'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ படம் மூலம் பிரபலமான ஹாலிவுட் நடிகர் ஜானி டெப், தன்னைவிட 25 வயது குறைவாக இருந்த அமெரிக்க நடிகை ஆம்பர் ஹெர்ட் மீது காதல் வயப்பட்டு 2015-ல் அவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், இவர்களின் திருமண வாழ்க்கை வெகுநாள்கள் நீடிக்கவில்லை. 2016 மே மாதம் ஆம்பர் ஹெர்ட், ஜானி டெப் உடன் இணைந்து வாழ முடியாத காரணத்தால் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். தன்னிடமிருந்து ஜானி டெப்பை விலக்கி வைக்கக் கோரி 'restraining order' வேண்டுமென்றும் கேட்டார். பின்னர் ஹெர்ட்டிடம் இருந்து 100 யார்டு தொலைவில்தான் ஜானி இருக்க வேண்டும் எனத் தற்காலிகத் தடை ஆணை அப்போது பிறப்பிக்கப்பட்டது. பின்னர் இருவரும் பரஸ்பர விவாகரத்து பெற்றனர்.

இதையடுத்து 2018-ல் 'தி வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில் ஆம்பர் ஹெர்ட் ஒரு கட்டுரை எழுதினார். பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான அந்தக் கட்டுரையில் ஜானி டெப் பெயரைக் குறிப்பிடாமல் தன்னைக் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதியாக முன்னிலைப்படுத்திக்கொண்டார். இந்தக் கட்டுரை வெளியான நான்கு நாள்களில் 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' ஆறாவது படத்திலிருந்து ஜானி டெப் நீக்கப்பட்டார். மேலும் பல படங்கள் அவரின் கைகளை விட்டு நழுவிச் சென்றன.
இதன்பின் ஜானி டெப், கடந்த 2018ல் ஆம்பர் எழுதிய கட்டுரையின் மீது குற்றம்சாட்டி அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். ஆம்பர், தனது சினிமா வாழ்க்கையைச் சிதைத்து வருவதாகக் குறிப்பிட்டு 50 மில்லியன் டாலர்கள் நஷ்ட ஈடு கேட்டு முறையீடு செய்திருந்தார். இதற்கு எதிராக ஆம்பர் தரப்பிலிருந்து 100 மில்லியன் டாலர்கள் கேட்டு ஓர் எதிர் வழக்கும் தொடரப்பட்டது.
மூன்று ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த வழக்கின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து தீவிரமாக நடைபெற்றது வந்தது. இரு தரப்பிலும் ஏராளமான வாதங்களும் சாட்சிகளும் முன்வைக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இந்த வழக்கில் ஜானி டெப் அவதூறுக்கு ஆளானதை நிரூபிக்க முடிந்தது என அவருக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜானி டெப் மீதான அவதூறு உறுதி செய்யப்பட்ட நிலையில் ஆம்பர் ஹெர்ட் 10 மில்லியன் டாலர் இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும் எனவும் கூடுதலாக 5 மில்லியன் டாலரை தண்டனைக்குரிய இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும் எனவும் மொத்தம் 15 மில்லியன் டாலர்கள் வழங்கச் சொல்லி தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே சமயம் ஆம்பர் ஹெர்ட் தொடர்ந்த எதிர் வழக்கு சார்பாக, ஜானி டெப்பின் வழக்கறிஞர் பேசிய அவதூறு பேச்சுக்காக, 2 மில்லியன் டாலர்கள் ஆம்பருக்கு வழங்கவேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் தீர்ப்பை 7 அறங்கூறுநர்கள் (Jurors) (5 ஆண்கள், 2 பெண்கள்) கொண்ட பென்ச், தங்களுக்குள்ளான 13 மணி நேர விவாதத்துக்குப் பிறகு வழங்கியுள்ளனர்.
ஜானி டெப் vs ஆம்பர் ஹெர்ட் வழக்கு விசாரணை இந்தாண்டு தொடங்கப்பட்டதிலிருந்தே பெரும் பேசுபொருளானது. வழக்கின் லைவ் டெலிகாஸ்டைக் காட்டி யூடியூப் சேனல்கள் பலவும் சம்பாதித்தன. அதே சமயம், ஜானி டெப்புக்கு ஆதரவாக சாட்சிகளும், ஆதாரங்களும் வரும்போதெல்லாம் அவரின் ரசிகர்கள் உற்சாகமாகினார். தற்போது அவருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்திருக்கும் நிலையில், அவரது ரசிகர்கள் இதைக் கொண்டாடி வருகின்றனர்.