Published:Updated:

ராக்கின் JUNGLE CRUISE | ஏழு கடல், ஏழு மலை தாண்டி ஒரு மருந்து... அப்புறம் என்னாச்சுனா?!

கார்த்தி
ர.சீனிவாசன்

ராக் என்னும் டுவைன் ஜான்ஸன் படத்துக்குப் படம் நடிகராக மெறுகேறிக்கொண்டே வந்தாலும், நவரசங்கள் இன்னும் கைகூடவில்லை. அடிதடியில் சிக்ஸர் விளாசுகிறார், காமெடியில் ஃபோர் அடிக்கிறார், எமோஷனல் காட்சிகளில் மட்டும் டொக்கு வைத்துக் கொண்டிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உலகிலிருக்கும் அனைத்து நோய்களுக்குமான ஒரு மருந்து, வழக்கம்போல ஏழு மலை ஏழு கடல் தாண்டியிருக்கிறது. அதை மீட்கச் செல்பவர்களுக்கு என்னவாகிறது என்பதைச் சொல்கிறது திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் Jungle Cruise.
Jungle Cruise
Jungle Cruise
Disney

நோய்களுக்கான சர்வரோக நிவாரணியான நிலவின் மலர் (ஆங்கில வெர்ஷனில் tree of life என இருந்ததைத் தமிழ் டப்பிங்கில் இப்படி மாற்றிவிட்டார்கள்) தென் அமெரிக்காவின் காடுகளில் எங்கோ ஒளிந்திருக்க, அதைக் கண்டுபிடிக்கும் வேட்டையில் இறங்குகிறார் எமிலி பிளன்ட். தன் சகோதரருடன் இந்தக் கப்பல் பயணத்துக்குத் தயாராக, அவருக்கொரு நல்லதொரு மாலுமி தேவைப்படுகிறார். சூரதீரனாக வந்தமர்கிறார் ராக்.

என்னப்பா 'மம்மி' பட வாசம் அடிக்குது என்கிறீர்களா? 'மம்மி', 'இண்டியானா ஜோன்ஸ்' எனப் பல படங்களில் பார்த்த ஒன்லைன்தான். கடல் தாண்டி தங்கம் எடுக்கும் கதைகளுக்குப் புதிதாக என்ன கதை, திரைக்கதை எழுதிவிட முடியும்? நிலவின் மலரை வைத்து காசு பார்க்க நினைக்கிற ஒரு கூட்டம் (ரஷ்யனுக்குப் பதில் ஜெர்மன் வில்லன்); சாபம் பெற்ற மனிதர்கள், சாகாவர மனிதர்கள், ஜாகுவார் புலி என கலர்ஃபுல்லாக வந்திருக்கிறது ஜங்கிள் க்ரூஸ்.

Jungle Cruise
Jungle Cruise
Disney

இந்த மாதிரியான படங்களில் காமெடிகள் சற்று தூக்கலாக இருக்க வேண்டும். அந்த ஏரியாவை விநோத மனிதர்களும், ராக்குக்கு கடன் கொடுத்த பால் கியாமட்டியும் ஓரளவுக்கு ஈடு செய்கிறார்கள். Private parts, Sideways உள்ளிட்ட பல படங்களில் முக்கியமான வேடம் ஏற்று அசத்தியிருந்தாலும், இந்தப் படத்தில் பாலின் வேடம் சிறியதுதான். ஆனால், அதைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார். அதே போல், வெரோனிகா ஃபேல்கன் ஏற்றிருக்கும் டிரேடர் சாம் கதாபாத்திரமும் வித்தியாசமானது. அதிலும், "எவ்ளோ செலவு பண்ணி, இந்த புரொடக்ஷன் செஞ்சு இருக்கேன் தெரியுமா" எனச் சொல்லுமிடம் அல்ட்டி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கவே, வித்தியாசமான நிறத்தில் டால்பின்கள், ஜாகுவார், தவளை, தேனீக்கள் என ஒரு ராயல் சர்க்கஸை உள்ளே நுழைத்திருக்கிறார்கள். பண்டைய கால கதையென்றாலும், இதிலும் பெண்ணியம் சார்ந்த விஷயங்களை இணைத்திருப்பது ஸ்மார்ட் மூவ் நண்பா! ராக் என்னும் டுவைன் ஜான்ஸன் படத்துக்குப் படம் நடிகராக மெறுகேறிக்கொண்டே வந்தாலும், நவரசங்கள் இன்னும் கைகூடவில்லை. அடிதடியில் சிக்ஸர் விளாசுகிறார், காமெடியில் ஃபோர் அடிக்கிறார், எமோஷனல் காட்சிகளில் மட்டும் டொக்கு வைத்துக் கொண்டிருக்கிறார். சீக்கிரம் ஆல்ரவுண்டராகுங்க ராக்!

Jungle Cruise
Jungle Cruise
Disney

சண்டைக் காட்சிகள், சாகசங்கள் என ராக்குக்கு இணையாக எமிலியும் ஸ்கோர் செய்தாலும் சற்றே ஜாலியாக இருக்க வேண்டிய இடங்களில்கூட முறைத்துக்கொண்டே இருக்கிறார். எமிலியின் சகோதரராக வரும் ஜேக் வைட்ஹால், ஆங்காங்கே சிரிப்பு மத்தாப்புகளை வெடிக்கச் செய்திருக்கிறார். டெம்ப்ளேட் ஜெர்மன் வில்லனாக ஜெஸ்ஸி ப்ளேமான்ஸ் கிளைமாக்ஸில் துப்பாக்கியுடன் வழக்கமான பணியைச் செய்திருக்கிறார்.

படத்தின் அடுத்த பலம், ஜேம்ஸ் நியூட்டன் ஹோவர்டின் பின்னணி இசை. 70 வயதான ஹோவர்டு இந்தப் படத்துக்கு 'இண்டியானா ஜோன்ஸ்' அளவுக்குப் பின்னணி இசையில் பில்ட் அப் ஏற்றிருக்கிறார். படத்தின் காட்சிகளில் அந்த அளவுக்கு வீரியமோ, சுவாரஸ்யமோ இல்லை என்பதுதான் குறை. உலகெங்கும் இருக்கிற டிஸ்னியின் தீம் பார்க்குகளில் ஒரு பகுதியாக இருக்கும் ஜங்கிள் க்ரூஸை லைவ் ஆக்ஷன் படமாக்க வேண்டுமென்பது டிஸ்னியின் பல ஆண்டுக்கால ஆசை. அதை இதில் சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள்.

படத்தின் பிரமாண்டம் இது டிஸ்னி படம் எனச் சொன்னாலும், எமோஷனல் காட்சிகள் பெரிதாகக் கைகொடுக்கவில்லை என்பதால் சற்றே போரடிக்கிறது. அனிமேஷனிலேயே அத்தனை ஆத்மார்த்தமான கதைகள், ஆழமான மெசேஜ் என ரூட் பிடித்துக்கொண்டிருக்கும்போது, இத்தனை பெரிய பிரமாண்டத்துக்கு இன்னும் கொஞ்சம் உட்கார்ந்து யோசித்திருக்கலாம்.
ஆனாலும், பெரிய அளவிலான வன்முறை ஏதுமற்ற குடும்பத்துடன் பார்க்கக்கூடிய சாகசத் திரைப்படம். அந்த அளவிலேயே திருப்திப் பட்டுக்கொள்கிறது இந்த டிஸ்னியின் ஜங்கிள் க்ரூஸ்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு