அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் 95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (12.3.2023) மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. சர்வதேச திரை உலகைச் சேர்ந்த பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அவர்களுடன் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா யூசுப்சயியும் தன் கணவர் அசர் மாலிக்குடன் பங்கேற்றார்.

ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஸ்ட்ரேஞ்சர் அட் த கேட் (Stranger at the Gate) என்ற ஆவணக் குறும்படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் மலாலா. விழாவின்போது நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல், மலாலா அருகில் சென்று, அவரிடம் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வியைக் கேட்டார். அதற்கு மலாலா அளித்த பதில் பலரையும் கவர்ந்தது மட்டுமல்லாது, இந்த வீடியோ உலக அளவில் வைரலாகி வருகிறது.
``நீங்கள் இங்கு இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள உங்கள் திரைப்படத்துக்கு வாழ்த்துகள்” எனக்கூறிய ஜிம்மி கிம்மல், ரசிகரின் கேள்வியை படித்தார். அதைக் கேட்ட அரங்கம் சிரிப்பலையில் அதிர்ந்தது.
``நீங்கள் மிகவும் இளம் வயதிலேயே நோபல் பரிசு பெற்று, வரலாற்றில் இடம் பிடித்துள்ளீர்கள் என்பது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. நீங்கள் கிரிஸ் பைன் மீது ஹேரி ஸ்டைல்ஸ் எச்சில் துப்பினார் என்று நினைக்கிறீர்களா?” என்ற கேள்வியை ஜிம்மி கேட்டார். இதை எதிர்பார்க்காத மலாலா, ``நான் அமைதி பற்றி மட்டுமே பேசுவேன்” என பதில் அளித்தார். பிறரின் விஷயத்தில் தான் தலையிட விரும்பவில்லை என்பதை மலாலா சூசகமாகத் தெரிவித்தார். இவரின் பதில் பலரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.
2022 வெனிஸ் திரைப்பட விழாவில் பாடகர் ஹாரி ஸ்டைல்ஸ், `டோன்ட் வொரி டார்லிங்’ படத்தில் தன்னுடன் நடித்த கிறிஸ் பைன் மீது துப்புவது போன்ற வீடியோ சமூகவலை தளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான கேள்விதான் மலாலாவிடம் கேட்கப்பட்டது.