'அவெஞ்சர்ஸ்: எண்டுகேம்' படத்தில் அயர்ன்மேன் கதாபாத்திரத்தின் உயிரிழப்பிற்குப் பிறகு, அவர் மீண்டும் திரைப்படங்களில் தோன்றப்போவதில்லை என நம்பிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸைத் தந்திருக்கிறது, மார்வெல் நிறுவனம். சமீபத்தில் வெளியான ஒரு தகவலின்படி, அடுத்த ஆண்டு வெளியாகவிருக்கும் ஒரு மார்வெல் படத்தில், அயர்ன்-மேன் கதாபாத்திரம் இடம்பெறும் என்பது உறுதியாகியுள்ளது.

மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ்ஸில் (எம்.சி.யூ) ப்ளாக்-விடோ என்ற சூப்பர் ஹீரோயின் கதாபாத்திரத்தை நடிகை ஸ்கார்லெட் ஜோஹான்சன் ஏற்று நடித்துவருகிறார். `அவெஞ்சர்ஸ்' சூப்பர் ஹீரோ அணி உருவான தொடக்கப் புள்ளியிலிருந்தே அதன் உறுப்பினராக இருந்த ப்ளாக் விடோ கதாபாத்திரம், இந்த ஆண்டு வெளியான 'எண்டுகேம்' படத்தில் இறந்துவிட்டது.
அயர்ன்மேன், தோர், கேப்டன் அமெரிக்கா, ஹல்க் என மற்ற அவெஞ்சர்களுக்கு தனிப் படங்களைத் தந்திருந்த மார்வெல், ப்ளாக் விடோ மற்றும் ஹாக்-ஐ பாத்திரங்களுக்கு மட்டும் தனியாக, முன்கதை அல்லது பின்கதை கொண்ட படங்களை இதுவரை தயாரிக்காமல் இருந்தது. சில வாரங்களுக்கு முன் வெளியான எம்.சி.யூ-வின் நான்காம் கட்டம் குறித்த அறிவிப்பில், இவர்கள் இருவருக்குமான தனிக் கதைகளைப் படமாகவும், வெப் சீரீஸாகவும் வெளியிடப்போவதாக அறிவித்தது.

அதன் தொடர்ச்சியாக, 'ப்ளாக்-விடோ' படத்தின் படப்பிடிப்பு தொடங்கி, அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. 'கேப்டன்-அமெரிக்கா: சிவில் வார்' படத்தின் நிகழ்வுகளுக்குப் பிறகு, ப்ளாக்-விடோ கதாபாத்திரத்தின் வாழ்வில் என்ன நடந்தது என இந்தப் படத்தில் காட்டப்படும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும், அந்த காலகட்டத்தில் ப்ளாக்-விடோவுக்கும் டோனி ஸ்டார்க்குக்கும் இடையே இருந்த மோதல்களும் இந்தக் கதையில் சொல்லப்படுமாம்.
அதனால் இந்தப் படத்தில், டோனி ஸ்டார்க் கதாபாத்திரம் இடம்பெறும் என்றும், ராபர்ட் டவுனி ஜூனியரே அந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. ப்ளாக்-விடோ மற்றும் அயர்ன்மேன் என இரண்டு கதாபாத்திரங்களுமே 'எண்டுகேம்' படத்தில் இறந்துவிட்டதால், இப்போது இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.