Election bannerElection banner
Published:Updated:

`என்னைப் பற்றிய ஆவணப்படம்... பார்த்து இரண்டு வாரங்கள் அழுதேன்!' - பிரிட்னி ஸ்பியர்ஸ்

Britney Spears
Britney Spears

`` `ஃப்ரேமிங் பிரிட்னி ஸ்பியர்ஸ்' ஆவணப்படத்தைப் பார்த்த பிறகு, இரண்டு வாரங்கள் அழுதேன்" என்று பிரிட்னி ஸ்பியர்ஸ் கூறியிருக்கிறார்.

பாப் உலகின் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் பிரிட்னி ஸ்பியர்ஸ், தன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்த ஆவணப்படத்தைப் பார்த்தபோது, இரண்டு வாரங்களாகத் தன்னுடைய கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறியுள்ளார்.

பாப் உலகின் சூப்பர் ஸ்டார் பிரிட்னி ஸ்பியர்ஸை பற்றிய `ஃப்ரேமிங் பிரிட்னி ஸ்பியர்ஸ்' என்ற ஆவணப்படம் பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. அந்தப் படத்தில் அவருடைய வாழ்க்கையில் அவரின் வளர்ச்சிப் பாதையையும், அவருக்கு ஏற்பட்ட தடைகள், அவரின் தந்தையின் பழைமைவாத விவாதங்களால் ஏற்பட்ட பிரச்னைகள் குறித்தும் ஆவணப் படுத்தப்பட்டிருந்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, தன்னைப் பற்றிய ஆவணப்படம் தொடர்பாக தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்திருக்கிறார் பிரிட்னி. `என் வாழ்க்கை எப்போதுமே மிகவும் ஊகிக்கப்படக்கூடியது, உலகின் பார்வைக்கும் ஜட்மென்ட்க்கும் உட்பட்டது' என்று ஒரு போஸ்ட்டையும், ஏரோஸ்மித்தின் பாடலான ̀கிரேஸி' என்ற பாடலுக்கு வீட்டில் தான் நடனமாடிய வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.

தற்போது 39 வயதாகும் பிரிட்னி ஸ்பியர்ஸ், `நான் மிகவும் பாதிக்கப்பட்டதால் இந்த உலகத்தை நம்புவதற்கு நிறைய வலிமை தேவைப்பட்டது. ஏனெனில் நான் எப்போதுமே தவறாக நடத்தப்பட்டேன், அவமதிக்கப்பட்டேன், ஊடகங்களால் சங்கடப்படுத்தப்பட்டேன். ஆனாலும், நான் இன்றுவரை இருக்கிறேன்' என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

Britney Spears Documentary
Britney Spears Documentary

மேலும் ஸ்பியர்ஸ் கூறுகையில், அவர் தன்னைப் பற்றிய ஆவணப்படத்தை முழுவதுமாகப் பார்க்கவில்லை, என்றும், பார்த்தவரையில் அதில் தன் மீது விழச்செய்துள்ள வெளிச்சத்தால் கூச்சமாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், `நான் இரண்டு வாரங்கள் அழுதேன், நன்றாக. தற்போது சில நேரங்களில் அழுகிறேன்' என்றிருக்கிறார்.

பிரிட்னி ஸ்பியர்ஸின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வேளையில், அவருடைய முன்னாள் மேக்கப் ஆர்ட்ஸ்ட் பில்லி, `இந்தப் பதிவு பிரிட்னியின் கதைதான், ஆனால் இவை பிரிட்னியின் வார்த்தைகள் அல்ல. அவரை நான் அறிவேன். அவர் தன்னைப் போராளியாகவே வெளிப்படுத்திக்கொள்வார், பாதிக்கப்பட்டவராக வெளிப்படுத்திக்கொள்ள மாட்டார். பிரிட்னியின் சோஷியல் மீடியா பக்கத்தை அவர் நிர்வகிப்பதில்லை' என்று கூறியுள்ளார். ஆனால் பிரிட்னியின் சோஷியல் மீடியா மேனேஜர் கெஸி, `தன் இன்ஸ்டா போஸ்ட்களை பிரிட்னிதான் பதிவிடுகிறார்' என்று கூறியுள்ளார். பிரிட்னி ஸ்பியர்ஸ் இதுபற்றி எந்த விளக்கமும் தெரிவிக்கவில்லை இதுவரை.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு