Published:Updated:

`7 பேர் மட்டுமே நடித்த `எ கொயட் ப்ளேஸ்' படம்!' - இரண்டாம் பாகத்தில் புதிய முயற்சி

சந்தோஷ் மாதேவன்

முதல் பாகத்தில் குறைவான கதாபாத்திரங்களே இருந்தாலும், இரண்டாம் பாகத்தில் பலர் இணைந்து நடிக்கவிருக்கின்றனர்.

A still from 'A Quiet Place'
A still from 'A Quiet Place'

`எ கொயட் ப்ளேஸ் 2' படத்தின் படக்குழு விரிவடைந்துகொண்டே செல்கிறது. கடந்த ஆண்டு வெளியாகி மிரட்டிய ஹாரர்-த்ரில்லர் படமான இப்படம், அழிவின் விளிம்பில் இருக்கும் உலகத்தில் சத்தம் எழுப்பும் மனிதர்களைக் குறிவைத்துத் தாக்கும் கொடூரமான வேற்றுக்கிரகவாசிகளைப் பற்றியது. அவற்றிடமிருந்து எப்படி மனிதர்கள் தப்பிக்கின்றனர் என்பதே கதை.

மொத்தமே 7 பேர் மட்டும் நடித்திருந்த இதன் முதல் பாகமான `எ கொயட் ப்ளேஸ்'ஸின் க்ளைமாக்ஸில் அந்த வேற்றுக்கிரகவாசிகளைக் கொல்வதற்கான வழியை ஹீரோயின் கதாபாத்திரமான எவ்லின் அபாட் கண்டறிவதோடு அந்தப் படம் நிறைவுபெறும். அடுத்த ஆண்டு வெளியாகவிருக்கும் இரண்டாம் பாகம் சரியாக இந்தப் புள்ளியிலிருந்து தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.

முதல் பாகத்தில் குறைவான கதாபாத்திரங்களே இருந்தாலும், அடுத்ததாக வரவிருக்கும் இரண்டாம் பாகத்தில் பலர் இணைந்து நடிக்கவிருக்கின்றனர். எமிலி ப்ளண்ட், சிலியன் மர்ஃபி, நோஹா ஜூப், மில்லிசண்ட் சிம்மோன்ஸ் எனப் பலர் இப்படத்தில் இருக்கின்றனர். தற்போது, இவர்களுடன் ஜீமோன் ஹெளன்ஸூவும் இணைகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசியின் `ஷாஸாம்', எம்.சி.யூவின் `கேப்டன் மார்வெல்' போன்ற படங்களில் நடித்த இவர், `தி கிங்ஸ்மேன்' மற்றும் `சார்லீஸ் ஏஞ்சல்ஸ்' படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீமோன் ஹெளன்ஸூ
ஜீமோன் ஹெளன்ஸூ

கடந்த மாதம் தொடங்கிய `எ கொயட் ப்ளேஸ்' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களுக்கு நடக்க இருக்கிறது. அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு மார்ச் 20-ல் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.