Published:Updated:

பெண்ணியம் பேசும் ஹாலிவுட்டே... கொஞ்சம் இதையும் பார்த்துப் பண்ணுங்க பாஸ்! #Marvel #DC

`ஹிட்டன் ஃபிகர்', `தி ஜூகீப்பர்ஸ் ஒய்ஃப்', `ப்ரிட்னி எவர் ஆஃப்டர்', `மேரி குயின் ஆஃப் ஸ்காட்ஸ்' எனக் கடந்த காலத்தில் வாழ்ந்த பல பெண்களின் வரலாற்றையும் அவர்களால் நிகழ்ந்த வரலாற்று மாற்றங்களையும் சமீப காலமாக மிகப் பரவலாகப் பதிவுசெய்துவருகிறது, ஹாலிவுட்.

பெண் ஜேம்ஸ் பாண்டு, சூப்பர் ஹீரோயின்கள், அரசியலில் பெண் தலைவர்கள் என ஹாலிவுட்டின் நிகழ்காலம், பெண்ணியம் மற்றும் அதைச் சார்ந்த பதிவுகளை உருவாக்குவதில் நிரம்பியிருக்கிறது. வாழ்க்கை வரலாற்றுப் படங்களில் தொடங்கி, ஃபேன்டஸி படங்கள் வரை, எல்லா ஜானர்களிலும் பெண்ணிம் சார்ந்து திரைக்கதை அமைக்கத் தொடங்கிவிட்டார்கள். கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே `ப்ளாக் விடோ', 'வொண்டர் வுமன் 1984' என இரண்டு சூப்பர் ஹீரோயின் படங்களின் டீசர் வெளியாகி செம ஹிட் அடித்துள்ளன. 

Wonder Woman
Wonder Woman

`ஹிட்டன் ஃபிகர்', `தி ஜூகீப்பர்ஸ் ஒய்ஃப்', `ப்ரிட்னி எவர் ஆஃப்டர்', `மேரி குயின் ஆஃப் ஸ்காட்ஸ்' எனக் கடந்த காலத்தில் வாழ்ந்த பல பெண்களின் வரலாற்றையும் அவர்களால் நிகழ்ந்த வரலாற்று மாற்றங்களையும் சமீப காலமாக மிகப் பரவலாகப் பதிவுசெய்துவருகிறது ஹாலிவுட். இதில், மிக முக்கியமான படமென்றால், `தி ஜூகீப்பர்ஸ் ஒய்ஃப்'. ஒரு எளிய பெண் நினைத்தால் எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளலாம் என்பதை இரண்டாம் உலகப்போர் சமயத்தில் நடந்த சம்பவத்தின் பின்னணியில் எடுக்கப்பட்டிருக்கும் படம் இது.

ஜெர்மனி ஆக்கிரமித்த போலந்து நாட்டின் வார்ஸா நகரிலிருக்கும் மிருகக்காட்சி சாலை இயக்குநரின் மனைவி அன்டோனியா ஜபின்ஸ்கா, பல யூதர்களைக் காப்பாற்றினார். அந்த மிருகக்காட்சி சாலையின் வளாகத்துக்குள்ளேயே அமைந்திருந்த தன் வீட்டில், போர் முடியும்வரை கிட்டத்தட்ட 300 யூதர்களைப் பதுக்கிவைத்து, நாஜிக்கள் கையில் சிக்காத வண்ணம் பாதுக்காத்தார் அன்டோனியா. இந்த நிகழ்வுகளை முதன்மைக் கதையாக வைத்து, இந்தச் சிக்கல்களால் உடலளவிலும் மனத்தளவிலும் பல பிரச்னைகளைச் சந்தித்த அன்டோனியா, அவற்றை எப்படிக் கடந்துவந்தார் என்பதையும் இந்தப் படம் பதிவுசெய்திருக்கும்.

The Zookeeper's Wife
The Zookeeper's Wife

அதேபோல, 'மேரி குயின் ஆஃப் ஸ்காட்ஸ்' போன்ற சில படங்களின் மூலமாக, அரசியலில் பலம் மிக்க பெண்களையும் அவர்கள் கடந்து வந்த பாதையையும் ஆவணப்படுத்தியிருக்கிறது ஹாலிவுட். இதுபோக, பிரபல பாப் பாடகி ப்ரிட்னி ஸ்பியர்ஸ், சமூக செயற்பாட்டாளர் மேட்லின் ஓஹேர் போன்றவர்களின் வாழ்க்கையையும் வரலாற்றுப் படமாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உண்மைச் சம்பவங்கள் சார்ந்த படங்கள் ஒருபுறம் இப்படி இருக்க, புனைவுகளும் பெண்ணியம் சார்ந்த படங்களும் இப்போது அதிகரித்துவிட்டன. கடந்த 2000-ம் ஆண்டின் ப்ளாக்பஸ்டரான `சார்லீஸ் ஏஞ்சல்ஸ்' படத்தின் ரீபூட் இந்த ஆண்டு வெளியானது. மூன்று பெண்கள் சேர்ந்து ஒரு தனியார் உளவு அமைப்புக்கு வேலைசெய்கிறார்கள். அவர், செய்யும் ஆக்‌ஷன் சாகசங்கள்தாம் இந்தப் படத்தின் சிறப்பம்சம்.

Charlie's Angels
Charlie's Angels

அந்த வகையில், மென் இன் ப்ளாக் சீரீஸும் தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. இரண்டு ஆண்கள் இணைந்து வேற்றுக்கிரகவாசிகளால் பூமிக்கு வரும் சிக்கல்களையெல்லாம் எதிர்கொள்வதுதான் எப்போதும் மென் இன் ப்ளாக் படங்களின் கதையாக இருந்துவந்தது. இப்போது, ஒரு ஆணுக்குப் பதிலாக பெண் கதாபாத்திரத்தைப் பொருத்திவிட்டார்கள். இந்த ஆண்டு வெளியான `எம்.ஐ.பி இன்டர்நேஷனல்' படத்தில், கிரிஸ் ஹெம்ஸ்வர்த் மற்றும் நடிகை டெஸ்ஸா தாம்ஸன் என ஆண் - பெண் காம்போ உளவாளிகளாக நடித்துள்ளனர்.

90-களில், `எம்.ஐ.பி' சீரிஸ் வெளியானபோது, வெள்ளையர்கள் மற்றும் கறுப்பர்களிடையே இருந்த அரசியல் மற்றும் முரண்பாடுகளைக் கருத்தில்கொண்டு, ஒரு வெள்ளை நடிகர் (டாமி லீ ஜோன்ஸ்) மற்றும் ஒரு கறுப்பின நடிகர் (வில் ஸ்மித்) என இருவரும் சேர்ந்து உலகைக் காப்பாற்றுவதாகத் திரைக்கதை அமைத்திருந்தார்கள். இப்போதும் அதே வெள்ளை (கிரிஸ்) மற்றும் கறுப்பு (டெஸ்ஸா) என நிற ஒற்றுமையைக் கடைபிடித்தது மட்டுமல்லாமல், ஆண் பெண் பாலின ஒற்றுமையையும் சேர்த்திருக்கிறார்கள்.

MIB International
MIB International

இந்த மாற்றத்துக்கெல்லாம் காரணமாகச் சொல்லப்படுவது இன்றைய சூழலில் பெண்களை மையப்படுத்தி சொல்லப்படும் கதைகளுக்கான சந்தைதான் என்பதை உணரலாம். சமீப காலங்களில், பெண்கள் சார்ந்த பல இயக்கங்கள் உலகெங்கும் உருவாக்கப்பட்டும், பரவலாக்கப்பட்டும் வருகின்றன. அதற்கான காரணமும், பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைதான். 80-களின் பிற்பகுதியில் தொடங்கி, 90-களின் முற்பகுதிவரை கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவான படங்கள் ஹாலிவுட்டில் வெளியாகின. அதேபோலத்தான், தற்போது பெண்களை உயர்த்திப்பேசும் படங்களும் வெளியாகி வருகின்றன என்று சொல்லலாம்.

`முடிக்க வேண்டிய காரியம் இன்னும் இருக்கு!' - மீண்டும் வருகிறாள் #BlackWidow #TeaserTrailer

உதாரணத்துக்கு, கடந்த மாதம் வெளியான `ஃப்ரோஸன் 2' படத்தின் கதையம்சம் டிஸ்னியின் பிற இளவரசிக் கதைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு வடிவத்தில்தான் இருந்தது. காதலிலும், தனிமையிலும் அதிக உணர்ச்சிவசப்படும் இளவரசிகளாகத்தான் டிஸ்னி தன் அனிமேஷன் படங்களில் காட்டிவந்தது. காதலனைச் சார்ந்தே இருப்பதும், தனக்கு வரும் சிக்கல்களுக்கெல்லாம் அவனால் மட்டுமே தீர்வுகாண முடியும் என்பதுபோல கதை சொல்லப்படும். ஆனால், `ஃப்ரோஸன்' படத்தொடரின் நாயகி எல்ஸா, தற்சார்புத் தன்மையுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் ஒரு கதாபாத்திரமாக இருப்பார். தன்னுடைய உடல்வலிமை மனவலிமை இரண்டையும் கொண்டு தன்னுடைய பிரச்னைகளைத் தானே எதிர்கொள்ளும் வல்லமை கொண்டவளாகவே இருப்பாள் எல்ஸா.

Frozen 2
Frozen 2

அந்த வரிசையில், `வொண்டர் வுமன்', `ப்ளாக் விடோ' மற்றும் `கேப்டன் மார்வெல்' போன்ற படங்களையும் வைக்கலாம். நீண்ட காலமாகவே இந்தக் கதாபாத்திரங்கள் எல்லாமே `சூப்பர்ஹீரோ' என்ற ஆண்பால் சொல்லாடலுக்குள் ஒரு துணைக் குழுவாகத்தான் இருந்தன. ஆனால், `வொண்டர் வுமன்' படம் திறந்துவிட்ட பாதைதான் சூப்பர்ஹீரோயின் படங்களை ஒரு தனி ஜானராக மாற்றியது. டிசி நிறுவனம் தயாரித்த அந்தப் படத்தின் உலகளாவிய வசூல், அதன் போட்டி நிறுவனமான மார்வெலையும் `கேப்டன் மார்வெல்' படத்தைத் தயாரிப்பதற்கான ஒரு காரணமாகும்.

`சுதந்திரப்பறவை எல்ஸா, சிங்கப்பெண் ஆன்னா..!' - எப்படியிருக்கிறது `ஃப்ரோஸன் 2'

`கேப்டன் மார்வெலு'ம் பெரும் வெற்றியடைந்ததை அடுத்து, டிசி `வொண்டர் வுமன் 1984', `பேர்டஸ் ஆஃப் ப்ரே' போன்ற படங்கள், மறுபக்கம் மார்வெல் `ப்ளாக் விடோ', `எட்டர்னல்ஸ்' போன்ற படங்கள் என சூப்பர் ஹீரோயின்கள் படத்தை வரிசைகட்டி தயாரித்துவருகின்றன. இந்த சூப்பர் ஹீரோயின் படங்கள் பெரும்பாலும் பெண்ணியம் பேசும் படங்களாகத்தான் உருவாக்கப்படுகின்றன. அதன் உச்சக்கட்டமாக `வொண்டர் வுமன்' கதாபாத்திரத்தை `ஃபெமினிஸ்ட் சிம்பல்' என்றே ஹாலிவுட் அழைக்கத் தொடங்கியது.

Captain Marvel
Captain Marvel

இத்தனை நேர்மறையான படங்கள் இருந்தாலும், சில எதிர்மறை சிந்தனையும் படமாக்கப்பட்டுவருகிறது. குறிப்பாக, பெண்ணியம் குறித்த அரைகுறை புரிதலோடு ஹாலிவுட் இங்கே பல படங்களை உருவாக்கிவருகிறது. ஏற்கெனவே, அடுத்த ஜேம்ஸ் பாண்டாக ஒரு பெண்ணை நியமிக்கவிருப்பதாக வெளியான செய்தி, பல ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்திவிட்டது. பெண்ணியத்தை சந்தைப்படுத்துதலின் ஒரு உச்சபட்ச நிலையாகத்தான் இதுவும் பார்க்கப்படுகிறது. அதேவேளை, பெண்ணியம் என்பது ஆண்கள்மீது அதிகாரம் செலுத்துவது என்னும் ஒரு மனோபாவம் ஹாலிவுட்டில் உருவாக்கிவிட்டது. சில மாதங்களுக்கு முன் வெளியான `ஆங்ரி பேர்ட்ஸ்' படத்தின் இரண்டாம் பாகத்துக்கு இது முற்றிலும் பொருந்தும்.

சுதந்திரமாக பெண்கள் யோசிக்கத் தொடங்கிவிட்டால், அது ஒட்டுமொத்த உலகத்துக்குமே ஆபத்தான நிலைக்குத் தள்ளிவிடும் என்பதுபோன்ற ஒரு கண்ணோட்டத்தில் `ஆங்ரி பேர்ட்ஸ் 2' படத்தின் வில்லி கதாபாத்திரத்தை வடிவமைத்திருப்பார்கள். இதை ஃபெமினிஸம் என்றெல்லாம் கொண்டாடியது அதன் படக்குழு.

Angry Birds 2
Angry Birds 2

இன்றைய நிலையில், பெண்ணியம் நல்ல சந்தைப் பொருளாகிவிட்டது என்பது ஒரு புறமிருக்கட்டும். இப்படிப்பட்ட சந்தைப்படுத்துதல் பல கருத்தியல்களுக்கு ஏற்கெனவே நேர்ந்த நிலைதான். கார்ப்பரேட்மயப்பட்டிருக்கும் திரைத்துறையில், அது தவிர்க்க முடியாததும்கூட ஒரு காரணம்தான். ஆனால், அந்தக் கருத்தியலை எந்த கண்ணோட்டத்தில் திரைக்கதைக்குள் கையாள்கிறார்கள் என்பதுதானே முக்கியம். ஒரு படைப்பின் கலைநேர்மை அதில்தானே பொதிந்துகிடக்கிறது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு