Published:Updated:

நோலனின் மாயவித்தைகள் இருக்கின்றன... ஆனா அந்த எமோஷன்ஸ்? #TENET-ன் மேஜிக்கும் லாஜிக்கும்!

கார்த்தி
TENET Review
TENET Review

நோலன் எனும் மந்திரக்காரனிடம் வியப்பூட்டும் மாயவித்தைகள் இன்னும் பல இருக்கின்றன. TENET விமர்சனம்...

உலகத்தைக் காக்கும் ஒரு ஹீரோ!

மூன்றாம் உலகப்போருக்கு நிகரான சம்பவங்கள் நிகழா வண்ணம் சில விஷயங்களை அவன் மாற்றி அமைக்க வேண்டும். ஆம், எதிர்காலத்தில் இருந்து பின்னோக்கி சென்று அவர்கள் நிகழ்காலத்தில் நடக்கவிருக்கும் சம்பவங்களை மாற்றுகிறார்கள், அல்லது மாற்ற முயல்கிறார்கள். காலம் காலமாக நாம் பார்த்த டைம் டிராவல் படங்களில், ரிவர்ஸ் டைம், இன்வர்டட் வெப்பன்ஸ், டெம்போரல் பின்சர் மொமன்ட், டர்ன்ஸ்டைல் என மீண்டுமொரு நெடிய அறிவியல்/இயற்பியல் பாடம் எடுத்திருக்கிறார் கிறிஸ்டோபர் நோலன்.
TENET
TENET

ஒப்பேரா ஹவுஸில் நடக்கும் ஒரு விபத்து, நாயகனை ஒரு ரகசிய நிறுவனம் நோக்கி அழைத்துச் செல்கிறது. எதிர்காலத்திலிருந்து வரும் ஆபத்துகளிலிருந்து தப்பிக்க இவர்கள் சில வேலைகள் செய்கிறார்கள். இந்த சிக்கலான வேலைகள், நாயகனை இந்தியா, நார்வே, இத்தாலி, சைபீரியா என கண்டங்கள் கடக்க வைக்கிறது. எதிர்காலத்திலிருந்து வரும் சிக்கல்களைச் சரி செய்ய நாயகன் ஒருவன் இருந்தால், சிக்கல்களை உருவாக்கும் வில்லன்களும் இருக்கத்தானே செய்வார்கள்? காலத்தின் முன்னும் பின்னும் நிகழும் கதையில் கதையின் முடிவுதான் ஆரம்பமா அல்லது ஆரம்பம்தான் முடிவா என சுவாரஸ்யமான கேள்வியுடன் முடிகிறது TENET.

TENET
TENET

CIA ஏஜென்ட்டாக ஜான் டேவிட் வாஷிங்டன் (டென்சல் வாஷிங்டனின் மகன்). தன்னைச் சுற்றியிருக்கும் எல்லோருமே டபுள் ரோலில் இருக்க, சற்று குழம்பி, பின்பு கொஞ்சம் கொஞ்சமாய் தெளிவடையும் ஒரு கதாபாத்திரம். நோலன் படங்களில் இரண்டாம் ஹீரோ எப்போதுமே அதிக முக்கியத்துவம் பெறுவார்கள். அப்படியான வேடத்தில் ராபர்ட் பேட்டின்சன். இந்தியாவில் வசிக்கும் டான் பிரியா சிங்காக டிம்ப்பிள் கம்பாடியா. வில்லன் சேட்டராக கென்னத் பிரானாக். சூப்பர் ஹீரோவின் ஒரு கையில் நாயகியையும், இன்னொரு கையில் மக்களையும் கொடுத்து, ஒருவரைத்தான் காப்பாற்ற முடியும் எனச் சொன்னால் அவன் என்ன முடிவு எடுப்பான்? (அட! பழைய 'ஸ்பைடர்மேன்' கிளைமாக்ஸ்) அப்படியான சூப்பர் ஹீரோவின் நாயகி கேட்டாக எலிசபெத் டெபிக்கி.

TENET இந்த சொல்லே ஒரு PALINDROME தான். தமிழின் விகடகவி போல. ரிவர்ஸில் படித்தாலும் அதே பொருள். படத்தில் சில காட்சிகள் இரண்டாம் முறை வரும். சில காட்சிகள் ஏற்கெனவே வந்தது போல் இருக்கும்.

Coldplay-ல் வந்த The Scientist பாடலும் கமலின் நீல வானமும்!

ரிவர்ஸ் டைம் எனும் கான்செப்ட்டின்படி, படத்துக்கு இந்தப் பாடல்கள் பொருந்தா ஒப்பீடுகள் என்றாலும், இவற்றை மீண்டுமொரு பார்க்கும் பொழுது, இந்தப் படம் தரவிருக்கும் ஆச்சர்யங்கள் நமக்கு அகப்படலாம். எல்லோரும் ஃபார்வேர்டில் வந்துகொண்டிருக்க, நாயகன் மட்டும் ரிவர்ஸில் நடித்துக்கொண்டிருப்பார். அதிலும் சில இடங்களில் வாயையும் அசைத்துமிருப்பார். இன்னும் எளிமையாக இன்னொரு உதாரணம் என்றால், கமலின் 'மன்மதன் அம்பு' படத்தின் 'நீல வானம்' பாடல், ஒட்டுமொத்த பாடலும் ரிவர்ஸில் இருக்கும். கமலும், நாயகியும் சீட் பெல்ட் மாட்டும் காட்சியில் ஆரம்பித்து பல காட்சிகள் ரிவர்ஸில் இருக்கும். ரிவர்ஸிலிருக்கும் காட்சியில் கமல் பாடும்போது, "நீல வானம் நீயும் நானும்" எனும் வார்த்தைகளுக்குப் பதிலாக அதன் ரிவர்ஸ் வார்த்தைகளுக்கு வாயசைக்க வேண்டும். அப்போதுதான் அவுட்புட்டில் சரியான வாய் அசைவாக அவற்றைக் காட்சிப்படுத்த முடியும். இந்த இரண்டு பாடல்களிலிருக்கும் சுவாரஸ்யம் புலப்படுமானால், 'டெனெட்' தரவிருப்பது பேரனுபவம். இரண்டாம் பாதி முழுக்கவே இப்படியான காட்சிகள்தான்.

TENET
TENET

படத்தின் பிரச்னை துவங்குமிடம் நோலனின் ஆச்சர்ய அறிவியல் வகுப்புகள் அல்ல. மேஜிக் நிபுணர்களுக்கே உரித்தான ஏதோவொரு நொடிப் பொழுதில் எல்லாவற்றையும் மாற்றி, நம்மை ஆச்சர்யப்படுத்தும் நோலனின் வித்தைகள் இந்தப் படத்திலும் விரவி இருக்கின்றன. இன்செப்ஷனோ, இன்டெர்ஸ்டெல்லாரோ, மெமென்டோவோ சுற்றி சுற்றி வரும் காட்சிகள், அதனைத் தீர்மானித்த கதைக்களங்கள் நம்மை சோதித்தாலும், அதைக் கடந்து அதிலொரு எமோஷனல் டச் இருக்கும். நோலனின் படங்கள் அதன் ஆழத்தில் கையாளும் பேசுபொருள் அவைதாம்!

இன்டெர்ஸ்டெல்லாரின் `ஆனந்த யாழ் ' மகளும், இன்செப்ஷனின் கனவுகளுக்குள் புதைந்து போன மனைவியும், டன்கிரிக்கின் கடைசி நொடியில் நேரத்தைக் கடன் வாங்கும் டாம் ஹார்டியும் நம்மிடம் எதிர்பார்ப்பது இதுதான்.

தன் எல்லா படங்களிலும் இப்படியான எமோஷனல் காட்சிகளைத் தூவியிருப்பார் நோலன். 'வாவ்' ஆக்ஷன், ஆச்சர்ய தருணங்கள் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷன் என்றால், இந்த நுண்ணர்வு காட்சிகள்தான் நோலனை, மைக்கேல் பே போன்ற வெறுமனே கமர்ஷியல் இயக்குநர் எனும் நிலையிலிருந்து தனித்திருக்க வைப்பது. ஆனால், இந்தப் படத்தில் அது மொத்தமாய் மிஸ்ஸிங். நோலனின் அறிவியல் வகுப்புகள் சிலருக்குப் பிடிக்காது, பலருக்குப் புரியாது. ஆனால், அந்த அறிவியலில் சினிமா சுதந்திரத்தை, ஃபேண்டஸி மைலேஜை மிகவும் லாகவமாகவும், குறைவாகவும் பயன்படுத்திய ஒரே நபர் இன்றளவிலும் நோலன் தான். வெறுமனே சயின்ஸ் பிக்ஷன் என போர்டு மாட்டிவிட்டு, ஃபேன்டஸிகளை நோலன் ஒரு நாளும் எடுத்ததில்லை. அறிவியலாளர்களே அவர் படத்தில் பங்காற்றுகிறார்கள், பாராட்டுகிறார்கள்.

ஆனால், டெனெட்டின் சிக்கல்கள், நோலன் எனும் அறிவியல் ஆசிரியர் நடத்தும் வகுப்புகளில் இல்லை, நோலன் எனும் இயக்குநரின் 'டிரேட் மார்க்' மெல்லிய உணர்வுகளை வெளிப்படுத்தாத காட்சிகளின் போதாமைகளில் இருக்கிறது. டன்கிர்க்-கிலும் இந்தப் பிரச்னை இருந்தது. இதற்கு காரணம் கதாபாத்திரங்களின் வடிவமைப்புகள், அவர்களின் கிராஃப் முழுமைப் பெறாமல் இருப்பதே!

இந்தப் படத்தில் டெக்னிக்கல் சாதுர்யங்களைப் பிய்த்தெறிந்துவிட்டு பார்த்தால், இது வெறுமனே ஒரு 'ஜேம்ஸ் பாண்டு' பாணி படமாகத்தான் தொக்கி நிற்கிறது. படத்தில் கேட்டுக்கும் நாயகனுக்குமான அந்த இணக்கமோ, நாயகன் ஏன் இவ்வளவு மெனக்கெடுக்கிறான் என்பதற்கான காரணமோ எங்குமே இல்லை. பேப்பரில் இருந்தால்தானே ஸ்கிரீனில் வரும் என்பது போல், டேவிட் வாஷிங்டனும் இந்தக் காட்சிகளில் தேமே என நிற்கிறார். முக்கியமான கதாபாத்திரங்களை வில்லன் பிடித்துவைத்துக்கொண்டு பிளாக்மெய்ல் செய்யும் காட்சிகளில் ஜேம்ஸ் பாண்டுகள்கூட சற்று மெனக்கெடுவார்கள். அந்தக் காட்சிக்கு முன்பு ஏன் நாயகன் இவ்வளவு துடிக்கிறான் என்பதற்கான காட்சிகள் இருக்கும். டெனெட்டில் அது மிஸ்ஸிங் என்பதாலேயே, அத்தகைய காட்சிகள் ஏனோதானோவென கடக்கின்றன.

TENET
TENET

சரி, இந்தப் படத்தை தியேட்டரில் தான் பார்க்க வேண்டுமா?

இந்த கொரோனா சூழலில், தியேட்டர்களை நோக்கி ரசிகர்களை இழுக்கும் மந்திரச் சாவி 'டெனெட்' தான் என உறுதியாக நம்பினார் நோலன். ஜூலை 17-ம் தேதி வெளியாக வேண்டிய திரைப்படம், கொரோனாவால் சிலமுறை தள்ளிப்போனது. ஒவ்வொருமுறை பிரமாண்டமாய் மார்க்கெட் செய்து, பின் தள்ளிப்போவதுமாக, டெனெட், வார்னர் பிராஸின் கைகளை மேலும் சுட்டு எரித்தது. அதையும் தாண்டி ஆகஸ்ட் 26-ம் தேதி சில நாடுகளில் வெளியானது. அமெரிக்கா,சீனாவில் செப்டம்பர் மாதம் வெளியானது. இன்னும் சில நாள்களில் படத்தின் அதிகாரபூர்வ 4K, BLUE RAY பிரின்ட்டுகள் வெளியாகவுள்ள சூழலில் இந்தியாவில் படம் தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.

தியேட்டரில்தான் பார்க்க வேண்டுமா என்ற கேள்விக்குப் படத்தின் ஆரம்ப காட்சிகளில் வரும் அந்தப் பின்னணி இசையே அதற்கான பதிலைச் சொல்லி விடும். நல்ல சவுண்ட் சிஸ்டம் இருக்கும் திரையரங்குகளில் பார்த்தால், ஒப்பேரா ஹவுஸ் காட்சிகளுக்கு லுட்விக் கொரான்சன் தந்திருக்கும் இசை ஒரு பேரனுபவம். 'பிளாக் பேந்தர்' என்றதும், அந்தப் படத்தின் இசையும் நம் காதுகளில் ஒலிக்கத் தொடங்கும். சமீபத்திய ஹாலிவுட் சூப்பர்ஹீரோ படங்களில் 'பிளாக் பேந்தர்' படத்தின் இசை மகத்தானது. அதே மாதிரியான தரத்தில் மற்றுமொரு ராஜபாட்டை நிகழ்த்தியிருக்கிறார் லுட்விக் கொரான்சன்.

சாம் மெண்டிஸின் ஸ்பெக்டர், நோலனின் முந்தைய படங்களான 'டன்கிரிக்', 'இன்டர்ஸ்டெல்லார்' படங்களில் பணியாற்றிய Hoyte van Hoytema தான் இதற்கும் ஒளிப்பதிவாளர். படத்தில் தெரியும் மிகப்பெரும் உழைப்பு அதன் ஒளிப்பதிவுதான். எல்லாவற்றையும் இரண்டு டைம் ஃப்ரேமில் எடுக்க வேண்டும். மீண்டுமொருமுறை அசத்தியிருக்கிறார் Hoyte van Hoytema. படத்தின் அடுத்த பலம் அதன் சாகசக் காட்சிகள். விஷுவல் எஃபெக்ட்ஸ் தொழில்நுட்பங்களை அதிகம் பயன்படுத்தாமல், எப்போதும் செட் போடுபவர் நோலன். 'இன்டர்ஸ்டெல்லார்' படத்திலும் பற்றி எரியும் சோளக் காடுகளுக்கு நிஜமான செடிகளைப் பயன்படுத்தினார் என்பார்கள். 'தி டார்க் நைட்' படத்தில் ஜோக்கர் வெடிக்கச் செய்யும் மருத்துவமனை, 'தி டார்க் நைட் ரைஸஸ்' படத்தில் வில்லன் பேன் வெடிக்கச் செய்யும் விளையாட்டு மைதானம் எனப்பல இவற்றுக்கு உதாரணம். 'டெனெட்'டில் இன்னும் ஒரு படி மேலே போய், ஒரு நிஜமான போயிங் ரக விமானத்தை வெடிக்கச் செய்திருக்கிறார்கள். எந்தவித ஜிம்மிக்ஸும் இல்லாமல், அது அப்படியே நழுவிச் சென்று வெடித்துச் சிதறுகிறது. அதேபோல், படத்தின் அந்த இறுதிக் காட்சிகள்...

TENET
TENET

(அடுத்த வரி ஸ்பாய்லர்)

டெம்போரல் பின்சர் மொமன்ட் (ஒரே நேரத்தில் ஒரு குழு முன்னோக்கியும், இன்னொரு குழு பின்னோக்கியும் நகரும்). அதே போல், அந்த கார் சேஸிங் காட்சியும். இந்த மூன்று காட்சிகளும், பின்னணி இசையும் ஒளிப்பதிவும் டெனெட்டை ஒரு தியேட்டர் அனுபவமாக மாற்ற வல்லமை பொருந்தியவை.

கொரோனாவைத் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கான 'டார்க் நைட்' லெவல் பிளாக்பஸ்டராக டெனெட் என்றால், நிச்சயமாக இல்லை. ஆனால், தியேட்டர்ல ஒரு நல்ல படம் இருக்கிறதா என்றால், தற்போதைக்கு அது நோலனின் 'டெனெட்'தான். நோலன் என்னும் மந்திரக்காரனிடம் இன்னும் காட்ட சில மாயவித்தைகள் இருக்கின்றன. படம் தமிழிலும் வெளியாகியிருக்கிறது.

இந்த மாத இறுதியில் 'வொண்டர்வுமன் 1984' வெளியாகிறது. வார்னர் பிரதர்ஸ் 'டெனெட்'டில் விட்டதை அதில் பிடிக்கும் என நம்புவோம்.

அடுத்த கட்டுரைக்கு