செல்வராகவன் வியந்த எலிசபெத் மாஸ் யார்? டிவி முதல் தியேட்டர் வரை மாஸ் காட்டிய கதை!

இயக்குநர் செல்வராகவன் ட்வீட் செய்த எலிசபெத் மாஸ் இவர்தான். இதுதான் எலிசபெத்தின் கதை. ஆதலால், வழக்கம்போல அந்த ட்வீட்டை டீகோட் செய்கிறேன் என, `எலிசபெத்-மாஸ். அப்போ இங்கிலாந்துல நடக்குற மாஸ் ஹீரோ சப்ஜெக்ட்' என கிளப்பிவிடாதீர்கள் மக்களே.
தமிழ் சினிமாவுலகில் தவிர்க்க முடியாதவர், தனக்கென பெரும் ரசிகர் படையைக் கொண்டிருப்பவர் இயக்குநர் செல்வராகவன். அவர் இப்போது ஒரு நடிகையின் தீவிர ரசிகராகிவிட்டார். `புதுப்பேட்டை 2' படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் பிஸியாக இருக்கும் அவர், சமீபத்தில் ஒரு ட்வீட் செய்தார். அதில் எலிசபெத் மாஸ் எனும் நடிகைக்கு அவர் ரசிகனாகிவிட்டதாகவும், அவரின் நடிப்பாற்றல் வியப்படையச் செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

பல புதுமுக, அனுபவமில்லாத நடிகர்களிடம் இருந்துகூட அற்புதமான நடிப்பைக் கொண்டுவந்தவர் செல்வராகவன். அவர் ஒரு நடிகையை மெச்சுகிறார் என்றால், அவர் யாரென தெரிந்துகொள்ள ஆசை இருக்கத்தானே செய்யும். யார் இந்த எலிசபெத் மாஸ்?
1982-ம் ஆண்டு கலிபோர்னியாவில் பிறந்த எலிசபெத்துக்கு சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர், பின்னர் பள்ளிப்படிப்பைக்கூட முடிக்காமல் முழுக்க முழுக்க நடிப்புக்குத் தேவையான திறமைகளை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தார். 'பேலே' (Ballet) நடனத்தில் தேர்ச்சிபெற்ற எலிசபெத், தொடர்ந்து தொலைக்காட்சி சீரியல்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

1999-ம் ஆண்டு வெளிவந்த `தி வெஸ்ட் விங்' எனும் தொலைக்காட்சித் தொடர் அவருடைய கரியரின் முக்கியமான தொடராக அமைந்தது. அமெரிக்க ஜனாதிபதியின் மகள் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து ஹாலிவுட் சினிமாவுலகின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். நம்மூரில் எடுக்கப்படும் குடும்பப்பாங்கான டிவி சீரியல்கள்போல் இல்லாமல் வித்தியாசமான கதைகளும் கேரக்டர்களும் எலிசபெத்தை தேடி வர ஆரம்பித்தன. அப்படியான ஒரு தொடர்தான் `மேட் மென்'. அதில் பெக்கி ஓல்சன் என்கிற கதாபாத்திரத்தில் தொடர்ந்து ஏழு வருடங்கள் நடித்த எலிசபெத், ஆறு முறை இந்தத் தொடருக்காக சிறந்த நடிகைக்கான எம்மி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.
அவர் எப்போதுமே ஒரு தனிமை விரும்பியாகவே இருந்திருக்கிறார். நடிகையாக தன் மீது விழும் வெளிச்சம் எந்த காரணத்துக்காகவும் தன்னுடைய பர்சனல் வாழ்க்கையை இடையூறு செய்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார். 2011-ம் ஆண்டு `பிராட்வே' மேடை நாடங்களில் நடிக்க ஆரம்பித்தவர், தன் திறமையை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்புகொண்ட அனைத்துக் களங்களையும் பயன்படுத்திக்கொண்டார். 2013-ம் ஆண்டு அவர் நடித்த `டாப் ஆஃப் தி லேக்' என்னும் மினிசீரிஸ் மூலமாக முதல்முறையாக சிறந்த நடிகைக்கான கோல்டன் க்ளோப் விருதை வென்றார்.

தற்போது அவர் நடித்து வரும் `தி ஹேண்ட்மெய்ட்ஸ் டேல்' என்னும் தொடருக்காக இரண்டு எம்மி விருது மற்றும் ஒரு கோல்டன் க்ளோப் விருதையும் வென்றிருக்கிறார். இப்படி தொலைக்காட்சியின் ராணியாக திகழ்ந்த எலிசபெத்துக்கு சினிமாவில் புகழைப் பெற்றுத்தந்தது கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்த `தி இன்விசிபில் மேன்' திரைப்படம். ஹாலிவுட்டையும் தாண்டி அவரை உலகம் முழுவதும் பிரபலமாக்கியிருக்கிறது இந்தத் திரைப்படம். கண்ணுக்குத் தெரியாமல் பயமுறுத்தும் காதலனால் மிரண்டுபோய், பின்னர் திருப்பி அடிக்கும் கதாபாத்திரத்தில் மிரட்டி எடுத்தார். அவர் கரியரில் மிகப்பெரிய வணிக வெற்றியைப் பதிவு செய்ததும் இந்தத் திரைப்படம்தான்.
முப்பது வருடங்களாக ஹாலிவுட்டில் நடித்து வரும் எலிசபெத் சிறிது பெரிது என்று வித்தியாசம் பார்க்காமல் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிகுந்த பொறுப்போடு அணுகுகிறார். அடுத்ததாக வெஸ் ஆண்டர்சனின் `தி ஃப்ரென்ச் டிஸ்பாட்ச்', டாய்க்கா வைட்டிடியின் `நெக்ஸ்ட் கோல் வின்ஸ்' என ஹாலிவுட்டே மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் எலிசபெத்.


Also Read
துப்பறியும் ஃப்ராய்ட்
ஆக, இயக்குநர் செல்வராகவன் ட்வீட் செய்த எலிசபெத் மாஸ் இவர்தான். இதுதான் எலிசபெத்தின் கதை. ஆதலால், வழக்கம்போல அந்த ட்வீட்டை டீகோட் செய்கிறேன் என, `எலிசபெத்-மாஸ். அப்போ இங்கிலாந்துல நடக்குற மாஸ் ஹீரோ சப்ஜெக்ட்' என கிளப்பிவிடாதீர்கள் மக்களே.