ஹாரர் ஜானருக்குத் திரும்பும் `ஹாலிவுட் விட்லாச்சாரியார்' ஜேம்ஸ் வான்!

அண்மையில் வெளியான ஒரு தகவலின்படி, வார்னர் ப்ரோஸுக்குச் சொந்தமான நியூலைன் சினிமா நிறுவத்துடன் இணைந்து ஒரு ஹாரர் படத்தைத் தயாரித்து இயக்கவிருக்கிறார் ஜேம்ஸ் வான்.
உலக சினிமாவின் நவீன யுகத்தில் ஹாரர் படங்களுக்கான இலக்கணத்தை மாற்றியமைத்தவர் என்றால் 'காஞ்சூரிங்' வரிசைப் படங்களை உருவாக்கிய இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியரான ஜேம்ஸ் வானைக் கைகாட்டலாம்.

'காஞ்சூரிங்'கைத் தொடர்ந்து 'இன்ஸீடியஸ்', 'ஆனபெல்', 'லைட்ஸ் அவுட்', 'கர்ஸ் ஆஃப் தி வீப்பிங் வுமன்' எனப் பல ஹாரர் படங்களில் பங்கு வகித்து வருகிறார். இவருக்கு ஹாரர் படங்கள் மட்டும்தான் எடுக்கவரும் என முத்திரை குத்தப்பட்டபோதுதான் டி.சி யூனிவர்ஸின் 'ஆக்வாமேன்' என்ற சூப்பர்ஹீரோ படத்தை எடுத்துக்காட்டி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தினார் ஜேம்ஸ்.
தற்போது, மீண்டும் தன் ஸ்பெஷாலிட்டி ஜானரான ஹாரருக்கே திரும்பியுள்ளார். அண்மையில் வெளியான ஒரு தகவலின்படி, வார்னர் ப்ரோஸுக்குச் சொந்தமான நியூலைன் சினிமா நிறுவத்துடன் இணைந்து ஒரு ஹாரர் படத்தைத் தயாரித்து இயக்கவிருக்கிறார் ஜேம்ஸ் வான்.

இன்னமும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கான கதை தயாராக இருப்பதாகவும், திரைக்கதை எழுத சரியான ஒரு திரைக்கதை ஆசிரியரைத் தேர்ந்தெடுப்பதற்கான வேலைகளில் நியூலைன் தரப்பு தற்போது ஈடுபட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அதன் படப்பிடிப்பைத் தொடங்கி அடுத்த ஆண்டில் அதை முடித்துவிட்டு, உடனடியாக 'ஆக்வாமேன்-2' படத்துக்கான வேலைகளைத் தொடங்குகிறார் ஜேம்ஸ் வான்.