Published:Updated:

`007' கதாபாத்திரத்தில் கேப்டன் மார்வெல் நடிகை!

ராம் பிரசாத்

பாண்ட் 25-வது படத்தில் 007 கதாபாத்திரத்தில் நடிகை லஷானா நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

லஷானா லிஞ்ச்
லஷானா லிஞ்ச்

``மை நேம் இஸ் பாண்ட்.. ஜேம்ஸ் பாண்ட்”. இயான் ஃபிளமிங் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் ஜேம்ஸ் பாண்ட் - 007 கதாபாத்திரம். இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு 1959-ம் ஆண்டு ‘ டாக்டர் நோ’ என்ற படம் வெளியானது. ஏராளமான நடிகர்கள் இந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடைசியாக வெளியான பாண்ட் படங்களில் டேனியல் கிரேக் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் தற்போது வெளியாக இருக்கும் 25-வது படத்தோடு டேனியல் கிரேக் விடைபெறுகிறார். இந்தப் படத்தை கேரி ஃபுகுநாகா இயக்குகிறார்.

டேனியல் கிரேக்
டேனியல் கிரேக்

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் தொடர்ந்து ஆண்களே நடித்து வருகின்றனர். இதுபோன்ற சவாலான கதாபாத்திரங்களில் ஏன் பெண்கள் நடிக்கக் கூடாது என்ற கேள்வி கடந்தாண்டு எழுந்தது. அப்போது இதற்கு பதிலளித்த படத்தின் தயாரிப்பாளர் பார்பரா ப்ராக்கோலி, ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் ஒரு ஆணை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டது. பாண்ட் என்றால் ஆண் தான். அந்தக் கதாபாத்திரத்தில் பெண்ணை நடிக்க வைக்க வேண்டாம் என நினைக்கிறேன், பாண்ட் கதாபாத்திரம் ஆணாகவே தொரட்டும் என்றார்.

தற்போது வெளியாக இருக்கும் 25-வது படத்தோடு டேனியல் கிரேக் விடைபெறுகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க ஹாலிவுட் நடிகர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் இட்ரிஸ் எல்பா முன்னணியில் இருப்பதாகக் கூறப்பட்டது. கறுப்பின நடிகராக இட்ரிஸ் எல்பா இந்த கதாபாத்திரத்திற்குப் பொருந்தக்கூடியவர்தான். அவெஞ்சர்ஸ் வரிசையில் வெளியான படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாண்ட் 25-வது படத்திற்கு இருக்கும் ஆர்வத்தை விட இந்த கதாபாத்திரத்தில் அடுத்து நடிக்கப் போவது யார் என்ற ஆவல் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

டேனியல் கிரேக்
டேனியல் கிரேக்

பாண்ட் வரிசையில் வெளியாகும் படங்களில் ஏஜெண்ட் 007 என்ற அடைமொழி ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்துக்கே வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில்தான் கேப்டன் மார்வெல் நடிகை லஷானா லிஞ்ச் 007 கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. டேனியல் கிரேக் ஓய்வையடுத்து லஷானா லிஞ்ச் 007 கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை உறுதிப்படுத்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனால், லஷானா லிஞ்ச் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இறுதியாக பூனை வெளியேறிவிட்டது #BOND25 எனப் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இது உண்மையானால் 007 கதாபாத்திரத்தில் நடிக்கும் முதல் பெண் என்ற பெருமையைப் பெறுவார். எம்.ஐ 6 எனப்படும் பிரிட்டிஷ் உளவு அமைப்பில் ஏஜெண்ட் 007 கதாபாத்திரத்தில் லஷானா நடிப்பார். ஆனால், பாண்ட் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கப்போவதில்லை. அந்த கதாபாத்திரத்தில் அடுத்து நடிக்கப்போவது யார் என்ற கேள்விக்கு இதுவரை படத் தயாரிப்பு நிறுவனம் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.