இந்த வரிசையில் நீண்ட நாள்களாக எதிர்பார்க்கப்பட்ட 'Once upon a time in Hollywood' திரைக்கு வர இருக்கிறது.
முன் குறிப்பு : இந்தச் செய்தியில் சில ஸ்பாயிலர்கள் இருக்கும்.
டாரான்டினோவின் ஆஸ்த்தான நடிகர்களான பிராட் பிட் மற்றும் லியனார்டோ டீகேப்ரியோவின் நடிப்பில் வெளிவர இருக்கும் படம்தான் 'Once upon a time in Hollywood.' திரைக்கு வெளிவரும் முன் கான்ஸ் திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. பல்வேறு ரசிகர்கள் படத்தை ரசித்தாலும், சிலர் இதன் மீது விமர்சனமும் வைத்தார்கள். இயக்குநரான ரோமன் போலன்ஸ்கியின் முன்னாள் மனைவியான ஷரன் டேட் மேன்ஸன் குடும்பத்தினரால் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். அப்போது ஷரன் டேட் 8 மாத கர்ப்பிணி. இதை மையமாக வைத்துதான் இப்படம் எடுத்திருப்பதாகவும், அப்படியான காட்சியை நீக்கக்கோரியும் ரோமன் போலோவ்ஸ்கியின் தற்போதைய மனைவி இமானுவேல் செய்க்னர் புகார் கொடுத்திருந்தார். இதுதான் இப்படத்தின் மீது எழுந்த முதல் சர்ச்சை. இதைத் தொடர்ந்து தற்போது புரூஸ் லீயை வைத்து புதிதாக ஓர் சர்ச்சை கிளம்பியுள்ளது. புரூஸ் லீ 1966-ல் 'தி க்ரீன் ஹார்னட்' எனும் டி.வி சீரிஸில் நடித்தார். இதை மையமாக வைத்து இப்படத்தில் ஓர் காட்சி இடம்பெறும். புரூஸ் லீயாக மைக் மோ என்பவர் நடித்திருக்கிறார். கதைப்படி அந்த டி.வி சீரிஸின் படப்பிடிப்பு தளத்தில் பிராட் பிட்டுக்கும் புரூஸ் லீக்கும் சண்டை வருவது போன்ற ஒரு காட்சி இடம்பெறும். அக்காட்சியில் புரூஸ் லீயை இழிவுபடுத்துவது போன்ற காட்சி இருப்பதாக, புரூஸ் லீயின் மகளான ஷனான் லீ ஒரு நேர்காணலில் கொதித்துள்ளார்.
அதில் அவர், "படத்தில் நடித்திருக்கும் பிராட் பிட் மற்றும் லியானார்டோ டீகேப்ரியோ இருவருமே ஆன்டிஹீரோக்கள் என்பதும் படத்துக்காகத்தான் என் தந்தையை இப்படிச் சித்திரித்திருக்கிறார்கள் என்பதும் புரிகிறது. புரூஸ் லீ போன்ற ஒரு வீரனை அடிப்பதற்காகத்தான் பிராட் பிட்டை இவ்வளவு கொடூரமானவராகக் காட்டியிருக்கிறார்கள்.

குறிப்பிட்ட காலகட்டத்தில் நடக்கும் கதை என்பதால் ரேசிஸம் போன்ற விஷயங்கள் இப்படத்தில் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், அவர் உயிருடன் இருந்தபோது, ஹாலிவுட் அவரை எப்படி நடத்தியது என அனைவருக்கும் தெரியும். புரூஸ் லீ எப்படிப்பட்டவர், அவர் எப்படி வாழ்ந்தார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். திரையரங்கில் என் தந்தையைப் பார்த்து பார்வையாளர்கள் சிரிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரது பாத்திரத்தை நாசம் செய்துவிட்டார்கள். '' என அப்படத்தின் மீது விமர்சனம் வைத்துள்ளார், புரூஸ் லீயின் மகள் ஷனான் லீ.