Published:Updated:

'ஹோம் அலோன்' படங்களை ரீபூட் செய்யும் டிஸ்னி - கதறும் 90'ஸ் கிட்ஸ்!

சந்தோஷ் மாதேவன்

'எங்கள் காலத்துக் கிளாசிக் அந்தப் படம். தயவு செய்து அதைச் சிதைத்துவிடாதீர்கள்' எனப் பல 90'ஸ் கிட்ஸ் சமூக வலைதளங்களில் கருத்திட, 'ஹோம் அலோன்' படத் தொடரின் முதல் இரண்டு பாகங்களில் நடித்த மெக்காலே கல்க்கின், அதை வழிமொழியும் விதத்தில் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

McCaulay Culkin
McCaulay Culkin

90'ஸ் கிட்ஸுக்குப் பெரும்பாலும் தங்கள் சிறுவயதில் இருந்த நிறைவேறாத கனவு தங்கள் வீட்டுக்கு ஒரு திருடன் வரவேண்டும், அந்தத் திருடனை தங்கள் தந்திரப் பொறியால் சிறைபிடித்து காவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இப்படிப்பட்ட விபரீதமான ஆசை வர ஒரே காரணம், 'ஹோம் அலோன்' என்கிற ஒற்றைப் படம். இப்போது அந்த வரிசை படங்களை ரீபூட் செய்யப்போகிறது டிஸ்னி நிறுவனம்.

A still from `Home Alone'
A still from `Home Alone'

தங்களுடைய ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ல் இந்த ரீபூட் செய்யப்பட்ட 'ஹோம் அலோன்' தொடர் வெளியாகும் என்று கடந்த செவ்வாய் அன்று அறிவித்தார், டிஸ்னியின் தலைமைச் செயல் அதிகாரி பாப் ஐகர். அதோடு சேர்த்து 'நைட் அட் தி மியூஸியம்', 'சீப்பர் பை தி டஜன்', 'டைரி ஆஃப் எ விம்பி கிட்' போன்ற படங்களை ரீபூட் செய்து வெளியிடவிருக்கிறது டிஸ்னி. '21ஸ்ட் செஞ்சுரி ஃபாக்ஸ்' நிறுவனத்தின் சொந்தப் படங்களான இவற்றை, அந்த நிறுவனத்தை அண்மையில் வாங்கிய டிஸ்னி தயாரிக்கவிருப்பது, பல சினிமா ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

'எங்கள் காலத்துக் கிளாசிக் அந்தப் படம். தயவு செய்து அதைச் சிதைத்துவிடாதீர்கள்' எனப் பல 90'ஸ் கிட்ஸ் சமூக வலைதளங்களில் கருத்திட, ஹோம் அலோன் படத் தொடரின் முதல் இரண்டு பாகங்களில் நடித்த மெக்காலே கல்க்கினும் அதை வழிமொழியும் விதத்தில் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அரைகுறையாக ஆடை அணிந்தபடி, தன் வீட்டு சோஃபாவில் தான் அமர்ந்திருக்கும் ஒரு படத்தைக் காட்டி, ஹோம் அலோனின் ரீபூட் இப்படித்தான் இருக்கப்போகிறது என ஒரு கேப்ஷனும் கொடுத்திருந்தார்.