மார்வெல் மற்றும் டிசி காமிக்ஸ் சூப்பர்ஹீரோ படங்களுக்கு எனத் தனி மார்க்கெட் உண்டு. மார்வெல் காமெடி, ஆக்ஷன் என கமெர்ஷியல் ரூட் பிடித்தால். டிசி சற்றே டார்க்கான, ஆழமான கதையம்சங்கள் கொண்ட படங்கள் பக்கம் ஒதுங்கும்.
டிசி திரைப்படங்களில் சூப்பர்மேனாக நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கெனத் தனியிடம் பிடித்தவர் ஹென்றி கேவில். ஜாக் ஸ்னைடர் இயக்கத்தில் 'மேன் ஆஃப் ஸ்டீல்' படத்தில் சூப்பர்மேனாக தடம் பதித்தவர், அதன் பின்னர், 'Batman vs Superman: Dawn of Justice', 'Justice League' உள்ளிட்ட படங்களில் சூப்பர்மேனாகத் தோன்றினார். பின்னர் ஸ்னைடருக்கும் டிசி படங்களைத் தயாரிக்கும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட, ஹென்றி கேவில் இனி சூப்பர்மேனாக நடிக்கமாட்டார் என்று தகவல்கள் வெளியாகின.

அதன் பின்னர், சமீபத்தில் டிவைன் ஜான்சன் (தி ராக்) நடிப்பில் வெளியான 'பிளாக் ஆடம்' படத்தில் ஹென்றி கேவில் மீண்டும் சூப்பர்மேன் அவதாரத்தில் ஒரு காட்சியில் தோன்றினார். எனவே அவர் அடுத்தடுத்த டிசி திரைப்படங்களில் சூப்பர்மேனாக நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் 'நான் இனி சூப்பர்மேனாக நடிக்கப்போவதில்லை' என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஹென்றி.
இது பற்றி அவர், "நான், ஜேம்ஸ் கன் மற்றும் பீட்டர் சஃப்ரான் ஆகியோரை சந்தித்துப் பேசினேன். நான் இனி சூப்பர்மேனாக நடிக்கப்போவதில்லை. இது அனைவருக்கும் வருத்தமான செய்தி என்று நான் அறிவேன். நான் சூப்பர்மேன் உடை அணியும் காலம் முடிந்துவிட்டது. இது மிகவும் கடினமான முடிவென்று நான் அறிவேன். ஆனால் அதுதானே வாழ்க்கை. சூப்பர் மேன் எப்போதும் நம்முடன்தான் இருப்பார். இதுவரை உங்கள் அனைவருடனும் பயணித்ததில் மகிழ்ச்சி" என்று பதிவிட்டுள்ளார்.
தற்போது டிசி யுனிவர்ஸ் (DCEU) படங்களை மேற்பார்வையிடும் ஜேம்ஸ் கன் மற்ற சூப்பர்ஹீரோக்களின் கதைகளில் கவனம் செலுத்தவிருப்பதாகத் தெரிகிறது. இனி வேறு யாரேனும் சூப்பர்மேனாக நடிப்பார்களா இல்லை அந்தக் கதாபாத்திரத்தைத் தவிர்த்துவிட்டு DCEU கட்டமைக்கப்படுமா என்பது குறித்து தகவல்கள் எதுவுமில்லை. எது எப்படியோ, இந்தச் செய்தி டிசி ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.