Published:Updated:

`நாம்தாம் உலகின் மையம் என நினைக்கிறோம்!’ - ஆஸ்கர் மேடையில் `ஹைலைட்'டான ஜோக்கர் நாயகன் #Oscar

ஜோக்கர் ஹீரோ ( AP )

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் அன்பு பற்றி `ஜோக்கர்' பட நடிகர் வாக்கீன் பீனிக்ஸ் பேசிய கருத்துகள் அதிக கவனம் ஈர்த்துள்ளன.

`நாம்தாம் உலகின் மையம் என நினைக்கிறோம்!’ - ஆஸ்கர் மேடையில் `ஹைலைட்'டான ஜோக்கர் நாயகன் #Oscar

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் அன்பு பற்றி `ஜோக்கர்' பட நடிகர் வாக்கீன் பீனிக்ஸ் பேசிய கருத்துகள் அதிக கவனம் ஈர்த்துள்ளன.

Published:Updated:
ஜோக்கர் ஹீரோ ( AP )

சினிமாத் துறையில் மிகவும் முக்கியமாகவும் உயரிய விருதாகவும் பார்க்கப்படுவது ஆஸ்கர். இந்த ஆண்டு 92-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. (இந்திய நேரப்படி இன்று அதிகாலை). ஹாலிவுட் சினிமாவில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட அனைத்து நடிகர், நடிகைகளும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

ஆஸ்கர்
ஆஸ்கர்
AP

டாட் பிலிப்ஸ் இயக்கத்தில் வாக்கீன் பீனிக்ஸ் நடிப்பில் வெளியான அமெரிக்க திரில்லர் திரைப்படம் ஜோக்கர். இந்தப் படம் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. தற்போது நடந்த ஆஸ்கர் விருது விழாவில் ஜோக்கர் படம் பல பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. அதனால் இந்தப் படத்தின் மீதும் நடிகர் வாக்கீன் பீனிக்ஸ் மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

அனைவரும் எதிர்ப்பார்த்தது போலவே ஜோக்கர் படம் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. அதில் சிறந்த நடிகருக்கான விருதை ஜோக்கர் நாயகன் வாக்கீன் வென்றுள்ளார். விருது பெற்றபோது மேடையில் பேசிய பீனிக்ஸ், "கடவுளே, இப்போது நான் மிகவும் நன்றியுணர்வுடன் இருக்கிறேன். எனது சக பரிந்துரையாளர்கள் மற்றும் இந்த அறையில் உள்ளவர்களைவிட உயர்ந்தவனாக நான் உணரவில்லை. ஏனெனில், நாங்கள் அனைவரும் ஒரே மாதிரியான அன்பை பகிர்ந்துகொள்கிறோம். அதுதான் திரைப்படங்கள் மீதுள்ள நம் காதல். மேலும், உங்களின் இந்த அன்புதான் எனக்கு அசாதாரண வாழ்க்கையை அளித்துள்ளது.

வாக்கீன் பீனிக்ஸ்
வாக்கீன் பீனிக்ஸ்
AP

அன்பு இல்லாமல் நான் எப்படி இருந்திருப்பேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால், எனக்கு வழங்கப்பட்ட மிகப் பெரிய பரிசு இது. இந்தத் தருணத்தைக் குரலற்றவர்களின் குரலுக்கான வாய்ப்பாகப்பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறேன். நாம் கூட்டாக எதிர்கொள்ளும் சில கடுமையான சிக்கல்கள் பற்றி நான் நிறைய யோசிக்கிறேன். சில நேரங்களில் நாம் பல வித்தியாசமான காரணங்களுக்காகப் போராடுகிறோம். ஆனால், என்னைப் பொறுத்தவரையில் அதில் பொதுவான தன்மையைக் காண்கிறேன்.

பாலின சமத்துவமின்மை, இனவெறி, பாலின உரிமை, விலங்குகளுக்கான உரிமை என அதைப் பற்றி நாம் நிறைய பேசினாலும் அது ஏதாவது ஒரு அநீதிக்கு எதிரானதுதான். ஒரு தேசம், ஒரு மக்கள், ஒரு இனம், ஒரு பாலினம் அல்லது ஒரு இனத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவது, அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு உரிமை உண்டு என்ற நம்பிக்கைக்கு எதிரான போராட்டத்தைப் பற்றி பேசுகிறோம். இயற்கை உலகிலிருந்து நாம் துண்டிக்கப்பட்டுவிட்டோம் என்று நினைக்கிறேன். நம்மில் பலரும் நாம்தான் உலகின் மையம் என நினைக்கிறோம்.

வாக்கீன் பீனிக்ஸ்
வாக்கீன் பீனிக்ஸ்
AP

நாம் இயற்கை உலகத்துக்குச் சென்று அதன் வளங்களைக் கொள்ளையடிக்கிறோம். ஒரு பசுவைச் செயற்கையாகக் கருவூட்டுவதற்கான உரிமையை நாம் எடுத்துக்கொள்கிறோம். அது குழந்தை பெறும்போது அந்தப் பசுவின் வேதனை தெளிவற்றதாக இருந்தாலும் நாம் அதன் குழந்தையைத் திருடிக்கொள்கிறோம். பின்னர் கன்றுக்குட்டிக்குத் தேவையான பசுவின் பாலை எடுத்து காபியிலும் தானியங்களிலும் கலக்கிறோம்.

சுய மாறுதலைக் கண்டு நாம் அஞ்சுகிறோம் என்று நினைக்கிறேன். ஏனெனில், எதையாவது ஒன்றை விட்டுக்கொடுக்க நாம் அதைத் தியாகம் செய்ய வேண்டும் என்பதால். மனிதர்கள் தனித்துவமானவர்கள், சிறந்த படைப்பாளிகள். அவர்கள் அன்பையும் இரக்கத்தையும் வழிகாட்டும் கொள்கைகளாகப் பயன்படுத்தும்போது, சுற்றுச்சூழலுக்குப் பயனளிக்கும் மாற்று முறைகளை உருவாக்கலாம், அதைச் செயல்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.

வாக்கீன் பீனிக்ஸ்
வாக்கீன் பீனிக்ஸ்
AP

என் வாழ்வில் நான் துரோகியாக இருந்தேன், சுயநலவாதியாகவும், சில சமயங்களில் கொடூரமானவனாகவும் இருந்தேன். ஆனால், உங்களில் பலர் எனக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்கியுள்ளீர்கள். இப்போது அதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நாம் ஒருவருக்கொருவர் உதவும்போது, வழிகாட்டும்போது, கற்பிக்கும்போதுதான் சிறந்த மனிதர்களாக விளங்குகிறோமே தவிர, கடந்த காலத் தவறுகளுக்காக அவர்களை நிராகரிப்பதன் மூலம் அல்ல. 'அன்போடு மீட்கச் செல்லுங்கள்... உங்களை அமைதி பின்தொடரும்' என்று என் சகோதரர் தனது 17 வயதில் எழுதிய பாடல் வரிகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். நன்றி!'' என்று பேசியுள்ளார். அன்பு குறித்து பீனிக்ஸ் பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் அதிகமாக வைரலாகி வருகிறது.