Published:Updated:

`சுதந்திரப்பறவை எல்ஸா, சிங்கப்பெண் ஆன்னா..!' - எப்படியிருக்கிறது `ஃப்ரோஸன் 2'

`வின்டர் இஸ் கம்மிங்' என சீரிஸ் ரசிகர்கள் கூறும்போது, ஞாபங்கள் முழுவதும் தன்னால் `கேம் ஆஃப் த்ரோன்ஸ்'ஸின் பக்கம் திரும்பிவிடும். ஆனால், சினிமா ரசிகர்களுக்கு குளிர்காலம் என்றால் அது, `ஃப்ரோஸன்' திரைப்படம்தான்.

பனிப்பொழிவு, பேசும் ஸ்னோமேன், கண்களை உறைய வைக்கும் கிராஃபிக்ஸ் எனக் குழந்தைகளைக் கவர பல சிறப்பம்சங்கள் இருந்தாலும் அரசமைப்பு, தன்னிலையறிதல், சிக்கலான வேலைகளில் முடிவெடுத்தல் எனப் பெரியவர்களின் மனம் கவரும் திறன் சார்ந்த சில சிறப்பம்சங்களும் `ஃப்ரோஸன்' படத்தொடரில் இடம்பெற்றிருக்கும்.

Frozen II
Frozen II

தற்போது வெளியாகியிருக்கும் `ஃப்ரோஸன் 2', முதல் பாகத்தை மிஞ்சும் அளவிற்கு வித்தியாசமான கரு, மையச் சிக்கல் என வேறொரு தனி உலகத்தில் கதை நிகழ்கிறது. முதல் பாகத்தையும் ஓலாஃப் கதாபாத்திரத்தின் தனிக்கதை கொண்ட படத்தையும் பார்த்தவர்களுக்கு, இப்படம் நல்ல முடிவுரையாக இருக்குமென்றே சொல்லலாம். இதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட கதாபாத்திரங்கள், முடிவில்லா சில சிக்கல்கள், பதில் சொல்லப்படாத கேள்விகள் போன்ற அனைத்து விஷயங்களும் `ஃப்ரோஸன் 2'வில் விளக்கப்பட்டிருக்கின்றன.

Frozen II
Frozen II

எல்ஸாவுக்கு ஐஸ் ஆற்றல்களும் அற்புத மந்திர சக்தியும் எப்படிக் கிடைத்தன... அவள் தங்கை ஆன்னாவுக்கு ஏன் எந்த மந்திர சக்தியும் இல்லை... அவர்களுடைய தாயும் தந்தையும் எப்படி இறந்தனர்... அவர்களுடைய வாழ்வின் நோக்கம் என்ன? என முதல் பாகத்தில் போடப்பட்டிருந்த பல முடிச்சுகளை இப்படத்தில் அவிழ்த்திருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டிஸ்னியின் இளவரசிக் கதைகளில் இடம்பெறும் நாயகிகள் அனைவரும் `சந்தோஷ் சுப்ரமணியம்' ஹாசினி டெம்ப்ளேட்டில்தான் வடிவமைக்கப்பட்டிருப்பார்கள். ஆனால், இப்படத்தின் நாயகியான எல்ஸா, யாரையும் சார்ந்திராத சுதந்திரப் பறவை. தன் வாழ்க்கை, தன் தங்கையின் வாழ்க்கை, இவ்விருவரையும் சார்ந்திருக்கும் ஓலாஃப், கிறிஸ்டாஃப், ஸ்வென் என இவர்கள்தாம் இவளின் சரணாலயம். இப்படித்தான் எல்ஸாவின் கதாபாத்திரத்தை உருவாக்கியிருப்பார்கள்.

Frozen II
Frozen II

முதல் பாகத்தில், தன் சக்திகளை வைத்து என்ன செய்வது, தன் சக்தியால் சுற்றியிருப்பவர்களுக்கு ஆபத்து நேருமோ என்கிற பயத்தில் அவர்களை விட்டு விலகி வாழ்வார், எல்ஸா. தனக்கிருக்கும் சக்திகளைப் பக்குவப்படுத்தி, பொறுப்பாக இப்பாகத்தில் செயல்படுவாள். இதனால் சுவாரஸ்யங்களுக்கும் பஞ்சமேயிருக்காது.

எல்ஸாவின் தங்கையான ஆன்னாவும் இப்படத்தில் சிறிய பரிமாண வளர்ச்சியை அடைந்திருப்பாள். தன் ஊரான ஆரிண்டேலையும், நார்த்தல்ட்ரா பூர்வக்குடியின் வனப்பகுதியையும் ஒரே நேரத்தில் காப்பாற்றும் அளவிற்கு மனவலிமைகொண்ட சிங்கப்பெண்ணாகச் செயல்படுவாள்.

Frozen II
Frozen II

படத்தில், ஓலாஃப் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும் விதமே அத்தனை ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கும். அதிலும், முதல் பாகத்தின் கதையைச் சொல்லும் காட்சியிலும் க்ளைமாக்ஸிலும் தன் தியாகத்தைத் தாண்டி ஆன்னாவை ஆசுவாசப்படுத்தும் காட்சியிலும் சென்டிமென்டைப் பிழிந்திருக்கிறார். ஓலாஃப்புக்கு வாய்ஸ் கொடுத்த ஜோஷ் காட். கிறிஸ்டாஃப் - ஸ்வென் கூட்டணி, அவர்களுகே உண்டான சேட்டைகளைப் படம் முழுக்க செய்திருக்கிறார்கள்.

இயற்கை, மனிதனுக்கு மட்டுமே இத்தனை வளங்களைக் கொடுக்கவில்லை. உலகத்திலிருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும்தான் பகிர்ந்தளித்திருக்கிறது. ஆனால், இந்தச் சமநிலை மீது மனிதன் தன் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் நோக்கத்தில் பேராசை, போர்க் குணம், அதிகாரம் போன்ற வன்மத்தையும் தன்னுள் வளர்த்துவிட்டான். அவ்வன்மத்தையெல்லாம் இயற்கைதானே முன்வந்து களைய வைக்கிறது. நிலம், நீர், நெருப்பு, காற்று என்ற நான்கு அடிப்படைகளுக்கு ஒரு உயிரனம் பிரதிநிதியாக இருக்கிறது. ஐந்தாவதாக இருக்கும் பூதம் எது... அதன் பிரதிநிதி யார் என்பதை விளக்கும் இறுதிக்காட்சி, சமூகத்துக்கு உடனடியாகத் தேவைப்படும் விவாதம். அன்பு மட்டுமே இங்கு இயற்கையின் ஆதாரம். அதையும் விட்டுவிட்டால், அழிவே மிச்சமென்ற தத்துவத்தை அழுத்தமாகச் சொல்கிறது, `ஃப்ரோஸன் 2'.

குழந்தைகளை மட்டுமே குறிவைத்து எடுக்கப்பட்ட சாதாரண கிராஃபிக்ஸ் படமாக இல்லாமல், சமூக நலமும் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. `அதற்குள் படம் முடிந்துவிட்டதே' என்று ரசிகர்கள் ஏங்கிக்கொண்டிருக்க, எண்டு கிரெட்டிஸில் அடுத்த பாகத்துக்கான லீடோடு முடிந்தது சிறப்பு.

சோஷியல் மெசேஜுடன்கூடிய இந்த விஷுவல் ட்ரீட்டுக்கு கட்டாயம் குழந்தைகளை அழைத்துச்செல்லலாம்.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு