Published:Updated:

ஜானி டெப் vs ஆம்பர் ஹெர்ட் - என்னென்ன வழக்குகள்? அவற்றின் வாத, பிரதிவாதங்களும் முழு பின்னணியும்!

ஜானி டெப் vs ஆம்பர் ஹெர்ட்

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர் ஆம்பர் என அவரது தரப்பு ஒரு வாதத்தை முன்வைக்கிறது. அதே சமயம், ஆண்களும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைச் சொல்வதற்காக ஜானியின் தரப்புக்கும் ஆதரவு குவிந்து வருகிறது.

ஜானி டெப் vs ஆம்பர் ஹெர்ட் - என்னென்ன வழக்குகள்? அவற்றின் வாத, பிரதிவாதங்களும் முழு பின்னணியும்!

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர் ஆம்பர் என அவரது தரப்பு ஒரு வாதத்தை முன்வைக்கிறது. அதே சமயம், ஆண்களும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைச் சொல்வதற்காக ஜானியின் தரப்புக்கும் ஆதரவு குவிந்து வருகிறது.

Published:Updated:
ஜானி டெப் vs ஆம்பர் ஹெர்ட்
இன்றைக்கு உலகமே கவனித்துக்கொண்டிருக்கிற ஹை-ப்ரொபைல் வழக்குகளில் ஒன்று ஹாலிவுட் நடிகரான ஜானி டெப், நடிகை ஆம்பர் ஹெர்ட் மீது தொடர்ந்த அவதூறு வழக்கு. ஒருவர் மாற்றி ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதால் வழக்கு அடுத்தடுத்த திருப்பங்களுடன் பரபரப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. இருவரின் ஆரம்பக் காலகட்டம் தொடங்கி இந்த வழக்கின் பின்னணி வரை இங்கு பார்ப்போம்.

ஜானி டெப் 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ படங்களின் வழியாக உலகம் முழுவதும் பிரபலமானவர். 1984-ல் நடிக்கத் தொடங்கியவர். 1990-ல் வந்த Edward Scissorhands, Donnie Brasco போன்ற படங்கள் அவரை பிரபல நடிகராக மாற்றின. மூன்று முறை ஆஸ்கருக்கான நாமினேஷனில் இருந்திருக்கிறார், இரண்டு முறை 'People’s Sexiest Man Alive' என்கிற பட்டத்தையும் பெற்றிருக்கிறார்.

ஜானி டெப் vs ஆம்பர் ஹெர்ட்
ஜானி டெப் vs ஆம்பர் ஹெர்ட்

முதல் அறிமுகம்

ஜானி டெப் 2009-ல் The Rum Diary என்கிற படத்தில் தன்னோடு இணைந்து நடித்த ஆம்பர் ஹெர்ட் மீது காதல் வயப்பட்டார். ஆம்பர் ஹெர்ட் 2000-ல் சினிமாத் துறைக்கு வந்தவர். Never Back Town, Pineapple Express உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானாவர். இருவரும் ஒருவர்மீது ஒருவர் காதல் கொள்ள 2012-ம் ஆண்டு முதல் டேட்டிங்கில் இருந்தார்கள். தன்னைவிட 22 வயது அதிகமான ஜானி டெப்புடன் படப்பிடிப்பில் நடிக்கும்போது நெருக்கத்தை உணர்ந்ததாக ஆம்பர் பின்னர் குறிப்பிட்டுள்ளார். அவர்களுக்கு 2014-ல் நிச்சயதார்த்தமும் 2015 பிப்ரவரியில் திருமணமும் நடந்தன. ஆனால், அவர்களின் திருமண வாழ்க்கை நீடித்தது 15 மாதங்கள் மட்டுமே.

எங்கிருந்து பிரச்னை தொடங்கியது?

2016-ல் மே மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறைக்கு ஓர் அழைப்பு வந்தது. ஜானி டெப்பின் வீட்டில் குடும்பப் பிரச்னை நடப்பதாக தகவல் சொல்லியது. ஆனால், அதற்கான அறிகுறி எதுவும் இல்லாததால் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு சில நாள்களுக்குப் பின்பு ஆம்பர் ஹெர்ட் ஒத்திசைந்து வாழ முடியாத காரணத்தால் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். தன்னிடமிருந்து ஜானி டெப்பை விலக்கி வைக்கக் கோரி 'restraining order' வேண்டுமென்றும் கேட்டார். ஹெர்ட்டிடம் இருந்து 100 யார்டு தொலைவில்தான் ஜானி இருக்க வேண்டும் என தற்காலிகத் தடை ஆணை அப்போது பிறப்பிக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும்போது காயம்பட்ட தன்னுடைய முகத்தோடு ஆம்பர் பொது வெளியில் வந்து சென்றார். மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் வன்முறைக்கு உள்ளானதாகக் குற்றஞ்சாட்டினார். ஆம்பர் இப்படிப் பேசுவதன் நோக்கம் அவருக்கு விவாகரத்தின் போது கிடைக்கும் பொருளாதார ரீதியான அனுகூலம் தேவைப்படுகிறது என ஜானி தரப்பில் சொல்லப்பட்டது. ஜானி மீது எப்போதும் சொல்லப்படும் குற்றம் அவர் போதைப் பொருள்களை அதிகம் உயோகிப்பவர் என்பதுதான்.

ஆம்பர் ஹெர்ட்டின் காயம்பட்ட முகம்
ஆம்பர் ஹெர்ட்டின் காயம்பட்ட முகம்

செட்டில்மென்ட்

விவகாரத்தைத் தொடர்ந்து ஜானி டெப் 7 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஆம்பர் ஹெர்ட்டுக்கு செட்டில்மென்ட்டாகக் கொடுத்தார். ஆம்பர் இந்தத் தொகையிலிருந்து ACLA (American Civil Liberties Union)-க்கும் குழந்தைகள் நல மருத்துவமனை ஒன்றுக்கும் நன்கொடை அளிக்க இருப்பதாகக் குறிப்பிட்டார். Restraining order விசாரணைக்கு முன்பாகவே இருவரும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்கள்.

அதில், “தங்களின் உறவு ஆழமான உணர்ச்சிகளால் ஆனது. இப்போது மாறியிருந்தாலும் அன்பால் கட்டப்பட்டது. இருவரில் யாரும் பொய்யான குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை. பொருளாதார லாபத்துக்காக இதைச் செய்யவில்லை. மனரீதியான உடல்ரீதியான எந்தவிதத் தாக்குதலும் இல்லை” என அறிவித்தார்கள். அதன் பிறகு restraining order வழக்கை ஆம்பர் ஹெர்ட் திரும்பப் பெற்றார். இருவருக்கும் இடையிலான பிரச்னை அப்போதைக்கு இதோடு முடிவுக்கு வந்தது.

மீண்டும் பிரச்னை எதனால், எப்போது தொடங்கியது?

2018 டிசம்பரில் ஆம்பர் ஹெர்ட் 'தி வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழில் ஒரு கட்டுரை எழுதினார். அதில் தன்னைக் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதியாக முன்னிலைப்படுத்திக்கொண்டார். டெப் பெயரை அந்தக் கட்டுரையில் குறிப்பிடவில்லை எனினும் இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வைக் குறிப்பிட்டு இந்தக் கலாசாரத்தை ஒரு பெண்ணாகத் தான் எதிர்கொண்டது எப்படி, இங்கு எது மாற்றப்பட்ட வேண்டும், இந்த நிறுவனங்கள் குற்றஞ்சாட்டப்படும் ஆண்களை எப்படிக் காப்பாற்ற முயல்கின்றன உள்ளிட்ட விஷயங்களைக் குறிப்பிட்டு எழுதினார்.

நான்கு நாள்களுக்குப் பிறகு ஜானி டெப், 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' ஆறாவது படத்திலிருந்து நீக்கப்பட்டார். மூன்று மாதங்களுக்குப் பிறகு தன் பெயரைக் களங்கப்படுத்தியதாகவும் கணக்கிட இயலாத அளவுக்கு தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறி ஆம்பர் ஹெர்ட் மீது வழக்கு தொடர்ந்தார் ஜானி டெப். அவர் ஹாலிவுட்டின் அதிகபட்ச சம்பளம் பெறுகிற நடிகர்களில் ஒருவர். அவரின் பட வாய்ப்புகள் கைவிட்டு போனதற்காகவும், இழப்புக்கு ஈடு கேட்பதற்காகவும் இந்த வழக்கு தொடரப்பட்டது.

ஆம்பர் ஹெர்ட்
ஆம்பர் ஹெர்ட்

லண்டன் வழக்கு

இதில் தொடர்புடைய இன்னொரு வழக்கும் இருக்கிறது. The Sun பத்திரிகை நிறுவனம் ஒரு கட்டுரையை வெளியிட்டது. ‘ஜே.கே.ரௌலிங் எப்படி மனைவியைத் துன்புறுத்தும் ஜானி டெப் போன்ற ஒருவரை நடிக்க வைக்க மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டார்?’ என்று எழுதப்பட்ட கட்டுரை அது. ‘ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்' படத்தொடரின் ஒரு பாகத்தில் ஜானி டெப் நடித்திருந்தார். அதைக் குறிப்பிட்டே இந்தக் கட்டுரை வெளியானது. தன் பெயருக்கு அவதூறு விளைவித்ததாக ஜானி டெப் அந்தப் பத்திரிகை மீதும் வழக்கு தொடர்ந்தார்.

2020-ல் இந்த வழக்கின் விசாரணை நடந்தது. ஜானி டெப்பும் ஆம்பர் ஹெர்ட்டும் சில நாள்கள் விசாரணைக்குச் சென்றார்கள். ஹெர்ட் தன்னை 14 முறை தாக்க முயன்றதாகக் கூறுவதில் 12 நிகழ்வுகளுக்கு போதுமான காரணங்கள் இருக்கின்றன என நீதிபதி கருதினார். ஜானியின் நடவடிக்கைகள் ஹெர்ட்டுக்கு வாழ்வின் மீது பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது என இங்கிலாந்து நீதிமன்றம் அறிவித்தது. இந்தத் தீர்ப்புக்குப் பிறகு ‘ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்' படத்திலிருந்து ஜானியை விலகச் சொல்லி அதன் தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கவும், அந்தப் படத்திலிருந்து வெளியேறினார் ஜானி டெப்.

தற்போதைய வழக்கு

தற்போது இரண்டு வழக்குகள். ஒன்று தன்னைப் பற்றி அவதூறாக எழுதியதற்காக ஆம்பர் ஹெர்ட் மீது ஜானி தொடர்ந்த 50 மில்லியன் டாலருக்கான வழக்கு. இன்னொன்று ஜனவரி 2021 ஆம்பர் ஹெர்ட், ஜானி மீது தொடர்ந்த 100 மில்லியன் டாலருக்கான வழக்கு. 'ஆம்பர் ஹெர்ட் குற்றச்சாட்டுகள் எல்லாம் ஏமாற்று வேலை' என ஜானியின் வழக்கறிஞர் பேசியது தன்னை அவமதிப்பதாக இருப்பதாகச் சொல்லி, அதற்குக் காரணமான ஜானி மீது 100 மில்லியன் டாலருக்கு வழக்கு தொடர்ந்துள்ளார் ஆம்பர் ஹெர்ட். இப்போது முதலில் குறிப்பிட்ட ஜானி டெப், ஆம்பர் ஹெர்ட் மீது தொடர்ந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஏப்ரல் 11-ல் தொடங்கிய விசாரணை 5 வாரங்களுக்கு மேலாக நீடிக்கும் எனத் தெரிகிறது. இரு தரப்பிலும் ஏராளமான சாட்சிகள் முன்வைக்கப்படுகின்றன. நீதிமன்றத்தில் வழக்கு செல்லும் திசை குறித்து நாள்தோறும் சமூக வலைதளத்தில் விவாதிக்கப்படுகிறது. அதிகமும் கவனிக்கப்படுகிற வழக்காக இது மாறிவருகிறது.
ஆம்பர் ஹெர்ட்
ஆம்பர் ஹெர்ட்

நிகழ்வு 1 (ஆம்பர் வெர்சன்)

2015-ல் ஆஸ்திரேலியாவில் 'பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்' படத்தின் 5-ம் பாகப் படப்பிடிப்புக்காக ஜானியும் ஆம்பரும் சென்றிருந்தபோது மூன்று நாள்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் நடந்திருக்கிறது. ஜானி போதையில் தன்னிடம் பாட்டிலைக் காட்டி மிரட்டியதாகவும் உடைந்த பகுதியின் பாதியைத் தாடைக்குக் கீழே வைத்தவாறு முகத்தைக் கிழித்து விடுவதாக எச்சரித்ததாகவும் ஆம்பர் குறிப்பிட்டிருக்கிறார். தனது ஆடைகளைக் கிழித்து, தனது அந்தரங்க உறுப்புகளுக்குள்ளும் பாட்டிலை நுழைத்தார் போன்ற அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளையும் ஆம்பர் முன்வைத்தார்.

ஜானியின் பதிலோ வேறு மாதிரி இருந்தது. ஹெர்ட் பாட்டிலை உடைத்ததால்தான் தன்னுடைய விரலின் நுனி துண்டிக்கப்பட்டது என அவர் தெரிவித்தார். இதற்கு பதிலாக, சுவரில் இருந்த ஹேங்கிங் போனில் குத்தி உடைத்ததுதான் இதற்கான காரணம் என்றும், தாக்குதலுக்குப் பிறகு அங்கு என்ன நடந்தது என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியவில்லை எனவும் ஆம்பர் தெரிவித்தார். இந்த நிகழ்வுக்குப் பிறகு ஜானி தன்னுடைய உடைந்த கையின் ரத்தம், பெயின்ட் உள்ளிட்டவற்றால் சுவரெங்கும் தொடர்பில்லாதவற்றைக் கிறுக்கி வைத்திருக்கிறார். இதற்கான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கின்றன. இதற்கான ஆடியோ ரெக்கார்டிங் ஜானி தரப்பில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஜானி டெப்
ஜானி டெப்

அதில் ஜானி, “என்னுடைய விரல் போய்விட்டது...” என்கிறார்.

"நீ இந்த உலகுக்குச் சொல் ஜானி. நான், ஜானி டெப், ஒரு ஆண். நான் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டேன் என்று சொல். உன்னை யார் நம்புகிறார்கள் என்று பார்ப்போம். எத்தனை பேர் உன் பக்கம் நிற்பார்கள் என்றும் பார்ப்போம்" என்று ஆம்பர் ஹெர்ட்டின் வார்த்தைகள் ஒலிக்கின்றன.

ஹெர்டின் வழக்கறிஞர், அதற்கு நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று ஜானியிடம் கேட்ட போது, “ஆமாம், நான் பாதிக்கப்பட்டவன்தான் என்று சொன்னேன்” என்றார்.

அந்த ஆடியோ கிளிப்பிங்கில் 'நான் கோபப்பட்டிருக்கக் கூடாது' என ஹெர்ட் பேசுவது போல இருக்கிறது.

திருப்பங்கள்

ஆம்பர் ஹெர்டின் உதவியாளர் கேட் ஜேம்ஸ் நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்தார். ‘சம்பளம் உயர்த்திக் கொடுங்கள் எனக் கேட்டதற்கு முகத்தில் துப்பிவிட்டார்’ என ஹெர்ட் குறித்து அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டை ஜானி தரப்பு வாதமாக ஆஜர்படுத்தினார்கள்.

இதற்கு நடுவில் தனது பெயர் மீடியாக்களில் மோசமாகப் பேசப்படுகிறது எனத் தன்னுடைய PR டீமை ஆம்பர் ஹெர்ட் மாற்றினார். 12 மணிநேரத்திற்கு மேலாக ஆம்பர் ஹெர்ட்டை சோதித்த உளவியல் மருத்துவர் அவர் நிலையற்ற உணர்ச்சிகள் கொண்டவர், நாடகத்தனமாகவும் கவனத்தை ஈர்க்க பொருத்தமற்று நடப்பவராகவும் இருக்கிற 'Histrionic Personality Disorder' கொண்டவர் என்று அறிக்கை கொடுத்தார்.
ஜானி டெப்
ஜானி டெப்
ஜானி சொல்வது ஒன்றே ஒன்றுதான், "இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானதாகவும், என்னைத் தொந்தரவு தரக்கூடியவனாக சித்திரிப்பதாகவும் உள்ளன. நான் ஹெர்ட் என்றில்லை. என் வாழ்நாளில் எந்தப் பெண்ணையும் தாக்கியது இல்லை."

ஆம்பர் ஹெர்ட் முன்னர் செட்டில்மென்ட்டாகப் பெறப்பட்ட பணத்தில் 3.5 மில்லியன் டாலர்களை ACLU அமைப்புக்குத் தருவதாக இருந்தது. ஆனால், அவர் 1.3 மில்லியன் மட்டுமே நன்கொடை வழங்கியிருக்கிறார். அதுவும் பகுதி பகுதியாக. எலான் மஸ்க்கின் தொடர்பிருப்பதாகக் கருதப்படும் கணக்கில் இருந்து 5 லட்சம் டாலர்கள் பெறப்பட்டிருக்கின்றன. விவாகரத்துக்குப் பிறகு ஆம்பர் ஹெர்ட் எலான் மஸ்க் உடன் சில காலம் டேட்டிங்கில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் நாளுக்கு நாள் புதிய திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கிறது. ஜானி டெப் அணிந்திருக்கும் டை முதற்கொண்டு ஆம்பரின் காஸ்ட்யூம் வரை விவாதத்துக்கு உள்ளாகின்றன. பேர்பெக்ஸ் நீதிமன்றத்தின் காட்சிகள் உலகெங்கும் பல திரைகளில் லைவ்வாகச் சென்றுகொண்டிருக்கின்றன. யூடியூபில் அவை மில்லியன் வியூஸ்களை அள்ளி வருகின்றன.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர் ஆம்பர் என அவரது தரப்பு ஒரு வாதத்தை முன்வைக்கிறது. அதே சமயம், ஆண்களும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைச் சொல்வதற்காக ஜானியின் தரப்புக்கும் ஆதரவு குவிந்து வருகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து இருவருக்கும் திருமண வாழ்வு குறித்த கவுன்சலிங் கொடுத்தவரான லாரல் ஆண்டர்சன் இதை ‘பரஸ்பர வன்முறை’ எனக் குறிப்பிடுகிறார். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்கள் நிபுணர்கள். இந்த விவகாரத்தில் குற்றவாளி அல்லது தாக்குபவர் என ஒருவர்தான் இருக்க முடியும். இருவரில் யார் அது என்பதுதான் விவாதமே!