Published:Updated:

ஹாலிவுட் நடிகருக்கு மேடையில் கத்திக்குத்து! - சீனாவில் பரபரப்பு

சீனாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின்போது ஹாங்காங்கைச் சேர்ந்த பிரபல நடிகர் சிமோன் யாம்மை, மேடையில் வைத்து கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Simon Yam
Simon Yam ( AP )

சீனாவின் தெற்குப் பகுதி மாகாணமான குவாங்டாங்கில் (Guangdong) உள்ள ஜோங்ஷான் (Zhongshan) கடை திறப்பு விழா ஒன்றில் ஹாங்காங்கைச் சேர்ந்த பிரபல நடிகர் சிமோன் யாம் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியின்போது மேடையில் அவர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கறுப்புநிற உடை அணிந்த நபர் ஒருவர் மேடையை நோக்கிச் சென்று, தனது பையில் இருந்த கத்தியால் திடீரென சிமோனைக் குத்தத் தொடங்கியிருக்கிறார். இதில், கை மற்றும் வயிறு ஆகிய பகுதிகளில் அவருக்குக் காயம் ஏற்பட்டிருக்கிறது.

Simon Yam
Simon Yam
AP

இதையடுத்து சுதாரித்துக்கொண்ட பாதுகாவலர்கள், அந்த நபரை மடக்கிப் பிடித்திருக்கிறார்கள். இதுகுறித்து சௌத் மார்னிங் போஸ்ட் பத்திரிகையிடம் பேசிய சிமோன் யாமின் மேலாளர் லெஸ்டர் மோ ஜி மான், ``அவருக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது முதற்கட்ட சோதனையில் தெரியவந்திருக்கிறது.

அதனால், அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால், அவருக்கு அறுவைசிகிச்சை செய்ய வேண்டுமா இல்லையா என்பது குறித்து மருத்துவர்கள் விரைவில் முடிவெடுக்க இருக்கிறார்கள். சிகிச்சையின்போது அவர் தெளிவான நிலையிலேயே இருந்தார்'' என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள சீன போலீஸார், அந்த நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், அவர் யார் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

Simon Yam
Simon Yam
AP

64 வயதான சிமோன், சீனாவில் விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் வெற்றிபெற்ற பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரமேற்று நடித்தவர். 2003-ம் ஆண்டு வெளியான லாரா கிராப்ட்: டாம்ப் ரைடர் - தி கிராடிள் ஆஃப் லைஃப் (Lara Croft: Tomb Raider - The Cradle of Life) படத்தில் கேங்ஸ்டராக நடித்திருந்தார்.