இதுவரை வெளியான 'மேட்ரிக்ஸ்' படத்தின் மூன்று பாகங்களும் ஒரு வீடியோ கேம் என்றும், தான் ஒரு கேம் டிசைனர் என்றும் நினைத்துக்கொண்டு வாழ்கிறான் தாமஸ் ஆண்டர்சன். இன்னொரு பக்கம், டிரினிட்டி, டிஃபனி என்ற பெயரில் ஒரு குடும்பத் தலைவியாகக் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறாள். முதல் பாகத்தின் கதையோட்டத்தைப் போலவே தாமஸ் ஆண்டர்சனுக்குத் தான் வாழும் வாழ்வு நிஜமில்லை என்ற எண்ணம் தோன்ற ஆரம்பிக்கிறது. இதற்கு முன்னர் நடந்த நிகழ்வுகள் குறித்த காட்சிகளும் அவனின் கண் முன்னே வந்து போகின்றன. மார்ஃபியஸ் மீண்டும் சிவப்பு மாத்திரையைக் கொடுத்து நிஜம் எது, பொய் எது எனத் தாமஸுக்குத் தெரியப்படுத்த முயல, அடுத்தடுத்து நிகழும் அதிரடி சம்பவங்கள்தான் கதை.

தாமஸ் ஆண்டர்சன் என்கிற நியோவாக மீண்டும் கீயானு ரீவ்ஸ். 'மேட்ரிக்ஸ்' என்றதும் நினைவுக்கும் வரும் அந்தப் பால் வடியும் க்ளீன் ஷேவ் முகமில்லாமல், 'ஜான் விக்'கை நினைவுபடுத்தும் வகையிலேயே வலம் வருகிறார். 'தி ஒன்' என்ற பெரிய பொறுப்பு இதிலும் தொடர்ந்தாலும், முன்னர் அவர் உடல்மொழியிலிருந்த அந்த வேகமும், எனர்ஜியும் சுத்தமாக மிஸ்ஸிங். இது வயது மூப்பினாலா அல்லது எடுத்துக்கொண்ட கதையில் திருப்தியில்லாமலா என்று தெரியவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
டிஃபனி என்ற டிரினிட்டியாக கேரி-ஆனி மாஸ் ஒரு சில இடங்களில் அதிரடி காட்டியிருக்கிறார். பாதி படத்திற்கு மேல் காணாமல் போகிறவர், பின்னர் கிளைமாக்ஸில் வந்து மாஸ் கூட்டியிருக்கிறார். பக்ஸ் எனும் முக்கிய பாத்திரத்தில் ஜெஸ்ஸிகா ஹென்விக் கதையை நகர்த்திக் கொண்டு போயிருக்கிறார். 'தி அனலிஸ்ட்' பாத்திரத்தில் வரும் 'ஹவ் ஐ மெட் யுவர் மதர்' புகழ் நீல் பேட்ரிக் ஹாரிஸுக்கு முக்கியமான வேடம். அவரின் அந்த சைக்கியாட்ரிஸ்ட் முகமும், மற்றொரு (ஸ்பாய்லர்) முகமும் சிறப்பாகப் பொருந்திப் போயிருக்கிறது. இவர்கள் தவிர, பிரியங்கா சோப்ரா, ஜடா பிங்கட் ஸ்மித் ஆகியோரும் படத்தில் தலைகாட்டி இருக்கின்றனர்.

படத்தின் மிகப்பெரிய மைனஸ், மார்ஃபியஸ் மற்றும் ஏஜென்ட் ஸ்மித் என்ற இரண்டு முக்கிய கதாபாத்திரங்களுக்கு நடிகர்களை மாற்றியதுதான். இதற்கு முந்தைய கதையில், நியோவுக்கு அடுத்து மிகவும் முக்கியமான பாத்திரமாக விளங்கிய மார்ஃபியஸை இதில் மற்றுமொரு துணை நடிகர் பாத்திரமாக சிறுமைப்படுத்தி டீல் செய்திருக்கிறார்கள். இதற்கு யஹ்யா அப்துல்-மட்டின் II தேவையான நடிப்பை வழங்கியிருந்தாலும், ஒரிஜினல் மார்ஃபியஸின் பிம்பத்தை மறக்கடிக்கவோ, முழுமையாகக் கொண்டு வரவோ அவரால் முடியவில்லை.
அதேபோல், முந்தைய பாகங்களில் 'தி ஒன்' தாமஸ் ஆண்டர்சன் vs ஏஜென்ட் ஸ்மித் காட்சிகளில் எப்போதும் அனல் பறக்கும். இவர்கள் இருவருக்கும் இடையேயான சண்டைக் காட்சிகள்தான் இன்னமும் இந்திய சினிமாக்கள் காப்பியடிக்க/இன்ஸ்பிரேஷனாகப் பார்க்கத் தேர்ந்தெடுக்கும் மிக முக்கியமான சாய்ஸ். 'மிஸ்டர் ஆண்டர்சன்' என ஹ்யூகோ வீவிங் அழைக்கும்போதே ஒருவித நடுக்கம் நமக்குமே உருவாகும். இந்த மேஜிக்கை இந்தப் பாகத்தில் ஸ்மித்தாக வரும் ஜொனதன் கிராஃப்பால் கொண்டு வர இயலவில்லை.

ஒரு மெட்டா படமாக நிறைய இடங்களில் ஸ்கோர் செய்கிறது இந்த 'தி மேட்ரிக்ஸ் ரிசரக்ஷன்ஸ்'. 'தி வட்சௌஸ்கீஸ்' சகோதரிகள், முன்னர் சகோதரர்களாக இருக்கும்போது எடுக்கப்பட்ட படத் தொடரின் நான்காவது பாகம் இது என்றாலும், இயக்குநர் நாற்காலியில் லானா வட்சௌஸ்கி மட்டுமே அமர்ந்திருக்கிறார். அவருமே தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸின் உந்துதலினால்தான் இந்தப் படத்தை எடுக்க ஒப்புக்கொண்டதாகவும், இடையில் கொரோனா பிரச்னை வந்தபோதுகூட படத்தை நிறுத்திவிடும் எண்ணத்தில் அவர் இருந்ததாகவும் செய்திகள் வெளியாகின. அது உண்மைதான் என்று சொல்லும் அளவிற்கு ஒரு சுமாரான ஸ்க்ரிப்ட்டாக மட்டுமே படம் விரிகிறது. இதற்காக வார்னர் பிரதர்ஸையே கலாய்க்கும் காட்சிகள் மட்டும் அப்ளாஸ் ரகம்! படத்தின் டிரெய்லரில் இடம்பெற்று, கதையோடு பொருந்திபோய் கவனம் ஈர்த்த 'Jefferson Airplane - White Rabbit' பாடலை படத்திலும் இணைத்து அதற்கேற்றவாறு காட்சிகள் அமைத்தது சிறப்பு.
'தி மேட்ரிக்ஸ்' படத்தொடரின் முகவரியான ஸ்டன்ட் காட்சிகள் இதில் மொத்தமாக மிஸ்ஸிங். ஒரு நீண்ட சண்டைக்காட்சிக்கு நாம் கிளைமாக்ஸ் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. நியோ துப்பாக்கித் தோட்டாக்களை வெறும் சைகையால் நிறுத்துவது மாஸ் டெம்போவைக் கூட்டும் காட்சிதான் என்றாலும், சும்மா சும்மா அதே டெம்போவில் ஏறுவது அந்தக் காட்சியின் வீரியத்தை மட்டுப்படுத்தி இருக்கிறது. 'வேற ஏதாவது புதுசா பண்ணுங்க ப்ரோ' என்று கமென்ட் அடிக்கவே தோன்றுகிறது.

இதே 20 வருடங்களுக்கு முன்னர் வெளியான டோபி மெக்யூர் 'ஸ்பைடர்மேன்' குறித்த நாஸ்டால்ஜியா நினைவுகளை 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' சிறப்பாகக் கையாண்டது. அத்தகைய நினைவுகள் 'தி மேட்ரிக்ஸ்' தொடர்பாகவும் இருக்கின்றன என்றாலும் படத்தில் அவற்றை அணுகிய விதம் கொஞ்சம்கூட சிரத்தையில்லாத முயற்சியாக மட்டுமே வெளிப்பட்டிருக்கிறது. முதல் மூன்று பாகங்களை இப்போது மீண்டும் ரிலீஸ் செய்தால்கூட பார்க்கத் தயாராக இருக்கும் 90ஸ் கிட்ஸை இந்த நான்காம் பாகம் எந்த வகையிலும் ஈர்க்கவில்லை என்பதுதான் 'தி மேட்ரிக்ஸ்' சகாப்தத்தில் தற்போது விழுந்திருக்கும் மிகப்பெரிய கரும்புள்ளி. நிறுத்தணும், எல்லாத்தையும் நிறுத்தணும்!
மற்றபடி கீயானு ரீவ்ஸ் பேன்ஸ், 'சரி, சரி... மோரை ஊத்து' என 'ஜான் விக்' நான்காம் பாகத்துக்குத் தயாராக வேண்டியதுதான்!