ஜானி டெப் மற்றுமொரு முறை நீதிமன்றப் படிகளில் ஏறவிருக்கிறார். இந்த முறை விவகாரம் ஆம்பர் ஹெர்ட் தொடர்புடையது அல்ல. 2018-ல் ஜானி டெப் ஒப்பந்தமான படமொன்றில் பணிபுரிந்த மேனேஜர் ஒருவரை அவர் தாக்கியதாகக் கூறப்படும் வழக்கு அடுத்த மாத இறுதியில் விசாரணைக்கு வரவிருக்கிறது.
இந்த வழக்கில் ஜானியின் தரப்பில் வாதாட இருப்பது அவரது ஆஸ்தான வழக்கறிஞர் கேமியோ வாஸ்குவிஸ் (Camille Vasquez). ஆம்பரை எதிர் கேள்விகள் மூலம் நீதிமன்றத்தில் திகைக்கவைத்த அதே கேமியோதான். ஜானி டெப்பின் ரசிகர்கள் இவரைத் தூக்கிவைத்துக் கொண்டாடினர். ஜானி vs ஆம்பர் வழக்கின் தீர்ப்பிற்கு பிறகு ஒரு வாரத்தில் கேமியோ பணிபுரிந்த நிறுவனத்தில் பார்ட்னர் அளவுக்கு பதவி உயர்வு பெற்றார்.
இப்போது விசாரணைக்கு வரும் வழக்கு 2018-ல் ஜானி டெப்மீது கிரெக் ராக்கி புரூக்ஸ் (Gregg “Rocky” Brooks) என்பவர் தொடர்ந்த வழக்கு. புரூக்ஸ், லோகேஷன் மேனேஜராக ஜானி நடித்த 'City of Lies' என்கிற படத்தில் பணிபுரிந்தார். அந்தப் படத்தில் இருந்து புரூக்ஸ் பின்னர் நீக்கப்பட்டார். அதற்குக் காரணம், இந்த வழக்கில் தயாரிப்பு நிறுவனத்தையும் எதிர் தரப்பாகச் சேர்த்திருந்தார் புரூக்ஸ்.

படத்தயாரிப்பு குழு, Barclay Hotel என்கிற இடத்தில் படப்பிடிப்புக்காகக் குறிப்பிட்ட நேரத்திற்கு அனுமதி பெற்றிருந்தது. ஆனால் விஷயங்கள் கைமீறிப் போயின. புரூக்ஸ் அவற்றை சரிசெய்ய முயலும்போது ஜானி டெப் இடையில் புகுந்து அவரை மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார், "நான் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்ல உனக்கு உரிமை இல்லை" எனப் பேசியுள்ளார்.
புரூக்ஸின் விலா எலும்பில் இரண்டு முறை பலமாகத் தாக்கினார். ஜானி டெப் அப்போது மது அருந்தி இருந்ததாகவும் ட்ரக்ஸ் போதையில் இருந்ததாகவும் உடல் ரீதியாகவும், வார்த்தைகளாகவும் தன்னைத் தாக்கினார் என்பது புரூக்ஸின் வாதம். அவர் சமர்ப்பித்த 42 பக்க அறிக்கையில், இதற்கு பதிலீடாக 1,00,000 அமெரிக்க டாலர் டெப் கொடுத்ததாகவும் புரூக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் ஜானி மட்டும் குற்றவாளி இல்லை. அந்தப் படத்தின் இயக்குனர் பிராட் பர்மேன், குட் பிலிம் தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஜானியின் தயாரிப்பு நிறுவனமான Infinitum Nihil ஆகியோரும் எதிர்தரப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜூலை 25-ல் இந்த வழக்கின் விசாரணை தொடங்குகிறது.