பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா. தற்போது அவர் நடித்திருக்கும் சிட்டடெல் (Citadel) வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று உள்ளது.
Avengers: Endgame, The Gray Man போன்ற பிரபல ஹாலிவுட் படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ்தான் இந்த வெப் சீரிஸை இயக்கியுள்ளனர். இதில் ரிச்சர்ட் மேடன், லெஸ்லி மான்வில் மற்றும் ஸ்டான்லி டுசி ஆகியோரும் நடித்துள்ளனர். ஆறு எபிசோடுகளில் இரண்டு எபிசோடுகள் வரும் ஏப்ரல் 28-ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் அமேசான் பிரைம் ஸ்டுடியோஸ் வழங்கும் ‘South West’ திரைப்பட விழாவில் பங்கேற்ற பிரியங்கா சோப்ரா, தன்னுடைய 22 வருடத் திரைப்பயணத்தில் முதல் முறையாக ஆண் நடிகருக்குச் சமமான ஊதியம் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், “நான் இதைச் சொன்னால் எனக்குப் பிரச்னைகள் கூட வரலாம். நான் 22 வருடங்களாக திரைத்துறையில் நடித்து வருகிறேன். இதுவரை 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் 2 டிவி தொடர்களிலும் நடித்துள்ளேன்.
ஆனால் எனக்குச் சமமான ஊதியம் எங்குமே கிடைத்ததில்லை. 'சிட்டடெல்' தொடரில் நடித்தபோது மட்டுமே எனக்கு ஆண் நடிகர்களுக்கு நிகரான ஊதியம் கிடைத்திருக்கிறது. ஆனால், நான் குறைவான சம்பளம் பெற்ற படத்திற்கும் சமமான உழைப்பையும், நேரத்தையும் கொடுத்திருக்கிறேன்.

அமேசான் நிறுவனம் நீங்கள் இணை நடிகையாக நடித்துள்ளீர்கள். அதனால் இந்தச் சம்பளம் உங்களுக்குப் பொருத்தமானதுதான் என்று என்னிடம் கூறியது. அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஆண் நடிகருக்கும், பெண் நடிகருக்கும் இருக்கும் சம்பள வேறுபாடுகள் குறித்து முன்னரே பிரியங்கா சோப்ரா நிறைய முறை பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.