`ஸ்பீடு’ முதல் `பல்ப் ஃபிக்ஷன்’ வரை... - வெள்ளிவிழா காணும் ஹாலிவுட்டின் கல்ட் க்ளாசிக் சினிமாக்கள்!

2019-ம் ஆண்டு, 1994-இன் வெள்ளி விழா ஆண்டாக இருக்கிறது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், ஹாலிவுட்டின் நவீன யுகத்தில் அதிகமான கல்ட்-க்ளாசிக் படங்களைத் தந்த ஆண்டும் 1994தான்.

ஒரு படத்தை, அதன் வெள்ளிவிழா ஆண்டில் எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பதை வைத்து, அது எப்படிப்பட்ட படமாக இருந்துவந்துள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம். இதில் கல்ட்-கிளாசிக் படங்கள் ஒரு படி மேலே. 5, 10, 15, 20... ஆண்டுகள் எனத் தொடர்ச்சியாக அந்தப் படத்தை ஒவ்வோர் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடித் தீர்த்துவிடுவார்கள்.
அந்த வரிசையில், 2019-ம் ஆண்டு, 1994-இன் வெள்ளி விழா ஆண்டாக இருக்கிறது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், ஹாலிவுட்டின் நவீன யுகத்தில் அதிகமான கல்ட்-க்ளாசிக் படங்களைத் தந்த ஆண்டும் 1994தான். அதனால் பல க்ளாசிக் படங்களின் வெள்ளி விழாக்கள், தொடர்ச்சியாக இந்த ஆண்டு உலகம் முழுக்க பரவிக்கிடக்கும் திரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. சிறப்புத் திரையிடல்கள், விவாதங்கள், படக்குழுவினரின் பேட்டிகள், அனுபவங்கள், அந்தப் படம் சமூகத்தின் உளவியலை எப்படியெல்லாம் மாற்றியிருக்கிறது என்பது குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் எனப் பல வகையான வடிவங்களில் அந்தப் படங்களை இன்னமும் உயிர்ப்பித்துக்கொண்டிருக்கிறார்கள்.

தி லயன் கிங்
டிஸ்னி நிறுவனம் அதை இன்னமும் ஒரு சிறப்பான முறையில் கொண்டாடியது. அனிமேஷன் வடிவில் 1994-ம் ஆண்டு வெளியான தன் `தி லயன் கிங்' திரைப்படத்தை இந்த ஆண்டு முழு லைவ் ஆக்ஷன் படமாக ஒவ்வொரு ஃப்ரேமையும் மீட்டுருவாக்கி வெளியிட்டது. அதையும், சரியாக ஒரிஜினல் வெர்ஷன் வெளியான ஜூலை 19-ம் தேதியே வெளியிட்டது.
`அலாவுதீன்', `தி பியூட்டி அண்டு தி பீஸ்ட்' உட்பட டிஸ்னியின் பல இளவரசிக் கதைகள் 90-களில் பெரும் வசூலைக் குவித்திருந்தாலும், `தி லயன் கிங்' அளவுக்கு வேறு எந்தப் படமும் ஸ்பெஷல் இல்லை என்றே சொல்லலாம். `தி லயன் கிங்'தான் டிஸ்னியின் முதல் சொந்தக் கதை, திரைக்கதையோடு உருவான நேரடிப் படம். அதுவும் பல போராட்டங்களுக்குப் பிறகு, இந்தப் படம் ஓடவே ஓடாது என அந்த நிறுவனத்துக்குள்ளேயே ஒரு பிளவு ஏற்பட்டு பின்னர் ஒரு குழு அதை எடுத்து உருவாக்கி வெற்றியும் பெற்றப் படம் அது. அதனால், அது ஸ்பெஷல்தான். அதைத் தொடர்ந்து, உலகின் பல மொழிகளில் அந்தக் கதை வெவ்வேறு விலங்குகள், மனித இனக்குழுக்களின் கதைக்களங்களை ஏந்தி படமாக்கப்பட்டது. அதில் நம்மூர் `பாகுபலி'யும் அடக்கம்.

தி ஷாஷங்க் ரிடம்ப்ஷன்
`தி லயன் கிங்'கைப் போலவே 1994-ம் ஆண்டின் மற்றொரு படமான `தி ஷாஷங்க் ரிடம்ப்ஷன்' மீண்டும் திரைக்கு வருகிறது. படத்தின் மொத்த ஓட்ட நேரத்தையும் ஒரு சிறைச்சாலைக்குள்ளேயே படமாக்கியிருப்பார்கள். அந்தச் சிறைக்குள் இருக்கும் பல மனிதர்களின் உணர்வுகள், அவர்களின் வாழ்க்கை குறித்த பின்னணி என ஒரு தரமான ப்ரிஸன்-ப்ரேக் ட்ராமாவாக இது இருந்தது. இதைத் தழுவி அல்லது இதிலிருந்து இன்ஸ்பையராகி பல படங்கள் வெளியாகியுள்ளன. ப்ரியதர்ஷன் இயக்கிய `சிறைச்சாலை', ஜனநாதன் இயக்கிய `புறம்போக்கு என்கிற பொதுவுடமை' அவற்றில் சில உதாரணங்கள். இந்தப் படம் மீண்டும் இந்த ஆண்டு சில குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டும் வெளியாகிறது.
`தி ஷாஷங்க் ரிடம்ப்ஷன்', ரிலீஸானபோது பெரிய வரவேற்பைப் பெறவில்லையென்றாலும், அதன் மறுவெளியீடுகளும், குறுந்தட்டு வணிகத்திலும் பெரிய வசூலைக் குவித்தது. இன்றுவரை இப்படியொரு படத்தை எப்படியாவது எடுத்துவிட வேண்டும் எனப் பல இயக்குநர்களைத் தூண்டும் விதத்தில் அதன் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். அதிலும் குறிப்பாக அதன் க்ளைமாக்ஸில் வரும் ட்விஸ்ட்டுதான் படத்தின் உச்சக்கட்டம்.

ஸ்பீடு
நீங்கள் ஒரு பேருந்தில் பயணித்துக்கொண்டிருக்கின்றீர்கள், அந்தப் பேருந்து மணிக்கு 80 கிலோமீட்டருக்கும் மேலான ஒரு வேகத்தில் செல்கிறது. ஆனால், உங்களுக்கு அப்போதுதான் ஒன்று தெரியவருகிறது. ஒருவேளை பேருந்தின் வேகம் 80 கிலோமீட்டருக்குக் கீழே வந்துவிட்டால் அதில் பொருத்தப்பட்டிருக்கும் குண்டு வெடித்துவிடும். இப்படிப்பட்ட ஒரு கதைக்களம்தான் `ஸ்பீட்' படத்தினுடையது. அதேபோல ஒரு பேருந்து 80 கிலோமீட்டர் வேகத்தைத் தொட்டவுடன் பாம் ஆக்டிவேட்டாகிவிடும். அதன்பின் எப்போது அந்த வேகத்துக்குக்கீழ் வருகிறதோ அப்போது அது வெடித்துவிடும். படத்தின் பெரும்பகுதி அந்தப் பேருத்துக்குள்ளேயே நடக்கும் நிகழ்வுகளை உள்ளடக்கியே இருக்கும்.
பேருந்தின் ஓட்டுநர் ஒரு துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து விடுகிறார், அவருக்குப் பதிலாக ஓட்டுநராக அமரும் ஹீரோயினுக்கோ அரைகுறையாகத்தான் வண்டி ஓட்டத் தெரியும், பேருந்திலிருந்து யாராவது வெளியேறினால் அவர்களை வில்லன் கொன்றுவிடுவான், நகரத்திலோ சாலை நெரிசல். இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழலில்தான் அந்தப் பேருந்தில் இருக்கும் அத்தனை பயணிகளையும் ஹீரோ காப்பாற்ற வேண்டும். முழுக்க முழுக்கப் பரபரப்பாக இருக்கும்.

ஃபாரஸ்ட் கம்ப்
ஒரு மனிதனின் வாழ்க்கையை அதுவும் கற்பனையான ஒரு மனிதனின் வாழ்க்கையை ஒரு பயோபிக்கிற்கு நிகராக இவ்வளவு சுவாரஸ்யமாகச் சொல்லமுடியுமா என்றால் `ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தைப் பார்த்தால் தெரியும். அடுத்து என்ன நடக்கும் எனத் தெரியாத ஒவ்வொரு நிமிடப் புதிர்தான் வாழ்க்கை என்ற ஒற்றை வரியைவைத்து கம்ப்பின் கதையைக் கவிதை போலச் சொல்லியிருப்பார்கள். அதையே படத்தின் புகழ்பெற்ற வசனமான `லைஃப் இஸ் லைக் எ பாக்ஸ் ஆஃப் சாக்லேட்ஸ்' என்று குறிப்பால் உணர்த்தியிருப்பார்கள்.
படத்தின் சுவாரஸ்யம் என்னவென்றால் கம்ப்பின் வாழ்க்கைக்கும், அமெரிக்காவின் வரலாற்றுக்கும் ஆங்காங்கே இருக்கும் தொடர்புகள்தாம். வாட்டர்கேட் ஊழல், வியட்நாம் போர், பப்பா கம்ப் கடம்பா நிறுவனம், ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம் என இந்தப் படம் பல முக்கிய அம்சங்களைத் தொட்டுச்செல்லும். படத்தின் ஒட்டுமொத்த திரைக்கதையிலும், அமெரிக்க வரலாற்றின் சில முக்கியமான சம்பவங்களுக்கான காரணமே கம்ப்தான் என படத்தை ஒரு நிகழ்வா, கனவா என்ற ஓர் இனிமையான குழப்பத்திலேயே உருவாக்கியிருப்பார்கள்.

இதே பேட்டர்னில் இந்த ஆண்டு சல்மான் கான் நடிப்பில் பாரத் என்ற படம் வெளியாகியிருந்தாலும், ஃபாரஸ்ட் கம்ப்பையே மீண்டும் இந்தியில் ஆமிர்கானை வைத்து விரைவில் ரீமேக் செய்யவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்ப் ஃபிக்ஷன்
இதுவரை சொன்ன படங்கள் ஒரு வித கல்ட் என்றால், `பல்ப் ஃபிக்ஷன்' இவை அனைத்திலிருந்து அப்பாற்பட்டு நிற்கும் வேறு வகையான கல்ட் படம். இயக்குநர் க்வண்டின் டரண்டீனோவின் மாஸ்டர் பீஸ் படமான இதன் திரைக்கதைக்காகவே இன்னமும் ஒரு சில நூற்றாண்டுகளுக்கு இதைக் கொண்டாடலாம். நாண்-லீனியர் வகைத் திரைக்கதைகளுக்கு இது ஓர் இலக்கணம் என்றும் சொல்லலாம்.
இதன் கதையை ஒரு நேர்க்கோட்டில் வைத்துச் சொன்னால் ஒரு சாதாரண ஆக்ஷன்-காமெடி ட்ராமாவாகத்தான் இருக்கும். ஆனால், இந்த மொத்த திரைக்கதையையும் ஏழு பகுதிகளாகப் பிரித்து அவற்றைக் கலைத்துப்போட்டு பரிமாறியிருப்பார் டரண்டீனோ. அதனாலேயே அந்த ஏழு பகுதிகளில் எது முதல் எது கடைசி என்ற சுவாரஸ்யம் படம் முழுக்கத் தொடரும். அதிலும் ஒரு நிகழ்வு வெவ்வேறு கதாபாத்திரங்களின் கண்ணோட்டத்தில் நிகழும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். இந்தப் படத்தைக் குறித்த விமர்சனங்கள் மற்றும் ஆய்வுகள் இன்றுவரை நடந்தும்வருகின்றன என்பது கூடுதல் தகவல்.

மேலும் சில...
இதுவரை குறிப்பிட்டவை அன்றி `தி மாஸ்க்', `பேபிஸ் டே அவுட்', `ரிச்சீ ரிச்', 'ஃபோர் வெட்டிங்க்ஸ் அண்டு எ ஃப்யூனெரல்' உள்ளிட்ட பல க்ளாசிக் காமெடிப் படங்களும் 1994-ம் ஆண்டு வெளியாயின. அவற்றைப் போல பல படங்கள் அதன்பின் உருவாக்கப்பட்டாலும், அவற்றுக்கான இடம் சினிமா வரலாற்றில் தனியிடம்தான்.