1981ல் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் ஹாரிசன் ஃபோர்ட் நடிப்பில் வெளியான படம் இண்டியானா ஜோன்ஸ். உலகம் முழுவதும் புகழ்பெற்ற இந்தப் படத்தொடரில் 2008 வரை மொத்தம் 4 பாகங்கள் வெளியாகியுள்ளன. இந்த நான்கு பாகங்களையுமே ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்தான் இயக்கியிருந்தார். ஆனால் 2023ம் ஆண்டு வெளியாகவுள்ள இண்டியானா ஜோன்ஸின் 5வது பாகத்தை 'லோகன்' மற்றும் 'ஃபோர்ட் vs ஃபெராரி' புகழ் ஜேம்ஸ் மேன்கோல்டு இயக்கியுள்ளார்.
இதனிடையே நேற்று (2.11.2022) இண்டியானா ஜோன்ஸின் ஐந்தாம் பாகத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்திற்கு 'இண்டியானா ஜோன்ஸ்: அண்ட் தி டயல் ஆப் டெஸ்டினி’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. தொடர்ந்து நான்கு பாகங்களிலும் நடித்த 80 வயதான ஹாரிசன் ஃபோர்ட் இந்த ஐந்தாவது பாகத்திலும் நடித்திருக்கிறார்.
ஹாரிசன் ஃபோர்ட் படங்கள் உலகெங்கும் வசூலில் சாதனை படைத்த நிலையில் அவரது இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இதில், ஹாரிசன் ஃபோர்டின் இளம் வயதைக் காட்ட டீ-ஏஜிங் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இண்டியானா ஜோன்ஸ் வரிசையில் 'இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆப் டெஸ்டினி’ கடைசிபடமாக இருக்கப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் 30, 2023 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகியமொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.