Published:Updated:

"பொய் சொல்லி ஷூட்டிங், அக்ரீமென்ட்டில் கெடுபிடி.. ஸ்பாய்லர்களைத் தடுக்க மார்வெல் படும் பாடு!''

Avengers
Avengers ( Marvel )

ஒரு படத்தை எடுத்து அதன் அடுத்த பாகத்தைப் பார்க்கத் தூண்ட பலவகை யுக்திகளை உலகம் முழுக்க இயக்குநர்கள் கையாள்கிறார்கள். அதுவே அந்தப் படம் வெளியாவதற்கு முன்போ, பிறகோ அது குறித்த ஸ்பாயிலர்கள் வெளியிடாமல் தடுக்கவும் பல நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.

`கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்?' - `பாகுபலி' முதல் பாகத்தின் இறுதியில் கேட்கப்பட்ட இந்தக் கேள்விக்கு, இரண்டாம் பாகத்தில் சொல்லப்பட்ட பதில் பெரிய சர்ப்ரைஸாக இல்லையென்றாலும், இரண்டாம் பாகம் வெளியாகும்வரை இந்தக் கேள்வி ரசிகர்களிடையே ஏற்படுத்திய ஆர்வம் அபரிமிதமானது. இதை வைத்து, இரண்டாம் பாகம் குறித்துப் பல ரசிகர்கள் உருவாக்கிய கற்பனை தியரிகள் தொடங்கி, இதுதான் காரணம் என அந்தப் படத்தைக் கலாய்த்து வெளியான மீம்ஸ் வரை... எல்லாமே நேரடியாகவோ, மறைமுகமாகவோ அந்தப் படத்துக்கான மார்க்கெட்டிங்காகவே இருந்தன. இப்படி ஒரு படத்தை எடுத்து அதன் அடுத்த பாகத்தைப் பார்க்கத் தூண்ட பலவகை யுக்திகளை உலகம் முழுக்க இயக்குநர்கள் கையாள்கிறார்கள். அதுவே அந்தப் படம் வெளியாவதற்கு முன்போ, பிறகோ அது குறித்த ஸ்பாய்லர்கள் வெளியிடாமல் தடுக்கவும் பல நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.

பாகுபலி
பாகுபலி

`பாகுபலி'யையே உதாரணமாக எடுத்துக்கொள்வோம். முதல் பாகம் வெளியான நாள் முதல், இரண்டாம் பாகம் வெளியான நாள் வரை படத்தின் இயக்குர் ராஜமெளலி, கட்டப்பாவாக நடித்த சத்யராஜ், மற்ற நடிகர்கள் என எல்லோரிடமும் மீண்டும் மீண்டும் பல நேர்காணல்களில் கேட்கப்பட்ட கேள்வி, `கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்?' என்பதுதான். ஆனால், அதைச் சொல்லி படத்தில் தொடர்புடைய யாரும் எந்த ஸ்பாய்லரையும் வெளியிடக் கூடாது என்று கட்டளையிட்டது, படக்குழு. அவர்களும் அதையே கடைப்பிடித்தனர். இரண்டு பாகங்கள் கொண்ட `பாகுபலி'க்கே இவ்வளவு மெனக்கெடவேண்டி இருக்கிறதென்றால், உலகம் முழுக்க வெளியாகும் 22 பாகங்கள் கொண்ட `மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் (எம்.சி.யூ)' படத்தொடருக்கு என்னவெல்லாம் செய்திருப்பார்கள்?!

எம்.சி.யூவுக்கு `அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' 22-வது படம். `அயர்ன் மேன்', `கேப்டன் அமெரிக்கா', `தார்', 'ஸ்பைடர்மேன்', `கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி' எனப் பல சூப்பர் ஹீரோக்களை உள்ளடக்கியது அந்த யூனிவர்ஸ். இந்த சூப்பர் ஹீரோ படங்களின் மறைமுகத் தொடர்ச்சியாகவும், `அவெஞ்சர்ஸ்: இனிஃபினிட்டி வார்' படத்தின் நேரடித் தொடர்ச்சியாகவும் இருந்தது, 'எண்ட்கேம்' திரைப்படம்.

Thor
Thor
Marvel

`இன்ஃபினிட்டி வார்' படத்தின் இறுதியில், எம்.சியூவின் சூப்பர் வில்லன் தானோஸ் இந்தப் பேரண்டத்தின் உயிரினங்களில் பாதியை அழித்துவிட்டான். அதில், ஸ்பைடர்மேன், டாக்டர் ஸ்ட்ரேஞ், ப்ளாக் பேந்தர் உள்ளிட்ட சூப்பர் ஹீரோக்களும் அடக்கம். இறந்த மக்களையும், சூப்பர் ஹீரோக்களையும், எஞ்சியுள்ள ஹீரோக்கள், தானோஸுடன் சண்டையிட்டு மீண்டும் எப்படி உயிர்த்தெழச் செய்யப்போகின்றனர் என்பதற்கான விடைதான், `எண்ட்கேம்' படம்.

இரண்டு படங்களுக்கும் இடையே சரியாக ஓராண்டு இடைவெளி இருந்ததால், ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதித்துவிட்டனர் `அவெஞ்சர்ஸ்' படக்குழுவினர். அதனால், எப்படி இறந்தவர்கள் உயிருடன் வரப்போகின்றனர் என்பதை பல யூ-டியூபர்களும், திரைப்பட விமர்சகர்களும் கற்பனை செய்து தங்களின் தியரிகளை வெளியிடத் தொடங்கினர். படம் வெளியான பின் அதில் சில தியரிகள் உண்மையாகவும் இருந்தன. இப்படித் தங்களின் தியரிகளை எல்லாம் பல நேர்காணல்களில் படத்தின் இயக்குநர்கள் அந்தோணி ரூஸோ, ஜோ ரூஸோவிடம் கேள்வியாகவே கேட்டனர். அப்போதெல்லாம் சாமர்த்தியமாகக் கையாண்டு, படத்தைப் பற்றிய உண்மைகள் எதையும் சொல்லாது பதில் கூறினர். 

SpiderMan
SpiderMan
Marvel

இது இப்படி இருக்க, படத்தில் நடித்த சில நடிகர்கள் தங்களையும் அறியாமல் ஸ்பாய்லர்களை உளறக்கூடாது என்பதால், சில விசித்திரமான வழக்கங்களையும் உருவாக்கியிருந்தனர். ஏனென்றால், `இன்ஃபினிட்டி வார்' படம் வெளியாகும் முன்பு எடுக்கப்பட்ட சில பேட்டிகளில், படத்தின் நடிகர்களில் சிலர், குறிப்பாக `ஹல்க்'காக நடித்த மார்க் ரப்பல்லோ, `ஸ்பைடர்மேனா'க நடித்த டாம் ஹாலண்டு, பல ஸ்பாய்லர்களை உளறிக்கொட்டினர். அவரைக் கேலி செய்ய படத்தின் ஒரு ப்ரோமோ வீடியோவில் அவர் வாயில் டேப் போட்டு உட்கார வைத்தனர்.

இந்த முறை அப்படி எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதால், ஷூட்டிங்கின்போதே அவர்களைக் குழப்பிவிட்டனர். குறிப்பாக `எண்ட்கேம்' படத்தின் க்ளைமாக்ஸ் எப்படி இருக்கும் என மார்க்குக்குத் தெரியக் கூடாது என முடிவெடுத்துவிட்டு, அவருக்காவே ஐந்து க்ளைமாக்ஸ் காட்சிகளைப் படமெடுத்துள்ளனர். அதில் எது படத்தில் வரும் என ப்ரீமியர் ஷோ பார்க்கும்வரை அவருக்கும் தெரியாதாம். நம்ம ஊர் படங்களைப்போல் இல்லாமல், முழுக்க முழுக்க க்ரீன்மேட்டில் எடுக்கப்பட்ட படமாக இருந்ததால், மார்க் க்ளைமாக்ஸ் காட்சிகளில் நடித்தபோது வேறு எந்த நடிகரும் அவருடன் இல்லையாம்.

ஹல்க்
ஹல்க்
Marvel

அதேபோல, டாம் ஹாலண்டிடம் க்ளைமாக்ஸ் என்னவென்றே சொல்லவில்லையாம். டோனி ஸ்டார்க் கதாபாத்திரம் இறந்து, அவரின் இறுதிச்சடங்கு நடக்கும் காட்சி. அதை ஒரு திருமண வரவேற்புக் காட்சி என அவரிடம் பொய் சொல்லிப் படமாக்கியுள்ளனர். அது மட்டுமல்லாது, டாமுக்குக் கடைசிவரை முழுப் படத்தின் கதை என்னவென்றே தெரியாதாம். ஷூட்டிங் தேதி, நேரம், இரண்டையும் அவரிடம் சொல்லிவிடுவார்களாம். அவர் வந்து அவருடைய வசனத்தை மட்டும் பேசி நடித்துக்கொடுக்க வேண்டுமாம்.

இந்தக் கட்டுப்பாடு டாமுக்கு மட்டுமல்ல. படத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்களுக்கும் சேர்த்தேதான். படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தலைமைத் தொழில்நுட்பக் கலைஞர்கள் தவிர, `எண்ட்கேம்' படத்தின் முழு ஸ்கிரிப்டையும் அறிந்த ஒரே நடிகர் `அயர்ன்மேனா'க நடித்த டோனி ஸ்டார்க் மட்டும்தான். மற்ற எல்லா நடிகர்களுக்கும் அவர்கள் வரும் காட்சிகளின் ஸ்கிரிப்ட் மட்டும்தான் கொடுக்கப்பட்டதாம்.

அங்கு தொடங்கி, படத்தின் கடைநிலைத் தயாரிப்பு வரை... இந்தக் கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. எந்த அளவுக்கு என்றால், படத்தின் மற்ற மொழிகளுக்கான டப்பிங்கின்போது ஒரு கேரக்டருக்கு ஒருவர் குரல் கொடுக்கிறார் என்றால், அவர் வரும் காட்சிகளில் அவர் முகம் மட்டும் ஒரு வட்டத்துக்குள் தெரியும்படி திரை இருக்கும். திரையின் பிற பகுதிகள் மறைக்கப்பட்டிருக்கும். அதனால், அந்தந்த நடிகரின் உதட்டசைவுக்கு ஏற்றாற்போல் டப்பிங் கலைஞர்கள் தங்களின் வசனத்தைப் பேசவேண்டும்.

Avengers
Avengers
Marvel

`எண்ட்கேம்' படத்துக்கு இரண்டு முன்னோட்டங்களும், பல ஸ்னீக் பீக்குகளும் வெளியிடப்பட்டன. அதிலும், படத்தில் இடம்பெறாத காட்சிகளை நிரப்பி ரசிகர்களைக் குழப்பியிருந்தனர், படக்குழுவினர். `ஹல்க்' கதாபாத்திரத்தின் மாற்றம், தன் சுத்தியலை மீண்டும் பெற்ற `தோர்', ஹேர் ஸ்டைல் மாற்றப்பட்ட `கேப்டன் மார்வெல்', தொப்பையுடன் இருக்கும் `தோர்', என எதுவும் வெளியாகாத வண்ணம் அவை உருவாக்கப்பட்டன.

படம் ரிலீஸாகும் வரை இப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் என்றால், ரிலீஸான பிறகு இரண்டு நிலையாக ஸ்பாய்லர் தடையை (Spoiler-Ban/Embargo) நடைமுறைப்படுத்தியிருந்தது, மார்வெல் நிறுவனம். முதல் நிலையில், படத்தில் நடித்த யாரும் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட எந்த செல்ஃபி வீடியோக்களையும் படம் வெளியாகி அடுத்த 10 நாள்களுக்கு சமூக வலைதளங்களில் வெளியிடக் கூடாது. இரண்டாம் நிலையில், படத்தின் காட்சிகள் குறித்தோ, தங்கள் வசனங்கள் குறித்தோ எந்த நடிகரும் எந்தப் பதிவையும் படம் வெளியாகி 15 நாள்களுக்கு வெளியிடக் கூடாது. இதை அவர்கள் ஒப்பந்தத்திலேயே இணைத்திருந்தனர். நடிகர்களுக்கு இப்படி என்றால், `தானோஸ் உங்கள் அமைதியைக் கோருகிறான்' என்ற செல்ல எச்சரிக்கையுடன் படம் பார்த்தவர்கள் ஸ்பாய்லர்களைச் சொல்லவேண்டாம் என ரசிகர்களுக்கும் ரூஸோ சகோதரர்கள் அறிக்கைகள் வெளியிட்டார்கள்.

நம்ம ஊரில் ஒரு பெரிய நடிகரின் படம் வருகிறதென்றால், எப்படியாவது அதன் கதையைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வம் பலரால் வணிகமாக்கப்படுவது. இது வெளிப்படையாகவே நடக்கும் நிகழ்வு. `மெர்சல்' படப் பிரச்னையின்போது, அதன் கதையை அரசியல் தலைவர் ஒருவரே வெளியிட்டார். இப்போது, 'தர்பார்', 'விஜய் 63' படங்களின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், மார்வெல் போன்ற நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் வழிமுறைகளைப் பின்பற்றினாலே பாதிச் சிக்கல் தீர்ந்துவிடும் என்றுதான் தோன்றுகிறது.

அடுத்த கட்டுரைக்கு