடவில்லை. ஆனால்..." - நெகிழ வைத்த நடிகர் பிரெண்டன் ஃப்ரேசரின் ஆஸ்கர் விருது ஏற்புரை! கம்பேக் நாயகனின் சாதனைப் பயணம் ஒரு பார்வை.

Published:Updated:

Oscars 2023: சிறந்த நடிகர் Brendan Fraser - கம்பேக் கொடுத்த 90ஸ் கிட்ஸ் ஹீரோ; நெகிழ வைத்த ஏற்புரை!

"நான் 30 வருடங்களுக்கு முன்னர் நடிக்கத் தொடங்கினேன். எனக்கு எதுவும் சுலபமாகக் கிடைத்துவிடவில்லை. ஆனால்..." - நெகிழ வைத்த நடிகர் பிரெண்டன் ஃப்ரேசரின் ஆஸ்கர் விருது ஏற்புரை! கம்பேக் நாயகனின் சாதனைப் பயணம் ஒரு பார்வை.

The Whale - பிரெண்டன் ஃப்ரேசர் (Brendan Fraser)

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்து முடிந்திருக்கிறது 95வது ஆஸ்கர் விருதுகள் விழா. 'தி அகாடமி விருதுகள்' என்று பெருமையுடன் அழைக்கப்படும் இந்த விருதுதான் திரையுலகின் உயரிய விருதாகக் கருதப்படுகிறது. ஏற்கெனவே சத்யஜித் ரே, ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட இந்தியப் படைப்பாளிகள் சிலர் ஆஸ்கர் விருதுகளை வென்றிருந்தாலும், இந்தியப் படைப்புகளுக்கு என்று ஆஸ்கர் விருதுகள் இதுவரை கிடைத்ததில்லை. இந்த வருடம் அந்தக் கனவு நிறைவேறும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது.

காரணம், இந்த வருடம், மூன்று விருதுகளின் இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இந்தியப் படைப்புகள் இடம்பெற்றிருந்தன. சிறந்த ஆவணப்படம் பிரிவில் சௌனக் சென் இயக்கிய `All that Breathes', சிறந்த ஆவணக்குறும்படம் பிரிவில் கார்த்திகி கோன்சால்விஸ் இயக்கிய `The Elephant Whisperers' மற்றும் சிறந்த பாடல் பிரிவில் கீரவாணி இசையில் `RRR' படத்தின் `நாட்டு நாட்டு' பாடல் ஆகியவைப் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.
ஆஸ்கர் வென்ற 'RRR' நாட்டு நாட்டு பாடல்
ஆஸ்கர் வென்ற 'RRR' நாட்டு நாட்டு பாடல்
Chris Pizzello

இதில் 'சிறந்த ஆவணப்படம்' பிரிவில், விருது வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட'All that Breathes' விருதினைத் தவறவிட்டிருக்கிறது. அந்தப் பிரிவில் 'Navalny' என்ற படைப்பு வென்றிருக்கிறது. சிறந்த ஆவணக்குறும்படம் பிரிவுக்கான விருதில் கார்த்திகி கோன்சால்விஸ் இயக்கிய 'The Elephant Whisperers' படம் ஆஸ்கர் விருதினை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கிறது. அதேபோல, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'RRR' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலும் ஆஸ்கர் விருதினைத் தட்டிச் சென்றது. இதன் மூலம் இந்த வருடம், இரண்டு இந்தியர்கள், தங்களின் இந்தியப் படைப்புகளுக்காக ஆஸ்கர் வென்று ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

மொத்தம் 11 விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருந்த `Everything Everywhere All At Once' திரைப்படம் சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த படம், சிறந்த இயக்குநர் உள்ளிட்ட 7 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.
அதேபோல் சிறந்த நடிகருக்கான விருதினை வென்றார் `தி மம்மி' புகழ் நடிகர் பிரெண்டன் ஃப்ரேசர் (Brendan Fraser). அவரின் கம்பேக் படமான `தி வேல்' (The Whale) என்னும் படைப்புக்காக இந்த விருதினை அவர் பெற்றிருக்கிறார். அவரின் விருது ஏற்புரை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன் தொகுப்பு இங்கே...
The Whale - பிரெண்டன் ஃப்ரேசர் (Brendan Fraser).
The Whale - பிரெண்டன் ஃப்ரேசர் (Brendan Fraser).
Chris Pizzello

(பல முன்னணி நடிகர், நடிகைகள் ஒன்றாக இருப்பதைச் சுட்டிக்காட்டி...) "மல்டிவெர்ஸ் என்றால் இப்படித்தான் இருக்கும் இல்லையா?! இப்படியொரு மரியாதையை எனக்கு அளித்த அகாடமிக்கும் தயாரிப்பு நிறுவனமான 'A24'க்கும் நன்றி. குறிப்பாக, 'தி வேல்' படத்தின் இயக்குநர் டேரன் அரோனோஃப்ஸ்கிக்கு நன்றி. எனக்கு அவர் மீண்டும் படைப்பு ஊக்கத்துக்கான உயிர்நாடியை வழங்கியிருக்கிறார். இந்தக் கப்பல் பயணத்தில் ('தி வேல்' படத்தில்) என்னையும் இணைத்த அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். இந்தப் படத்தை எழுதிய சாமுவேல் D.ஹண்டர்தான் எங்களின் கலங்கரை விளக்கம்" என்றார்.

சிறந்த நடிகர் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட மற்ற நடிகர்கள் குறித்துப் பேசியவர், "அவர்கள் தங்களின் 'தி வேல்' (திமிங்கிலம்) அளவான இதயத்தினை நமக்கு வெளிக்காட்டினார்கள். அதனால்தான் அவர்களின் ஆன்மாக்களை நாம் ஆத்மார்த்தமாக உணர்ந்தோம். அவர்களுடன் நானும் ஒரு நடிகனாகப் பரிந்துரைக்கப்பட்டது எனக்குக் கிடைத்த பெருமை" என்றவர், இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடித்த நடிகை ஹாங் சூ-வையும் பாராட்டிப் பேசினார்.

"நான் 30 வருடங்களுக்கு முன்னர் நடிக்கத் தொடங்கினேன். எனக்கு எதுவும் சுலபமாகக் கிடைத்துவிடவில்லை. ஆனால் எனக்கு இதற்காக ஓர் உதவி வந்துகொண்டிருந்தது. அது ஒரு கட்டத்தில் நின்றுபோன பிறகுதான் அதன் அருமையை நான் உணர்ந்தேன்.

The Whale - பிரெண்டன் ஃப்ரேசர் (Brendan Fraser).
The Whale - பிரெண்டன் ஃப்ரேசர் (Brendan Fraser).
Chris Pizzello

இந்த விருதுக்காகவும், மரியாதைக்காகவும் நன்றி சொல்ல விரும்புகிறேன். என் சக நடிகர்கள் இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது. எனக்கு இது ஓர் ஆழ்கடல் தேடல் போலத்தான் இருந்தது. இந்தத் தேடலில் நான் மூச்சு விடுவதற்கான காற்று என் மகன்கள், என் மேலாளர் மற்றும் என் முதல் துணை ஜீன் மூர் (கேர்ள் பிரெண்ட்) ஆகியோரிடமிருந்து வந்தது. (அரங்கை நோக்கி...) உங்கள் அனைவருக்குமே மீண்டும் என் நன்றிகள். நான் உங்கள் அனைவருக்கும் கடமைப்பட்டிருக்கிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் முடித்தார்.

54 வயதான பிரெண்டன் ஃப்ரேசர் 'தி மம்மி', 'ஜார்ஜ் ஆஃப் தி ஜங்கிள்', 'Journey to the Center of the Earth' போன்ற கமெர்ஷியல் பொழுதுபோக்குப் படங்களின் மூலம் இந்தியாவிலும் பிரபலமானார். அவர் 'தி வேல்' படத்தில் 600 பவுண்டுகள் எடையுள்ள ஒரு மனிதராகக் கடினமான சிகை அலங்காரங்கள் எல்லாம் செய்து நடித்திருந்தார். இந்தப் படத்துக்காக மட்டும் 20 குறிப்பிடத்தகுந்த விருதுகளை வென்று சாதனை படைத்திருக்கிறார்.

Brendan Fraser - The Whale
Brendan Fraser - The Whale

இவர் தன் கரியரில், அதிக ரிஸ்கான ஸ்டன்ட் காட்சிகளில் நடித்ததால் அவ்வப்போது பல்வேறு அறுவைசிகிச்சைகள் செய்யவேண்டியிருந்தது. மூட்டு மாற்று அறுவைசிகிச்சை தொடங்கி குரல் நாண் அறுவைசிகிச்சை வரை பல சிக்கல்களை எதிர்கொண்டார். டிவி மற்றும் பிற படைப்புகளில் தொடர்ந்து நடித்து வந்தாலும் 2010-ம் ஆண்டில் ஹாரிசன் ஃபோர்டுடன் நடித்த 'Extraordinary Measures' படத்துக்குப் பிறகு வேறு எந்தப் பெரிய படவாய்ப்பும் இவருக்குக் கிடைக்கவில்லை. இவர் ஹாலிவுட்டால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக இவரின் ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

2003-ம் ஆண்டு ஹாலிவுட் ஃபாரின் பிரஸ் அசோசியேஷனின் அப்போதைய தலைவர் பிலிப் பெர்க் தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கடந்த 2018-ம் ஆண்டு வெளிப்படையாகக் குற்றம்சாட்டினார் பிரெண்டன். கோல்டன் குளோப்ஸ் விருதுக்கான ஒரு விருந்து நிகழ்வில் இது நடந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

The Whale - பிரெண்டன் ஃப்ரேசர் (Brendan Fraser).
The Whale - பிரெண்டன் ஃப்ரேசர் (Brendan Fraser).
Chris Pizzello

தற்போது 'தி வேல்' படத்துக்காக அதே ஹாலிவுட் ஃபாரின் பிரஸ் அசோசியேஷனின் கோல்டன் குளோப் விழாவின் சிறந்த நடிகர் விருதுக்காக பிரெண்டன் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார். ஆனால், அதனுடனான அவரின் மோசமான அனுபவத்தைக் காரணம் காட்டி, விருது நிகழ்வில் தான் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்திருந்தார் பிரெண்டன்.

சர்ச்சைகள், சந்தித்த மோசமான அனுபவங்கள் போன்றவற்றைக் கடந்து பிரெண்டன் ஃப்ரேசர் இப்போது மீண்டும் சாதித்திருப்பது பலருக்கும் ஊக்கமளிக்கும் ஒன்றாக இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 90ஸ் கிட்ஸின் ஆதர்ச ஹாலிவுட் ஹீரோக்களில் ஒருவரான பிரெண்டனுக்கு வாழ்த்துகள்!