லெஜண்டரி பிக்சர்ஸ், வார்னர் பிரதர்ஸ் மற்றும் டோஹோ தயாரிப்பு நிறுவனங்கள் உருவாக்கியிருக்கும் 'மான்ஸ்டர்வெர்ஸ்' படத்தொடரின் 4-வது படம் இந்த 'காட்ஸில்லா vs காங்'. தனித்தனி படங்களில் நாம் கண்டு ரசித்த இரண்டு டைட்டன்கள் முதன்முதலாக ஓரே படத்தில்... அதுவும் எதிரெதிர் அணியாக மோதிக் கொள்கின்றன எனும்போது எதிர்பார்ப்பு எகிறத்தானே செய்யும். அதை இந்தப் படம் பூர்த்தி செய்கிறதா?

பேய்க்கும் பூதத்துக்கும் சண்டை, அதை ஊரே வேடிக்கை பார்க்குது என்பதுதான் ஒன்லைன். ஆனால், அதற்குள்ளேயே காட்ஸில்லா ஏன் மனிதர்களைக் காரணமில்லாமல் திடீரென தாக்குகிறது, காங்கை வைத்து இப்படியான டைட்டன்களின் வாழ்விடத்தைக் கண்டறிந்து இந்த மனிதர்கள் என்ன செய்யப்போகிறார்கள், போன்ற கேள்விகளுக்கு எதிர்பாராத சில பல ட்விஸ்ட்களை தூவிவிட்டு சூடான ஒரு ஆக்ஷன் மசாலாவை பிரமாண்ட VFX காட்சிகள் சேர்த்து நமக்கு விருந்தாகப் பரிமாறி இருக்கிறார்கள். இடையிடையே இல்லுமினாட்டி ரக சீண்டல்கள், ஹாலோ எர்த் என நம்பமுடியாத சயின்ஸ் ஃபிக்ஷன் கலாட்டா எனப் பலவற்றை வெட்டி ஒட்டியிருக்கிறார்கள்.
இதற்கு முன்னர் வெளியான காட்ஸில்லா, காங்: ஸகல் ஐலேண்ட், காட்ஸில்லா: கிங் ஆஃப் தி மான்ஸ்டர்ஸ் படங்களுடன் வலுவான கதைத்தொடர்புடையதாக விரியும் இந்தப் படத்தில் இரண்டு மான்ஸ்டர்கள் இருந்தாலும் நம் மனம் என்னமோ காங் எனும் அந்த ராட்சச குரங்கின் பக்கமே நிற்கிறது. காட்ஸில்லாவும், காங்கும் மோதிக்கொள்ளும் ஒவ்வொரு காட்சியும் நூறு 'கேஜிஎஃப்'களுக்குச் சமம். முதல் சண்டைக்காகச் சிறிது நேரம் நம்மைக் காக்க வைத்தாலும், நடுக்கடலில் இரண்டு ராட்சச உயிரினங்களுக்கு இடையே நிகழும் அந்த யுத்தம், தொழில்நுட்பத்தின் உச்சம்!

காங்கை அண்ணாந்து பார்க்கவே அரைநாள் வேண்டும் என்ற நிலையில், அப்படிப்பட்ட ஓர் உயிரினத்தை அப்பாவி என நம்பும் அந்தப் பழங்குடியின குட்டிப்பெண் க்யூட்! இந்தக் குட்டிப்பெண்ணை வளர்க்கும் கார்டியன் பாத்திரத்தில் முக்கியமான பணி நடிகை ரெபெக்கா ஹாலுக்கு. இங்கே காங் டீமில் குட்டிப்பெண் என்றால், காட்ஸில்லா பின்னால் சுற்றும் பாத்திரத்தில் 'ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ்', 'எனோலா ஹோம்ஸ்' புகழ் மில்லி பாபி பிரவுன். இருவருமே சிறப்பாக நடித்திருந்தாலும், அப்ளாஸ் அள்ளுவது காங் கிட்தான். அந்தப் பாப்பாவும், காங்கும் சைகையில் பேசிக்கொள்ள ஆர்ப்பரிக்கிறது தியேட்டர். 'ரைஸ் ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்' டைப்பில் 'ஹோம்' என காங் கர்ஜிக்க, வீதிக்கு வரும் 'பாகுபலி'யை வரவேற்கும் கூட்டமாய் மாறிவிடுகிறது தியேட்டர்.
படம் இரண்டு மணிநேரம்தான். ஆனால், இதற்காக வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் விட்ட டீஸர்களும் ட்ரெய்லர்களும் எப்படியும் மூன்று மணிநேரத்தைத் தாண்டும்போல! சரி, இதற்கு மேல் படத்தில் என்ன இருக்கப்போகிறது என நினைத்துப் போனால், சின்ன சர்ப்ரைஸ், ஒரு பெரிய ட்விஸ்ட், ஜெட் வேகத் திரைக்கதை என ஸ்கோர் செய்திருக்கிறார்கள். முதல் பாதியில் காட்ஸில்லாவின் கை ஓங்கியிருக்க, 'நான் செத்த மாதிரி நடிச்சேன்' டைப் ஸ்பூஃப் எல்லாம் செய்து கிச்சு கிச்சு மூட்டுகிறது காங்.

அதிலும் மார்வெல்லின் தோர் போலக் காங்கின் அந்த ஆயுதமும் அதனுடன் நடக்கும் யுத்தமும் நம் பல்ஸை அதிகப்படுத்தும் வகையில் கொரியோகிராப் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கு மேலும் வலுசேர்த்திருக்கிறது டாம் ஹொல்கன்பர்கின் பின்னணி இசை! 'டிரான்ஸ்ஃபார்மர்ஸ்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஃபாலன்', 'வேர்ல்டு வார் ஸி' போன்ற பிரமாண்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பென் செரிஸின் கேமரா இரண்டு பெரிய விலங்குகளுக்கு நம்பும்படி உயிர் கொடுக்க உதவியிருக்கிறது. குறிப்பாகப் பூமியின் உள்ளே நடப்பதாய் விரியும் காட்சிகளில் ஒளிப்பதிவு அத்தனை அழகு!
படத்தில் பிரச்னைகளே இல்லையா என்றால், அதெல்லாம் நிறையவே இருக்கிறது. லாஜிக் ஓட்டைகள் காட்ஸில்லா சைஸில் நம்மை வரவேற்கின்றன. பாதாள உலகில் எப்படிச் சுவாசிக்கிறார்கள் முதல், மண்டை ஓட்டுக்கு இம்புட்டு பவரா என்பதுவரை அத்தனை இடங்களில் போங்கு காட்டியிருக்கிறது கதை. அதிலும் அன்டார்டிகாவில் இருக்கும் துளை வழியே பூமிக்குள் புகுந்தவர்களை, ஹாங்காங்கில் காட்ஸில்லா தோண்டி எடுப்பதெல்லாம்... 'அங்க பாருங்க ப்ராங்க் பண்ணோம்' எனச் சொல்வார்களோ என யோசிக்க வைத்தது.

அதேபோல டெம்ப்ளேட் கதாபாத்திரங்கள் படத்தின் முக்கிய மைனஸ். கொஞ்சம் காமெடி வேண்டும் என்றால் உடல் பருமனான கதாபாத்திரம் ஒன்றைத் திரைக்கதையில் திணித்துவிடுகிறார்கள். திருந்துங்க சாரே! நிறையக் கதாபாத்திரங்கள் என்பதால், யாருடைய பாத்திரப்படைப்புக்கும் பெரிதாக மெனக்கெட்டதாகத் தெரியவில்லை. காங் மற்றும் சிறுமியின் அன்பு மட்டுமே நம் நெஞ்சைத் தொடும் ஒன்றாக இருக்கிறது. ஆனால், இதையெல்லாம் கிராஃபிக்ஸ் முலாம் பூசி நம்மை மெய் மறக்க வைக்கிறார்கள்.
இந்த ஆண்டு தியேட்டர்களுக்கான ஆக்ஸிஜன் சிலிண்டராக இருந்த படம் 'மாஸ்டர்'தான். அதன் பின்னர், ஒரு படம், அதுவும் ஹாலிவுட் படமான காட்ஸில்லா வெர்சஸ் காங்தான் ஒட்டுமொத்தமாக சுட்டீஸுடன் மக்களைத் திரைக்கு அழைத்துவரவிருக்கிறது. அதனால்தான் இந்த காட்ஸில்லா வெர்சஸ் காங் சண்டையில் ஜெயித்தது என்னமோ சினிமாதான் எனத் தயங்காமல் சொல்லலாம். கட்டாயம் பெரிய திரையில் பார்க்க வேண்டிய படம் இது. டோன்ட் மிஸ் திஸ்!