சினிமா
Published:Updated:

குட்பை மக்களின் பாண்ட்!

டேனியல் க்ரைக்
பிரீமியம் ஸ்டோரி
News
டேனியல் க்ரைக்

007

ஜேம்ஸ் பாண்ட் என்றதும் நம் நினைவுக்கு வருவது அந்த தீம் மியூசிக்கும் சட்டென ஸ்க்ரீனை நோக்கிச் சுடும் பாண்டின் அந்த ஒற்றைத் துப்பாக்கியும்தான். கோட் சூட்டில் டிப்டாப்பாக ஏஜென்ட் 007 வந்து நின்றாலே திரையில் தீப்பிடிக்கும். ‘‘பாண்ட்... ஜேம்ஸ் பாண்ட்’’ எனத் தன் பெயரைக்கூட பன்ச் டயலாக்காக பாண்ட் உதிர்ப்பது பக்கா மாஸ் மெட்டீரியல்!

இயன் ஃப்ளெமிங்கின் நாவல்களில் தோன்றும் இந்த உளவாளி ஜேம்ஸ் பாண்ட் வெள்ளித்திரையையும் ஆக்கிரமித்து 27 முழு நீளப் படங்கள் வெளியாகிவிட்டன. இதில் இரண்டு பிற தயாரிப்பு நிறுவனங்களின் படங்களைத் தவிர்த்து, தற்போது வெளியாகியிருக்கும் ‘நோ டைம் டு டை' படத்தையும் சேர்த்து மொத்தம் 25 படங்கள் ‘ஜேம்ஸ் பாண்ட் படங்கள்' பட்டியலில் இணைந்திருக்கின்றன. 50களில் எழுதப்பட்ட நாவல்களைத் தற்கால அரசியல் முதிர்ச்சியுடன் பார்க்கும்போது நிறைய முரண்பாடுகள் நிச்சயம் தட்டுப்படும், மாற்றங்கள் நிகழும். பாண்ட்டின் கதாபாத்திரமும் அதற்கு விதிவிலக்கல்ல. அப்படித்தான் அவர் பெண்களைத் தவறாக நடத்தும் விதமும், புகைபிடிப்பதும் 1995-களுக்குப் பிறகு முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டன.

குட்பை மக்களின் பாண்ட்!

வரலாற்றில் பலர் ஜேம்ஸ் பாண்டாக நடித்திருந்தாலும் அந்தக் கதாபாத்திரத்தை அப்பழுக்கற்றவராகக் காட்டாமல், பலவிதச் சிக்கல்களுடன் உலாவும் மனிதனாக டேனியல் க்ரைக் முன்னிறுத்தினார். 2005-ல் வெளியான ‘கேசினோ ராயல்' தொடங்கி, தற்போது வெளியாகியிருக்கும் ‘நோ டைம் டு டை' வரை ஐந்து படங்களில் பாண்டாகச் சண்டை செய்திருக்கிறார் டேனியல் க்ரைக். முக்கியமாக 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் பாண்டான பியர்ஸ் பிராஸ்னனுக்குப் பிறகு டேனியல் க்ரைக் அந்தப் பொறுப்பை ஏற்கிறார் என்றதும் அது நிச்சயம் அவருக்கு ஒரு பெரும் சுமையாகவே இருந்திருக்கும். காரணம், படு ஸ்டைலிஷாக, குறி தப்பாத மாஸ் ஹீரோவாக பியர்ஸ் பிராஸ்னன் 007-க்கு உயிர் கொடுத்திருந்தார். ஆனால், அந்த இடத்தை டேனியல் க்ரைக் நிரப்பிய விதம் வித்தியாசமானது.

முழுவதும் ரீ-பூட் செய்வது என, தயாரிப்பு நிறுவனங்களான எம்.ஜி.எம்-மும், இயான் புரொடக்‌ஷன்ஸும் முடிவெடுக்க, இக்காலத்தின் கலை ரசனைக்கு ஏற்ப பாண்ட் பாத்திரம் செதுக்கப்பட்டது. குறிப்பாக, எதையும் சமாளித்து, சிறு காயம்கூட இல்லாமல், லாகவமாகத் தப்பித்துக்கொள்ளும் அசகாய சூரனாக அந்தப் பாத்திரம் இல்லாமல், ஓர் உளவாளியின் இருத்தலியல் பிரச்னைகள், உளவியல் சார்ந்த சிக்கல்கள் என உணர்வுகளுக்குப் பெரும் மதிப்பளித்து புதியதொரு பாண்டாக டேனியல் க்ரைக் திரையில் உலாவினார். கிட்டத்தட்ட கிறிஸ்டோபர் நோலன் `பேட்மேன்' எனும் சூப்பர்ஹீரோவை எப்படி அணுகினாரோ அதே கோணத்தில் இந்தப் புது பாண்டும் தயாரானார். ஸ்டன்ட்களில் அதிக சிரத்தையுடன் டேனியல் க்ரைக் களமிறங்க, அவரின் நம்ப முடியாத சாகசங்கள் பல, டெக்னாலஜியால் வலுப்பெற்றன.

குட்பை மக்களின் பாண்ட்!
குட்பை மக்களின் பாண்ட்!
குட்பை மக்களின் பாண்ட்!
குட்பை மக்களின் பாண்ட்!

மற்ற படங்களிலுமே இருந்தாலும், பாண்டின் சென்டிமென்ட், காதல் போன்றவை குறிப்பாக இந்த ‘நோ டைம் டு டை' படத்தில் தனிக்கவனம் பெற்றிருக்கின்றன. தான் ஏமாற்றப்பட்டதாய் உணர்ந்து தன் காதலியைப் பார்க்கப் பிடிக்காமல் ரயில் ஏற்றிவிடுவது, அது தவறெனத் தெரிந்து, உடைந்துபோய் கோபத்தை வெளிப்படுத்துவது, மகள் குறித்த ரகசியம் வெளிப்பட்டதும் அதற்காக உருகுவது என்று பாண்டையும் நம்மைப் போன்ற ஒரு மனிதனாகக் காட்டியிருக்கிறார் டேனியல் க்ரைக். ‘007' என்ற எண்ணை ஒரு கௌரவமாகப் பிரதிபலிக்கும் படங்களிலிருந்து மாறுபட்டு, ‘அது வெறும் நம்பர்' என டேனியல் க்ரைக் சொல்லும் இடம் நமக்கே ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது. குறிப்பாக, இனி பார்க்கவே போவதில்லை எனும் கட்டத்தில் தன் காதலியுடன் அவர் போனில் பேசும் அந்தக் கடைசி உரையாடலும் அதற்கு ஹேன்ஸ் ஜிம்மரின் பின்னணி இசையும் கண்களைக் குளமாக்குகின்றன. இன்னும் ஒரு நிமிடம் நீடித்திருந்தாலும் இன்னும் அழுத்தம் கூடியிருக்கும் பலமானதொரு காட்சியமைப்பு. இருந்தும் அதைக் கதைக்குத் தேவையான அளவுக்கு மட்டுமே வைத்து நிறுத்தியிருப்பது நல்லதொரு கலைப் படைப்பின் அடையாளம்.

தற்போது அந்த பாண்ட் நாற்காலி மீண்டும் காலியாகியிருக்கிறது. ஆம், ‘நோ டைம் டு டை' படத்துடன் டேனியல் க்ரைக் பாண்ட் பாத்திரத்திலிருந்து விடைபெறுகிறார். அடுத்த பாண்ட் யாரெனப் பல்வேறு யூகங்கள், பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டாலும் தயாரிப்புத் தரப்பு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. தயாரிப்புத் தரப்பிலிருக்கும் பலரும் பாண்ட் பாத்திரம் சார்ந்து நிறைய மாற்றங்களை முன்வைத்தாலும், தயாரிப்பாளர்களில் ஒருவரான பார்பரா ப்ரோக்கோலிதான் வணிக சமரசங்களுக்கும், அரசியல் கண்துடைப்புகளுக்கும் செவி சாய்க்காமல் அதன் அசல் தன்மை கெடாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

டேனியல் க்ரைக் எனும் நடிகன் பாண்டாக மட்டுமே தன் கரியரில் அறியப்படுவார் என்பதற்கு உத்தரவாதமில்லை என்பதே அவர் அந்தப் பாத்திரத்தை இயல்பாகவே செய்தார் என்பதற்கான உதாரணம். காரணம், ஒரு பிராண்டாக ஜேம்ஸ் பாண்ட் பாத்திரம் முன்வைக்கப்பட்டபோது அதன் சுயத்தை அது இழக்க நேரிட்டது. டேனியல் க்ரைக் எனும் நடிகன் அது நடக்காமல் பார்த்துக்கொண்டார். இதனால்தான் மக்களில் ஒருவனாக, மக்களின் பாண்டாக அவர் என்றுமே வரலாற்றில் நிலைத்து நிற்பார். குட் பை பாண்ட்!