`ஹாப்ஸ் அண்டு ஷா' படத்தின் சர்ப்ரைஸ் அடிஷன்! - ரசிகர்களுக்கு நோலன் கொடுத்த இன்பஅதிர்ச்சி
பொதுவாக காலத்தை வைத்து திரைக்கதையில் சில வித்தைகள் காட்டும் நோலன், இந்தப் படத்திலும் காலத்தின் தொடர்ச்சி, நீட்சி குறித்த ஒரு கதை சொல்லும் வித்தையைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

வர வர கிறிஸ்டோஃபர் நோலனின் நடவடிக்கைகள் அவர் படங்களைப் போலவே மாறிவருகிறது. எந்தவித முன் அறிவிப்புமின்றி எல்லோரையும் வியக்கவைக்கும் தன் படங்களின் சஸ்பென்ஸ் காட்சிகளை ரகசியமாக வைத்திருந்துபோல், தன் 'டெனெட்' படத்தின் டீசரை 'ஹாப்ஸ் அண்டு ஷா' படத்தோடு வெளியிட்டுவிட்டார் நோலன்.
இன்னும் ஃபர்ஸ்ட் லுக்கூட வெளியாகாத இந்தச் சூழலில், படத்தைப் பற்றிய சில அடிப்படைத் தகவல்களை உள்ளடக்கிய, ஒரு நிமிடத்துக்கும் குறைவான டீசர் ஒன்றைச் சில குறிப்பிட்ட ஐமேக்ஸ் திரையரங்குகளில் மட்டும் நேற்று திரையிடப்பட்டது. ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் படத்தொடரின் ஸ்பின்-ஆஃபான 'ஹாப்ஸ் அண்டு ஷா' படம் இந்த வாரம் வெளியாகியுள்ளது.
கிட்டத்தட்ட 40 நொடிகளுக்கு ஓடும் இந்த டீசரின் தொடக்கத்தில், படத்தின் நாயகன் ஜான் டேவிட் வாஷிங்டனில் ஒரு தோட்டா துளைத்த கண்ணாடித் திரைக்குப் பின்னால் நின்றபடி அதைப் பரிசோதித்துக்கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து, 'ஒரு புதிய நாயகனுக்கான காலம் வந்துவிட்டது' என்ற வாக்கியம் திரையில் வந்த பின் சில ஆக்ஷன் காட்சிகள் வருகின்றன. பின்னர், 'ஒரு புதிய பணிக்கான காலம் வந்துவிட்டது' என்ற வாக்கியம் தெரிந்து, இறுதியில், ஜான் ஒரு மருத்துவமனையில் ஆக்சிஜன் மாஸ்க் அணிந்தபடி நின்றுகொண்டிருப்பதுபோல் அந்த டீசர் முடிவடைகிறது.

பொதுவாக காலத்தை வைத்து திரைக்கதையில் சில வித்தைகள் காட்டும் நோலன், இந்தப் படத்திலும் காலத்தின் தொடர்ச்சி, நீட்சி குறித்த ஒரு கதை சொல்லும் வித்தையைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவருடைய 'மெமெண்டோ' படத்தின் பேட்டர்னைப் போலவே தொடக்கம், முடிவு இரண்டும் ஒரே நேரத்தில் தொடங்கி கதையின் மையப்பகுதியில் படத்தின் க்ளைமாக்ஸ் வருவதாக இருக்கும். அதேபோல இதில் வேறொரு முறையைக் கையாண்டு இருப்பதாகத் தெரிகிறது. அதைக் குறிக்கும் விதத்தில் படத்தின் டைட்டிலை இடமிருந்து வலமோ, வலமிருந்து இடமோ, அல்லது தலைகீழாகப் படித்தாலோ 'TENƎꓕ' என்று ஒரே சொல்லாகத்தான் தெரியும்.

வெறும் திரையரங்குகளில் மட்டுமே வெளியான இந்த டீசர், இன்னமும் இணையத்தில் வெளியாகவில்லை. எனினும், ஏற்கெனவே படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துவிட்டது.