சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

மீட்பருக்காய் காத்திருக்கும் கிரகம்!

டியூன்
பிரீமியம் ஸ்டோரி
News
டியூன்

அராகிஸ் (டியூன்) கிரகத்தின் பாலைவன மணல்களில் கிடைக்கும் ‘ஸ்பைஸ்' என்ற மதிப்புமிக்க பொருளை அறுவடை செய்பவரே பிரபஞ்சத்தைத் தன் கட்டுக்குள் வைத்திருப்பார்.

'தூதுவன் வருவான், மாரி பொழியும், சோழ தேசம் நோக்கி நம்மை அழைத்துச் செல்வான்...' அதாவது, மீட்பரை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் - ஹாலிவுட்டின் பெரும்பாலான மிகு புனைவுக் கதைகளின் சாராம்சத்தை இப்படிச் சுருக்கமாகச் சொல்லிவிடலாம். இதற்கெல்லாம் விதை போட்டது ஃப்ராங்க் ஹெர்பர்ட் எழுதிய ‘டியூன்' (Dune) நாவல்கள்தான். ஆனால், ‘டியூன்' பாதிப்பில் உருவான ‘ஸ்டார் வார்ஸ்' படங்கள்கூட வெற்றிபெற, ‘டியூன்' கதைகள் ஏனோ செல்ஃப் எடுக்கவே திணறின. அந்த வரலாற்றை மாற்றக் களமிறங்கியிருக்கிறார் சமகால ஹாலிவுட்டின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான டெனி வில்நௌ (Denis Villeneuve).

அராகிஸ் (டியூன்) கிரகத்தின் பாலைவன மணல்களில் கிடைக்கும் ‘ஸ்பைஸ்' என்ற மதிப்புமிக்க பொருளை அறுவடை செய்பவரே பிரபஞ்சத்தைத் தன் கட்டுக்குள் வைத்திருப்பார். அப்படிப்பட்ட அராகிஸை ஆளக் களமிறங்குகிறது ஹவுஸ் அட்ரெய்டீஸ். அந்த வம்சத்தின் வாரிசான பால் அட்ரெய்டீஸைத் தனித்துவம் மிக்கவனாகவும், பல வருடங்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த மீட்பராகவும் பலர் பார்க்கத் தொடங்குகின்றனர். எதிரிகளின் வஞ்சகம், தனிப்பெரும் அதிகாரத்தின் கோரமுகம் என அனைத்தும் வெளிப்பட, அராகிஸில் ஹவுஸ் அட்ரெய்டீஸ் என்னவாகிறது என்பதே இந்த முதல் பாகத்தின் கதை. வளர்ந்துவரும் நடிகரான டிமோதி சாலமெட், ரெபக்கா ஃபெர்குசன், ஆஸ்கர் ஐசக், ஜேசன் மோமோவா, ஸெண்டேயா உள்ளிட்ட பலர் ‘டியூன்' உலகை நிரப்பியிருக்கிறார்கள். ஹவுஸ் அட்ரெய்டீஸ், ஹவுஸ் ஹர்கோனன், எம்பரர், ஃப்ரெமென், சர்தௌகர் படைகள் என எண்ணற்ற வம்சங்கள், மக்கள் கூட்டங்கள் இந்த ‘டியூன்' உலகில் உலாவுகின்றன. தும்பிகள் போலப் பறக்கும் ஹெலிகாப்டர்கள், பாலைவனத்தில் உயிர்வாழ ஸ்டில்சூட், பாதுகாப்புக்கு ஷீல்டு, பல்லடுக்குப் பாதுகாப்புடன் மாளிகைகள், பதுங்குகுழிகள், வானுயர மணல் புழுக்கள், கட்டளைக்கு அடிபணிய வைக்கும் ‘வாய்ஸ்' என 10191ஆம் ஆண்டு நடக்கும் கதையில் பல சுவாரஸ்யங்களை இணைத்திருக்கிறார்கள்.

மீட்பருக்காய் காத்திருக்கும் கிரகம்!

ஐமேக்ஸ் மற்றும் 3டி தொழில்நுட்பத்தில் ஃப்ராங்க் ஹெர்பர்ட்டின் கனவுலகை நிஜமாக்கியிருக்கிறார்கள் இயக்குநர் டெனி வில்நௌ மற்றும் ஒளிப்பதிவாளர் க்ரெய்க் ஃப்ரேசர். படத்தின் எமோஷனல் காட்சிகள், சண்டைக் காட்சிகள், பிரமாண்ட காட்சிகள் என அனைத்துக்கும் அயராது உழைத்திருக்கிறது ஹேன்ஸ் ஜிம்மரின் பின்னணி இசை. இது ஆண்களின் யுத்தம், அவர்களே ஆள்பவர்கள் என ஒருவருக்கொருவர் யுத்தமிட்டுக் கொண்டிருக்கையில், அதன் பின்னணியில் பெண்கள் தனி வழியில் புரட்சி செய்துகொண்டிருப்பதாய்க் காட்டியிருப்பது சிறப்பு. இயக்குநர் டெனியின் படங்கள் வெறும் வியாபார சினிமாக்களாக விரியாது என்பதால் டியூனின் நீளம், கதை நகரும் வேகம் போன்றவை பொறுமையைச் சோதிக்கலாம். முதல் பாகம்தான் என்றாலும் வலிமையான க்ளைமாக்ஸ் இல்லாதது நெருடல். ஆனால், விஷுவலாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் புதியதொரு மைல்கல்லை ‘டியூன்' தொட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.