Published:Updated:

``மார்வெல் எல்லாம் சீக்வெல்கள் அல்ல... அவை ரீ-மேக்... ஏனென்றால்?!'' விளக்கும் மார்ட்டின் ஸ்கார்சஸி

மார்ட்டின் ஸ்கார்சஸி

என்னுடைய கருத்தை நான் ஓர் எதிர்மறை எண்ணத்தில் பதிவு செய்யவில்லை. நேர்மறையாகத்தான் சொல்லியிருந்தேன். மார்வெல் படங்கள் என்னைத் தனிப்பட்ட முறையில் கவர்வதில்லை. அவை சினிமாவாக இல்லை. அவை வெறும் பொழுதுபோக்காகத்தான் இருக்கின்றன.

Published:Updated:

``மார்வெல் எல்லாம் சீக்வெல்கள் அல்ல... அவை ரீ-மேக்... ஏனென்றால்?!'' விளக்கும் மார்ட்டின் ஸ்கார்சஸி

என்னுடைய கருத்தை நான் ஓர் எதிர்மறை எண்ணத்தில் பதிவு செய்யவில்லை. நேர்மறையாகத்தான் சொல்லியிருந்தேன். மார்வெல் படங்கள் என்னைத் தனிப்பட்ட முறையில் கவர்வதில்லை. அவை சினிமாவாக இல்லை. அவை வெறும் பொழுதுபோக்காகத்தான் இருக்கின்றன.

மார்ட்டின் ஸ்கார்சஸி

சினிமா தனது தனித்துவத்தை இழந்துவருவதாக வருத்தப்படுகிறார் திரை இயக்க மேதை மார்ட்டின் ஸ்கார்சஸி. சில மாதங்களுக்கு முன், மார்வெல் திரைப்படங்கள் எல்லாம் தன்னைப் பெரிதும் கவர்வதில்லை, அவை எல்லாம் ரோலர் கோஸ்டர் பயணம் போலத்தான் இருக்கின்றன எனக் கருத்து சொல்லியிருந்தார். அந்தக் கருத்துக்குப் பல தரப்பட்ட திரைப்பட ரசிகர்களிடமிருந்தும் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. பல திரைப்படக் கலைஞர்கள், மார்ட்டினை விமர்சிக்கவும் செய்தனர்.

மார்ட்டின் ஸ்கார்சஸி
மார்ட்டின் ஸ்கார்சஸி

தற்போது, அந்த விமர்சனங்களுக்கெல்லாம் பதிலளிக்கும் விதத்தில் ஒரு முழு நீளக் கட்டுரை எழுதியிருக்கிறார் மார்ட்டின். அமெரிக்காவின் முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் எழுதிய அந்தக் கட்டுரையில், தன் தரப்பு வாதத்துக்கு வலுசேர்க்கும் விதத்தில் மார்வெல் போன்ற பல ஃப்ராஞ்சீஸ் (படத்தொடர்கள்) கதைகள் மீது தனக்கு ஏன் ஆர்வமில்லை என விளக்கியிருந்தார்.

``என்னுடைய கருத்தை நான் ஓர் எதிர்மறை எண்ணத்தில் பதிவு செய்யவில்லை. நேர்மறையாகத்தான் கூறியிருந்தேன். `மார்வெல் படங்கள் என்னைத் தனிப்பட்ட முறையில் கவர்வதில்லை. அவை சினிமாவாக இல்லை. அவை வெறும் பொழுதுபோக்காகத்தான் இருக்கின்றன' என அந்த நேர்காணலில் கூறியிருந்தேன். ஆனால், அவற்றை நான் எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிட்டுப் பேசவில்லை" என முதலில் தன் கருத்தின் சாராம்சத்தை விளக்கியிருந்தார் மார்ட்டின்.

Avengers: Endgame
Avengers: Endgame

தொடர்ந்து, தன் கண்ணோட்டத்தில் சினிமா என்றால் என்ன என்பதையும் விளக்கியிருந்தார். ``என்னைப் பொறுத்தவரை சினிமா என்றால் அது மனித உணர்வுகளையும், அவர்களுடைய வாழ்வியலையும் பேச வேண்டும். நாம் காணாத ஒன்றை இதுவரைக் கண்டிராத ஒரு கண்ணோட்டத்தில் காட்ட வேண்டும். அப்படிப்பட்ட சினிமாக்களைத்தான் நான் சினிமாவாக எண்ணமுடியும்" என்கிறார் மார்ட்டின்.

அடிப்படையில் மார்ட்டினின் படங்களும் அப்படிப்பட்ட ஓர் அனுபவத்தைத்தான் கொடுத்துவருகின்றன. உதாரணத்துக்கு `ஷட்டர் ஐலண்டு'. படம் தொடங்கி முடியும் வரை ஒரு சந்தேகக் கண்ணோட்டத்துடனேயே அதன் திரைக்கதை பயணிக்கும். இந்தச் சந்தேக உணர்வு, பார்வையாளர்களுக்கும் அதே வீரியத்துடன் கடத்தப்பட்டிருக்கும். அதை படத்தின் இறுதிக் காட்சிவரை நீட்டித்து, கடைசியில் அந்தச் சந்தேகங்களையெல்லாம்விட பெரும் சந்தேகம் ஒன்றைக் கிளப்பியிருப்பார் மார்ட்டின். இத்தனையும் ஒரு சாதாரண எளிய மனிதனின் வாழ்வில் நிகழும் அளவுக்கான சாதாரண நிகழ்வுகளிலான திரைக்கதைதான்.

The Shutter Island
The Shutter Island

அப்படிப்பட்ட படங்களைக் கொடுக்கும் மார்ட்டினுக்கு, மார்வெல் சினிமாட்டிக் யூனிவர்ஸின் திரைப்படங்கள் எல்லாம் கேளிக்கையாக மட்டுமே இருப்பது ஒன்றும் வியப்பல்ல என்பது பல உலக சினிமா விரும்பிகளின் வாதம். அதை உறுதிசெய்யும் விதத்தில், மார்ட்டினும் தன் கட்டுரையில் சில பின்னூட்டங்களை இணைத்துள்ளார்.

பொதுவாக ஃப்ராஞ்சீஸ் வகைப் படங்கள் எல்லாமே வெறும் வணிக நோக்கத்துடனேயே படமாக்கப்படுவதாகக் குறிப்பிட்டிருந்த அவர், ``ஒரு படம் வெற்றியடைந்ததும், அந்த ஃபார்முலாவை வைத்து, அதே கதையையும் வைத்து அதற்கான சீக்வல் எடுக்கப்படுகிறது. உண்மையில் அவை சீக்வல்கள் அல்ல, ஒரு பூசி மொழுகப்பட்ட ரீமேக்" என ஒரு கருத்தைக் கூறியிருக்கிறார்.

The Irishman
The Irishman

மேலும், ஒருவேளை தான் ஒரு இளைஞனாகவோ, இந்தத் தலைமுறைக்கான ஆளாகவோ இருந்தால், இப்படிப்பட்ட கண்ணோட்டம் தனக்கு வந்திருக்காது என்கிறார். ``நான் இளைஞனாக இருந்த காலத்தில் ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் போன்ற இயக்குநர்களின் படங்களை இதேபோன்ற உணர்வோடுதான் பார்த்தேன். உண்மையில் ஹிட்ச்காக் தானே ஒரு ஃப்ராஞ்சீஸாகத்தான் இருந்தார். அவருடைய படங்களிலும் சில ஒற்றுமைகள் இருக்கும். ஆனால், சினிமா என்ற கலைவடிவத்துக்கு ஏற்ற ஒரு நுணுக்கம் அவர் திரைக்கதைகளில் இருக்கும்.

அவருடைய `சைக்கோ' திரைப்படத்தை ஒரு நள்ளிரவுக் காட்சியில் கண்டுகளித்தது இன்னும் என் நினைவில் இருக்கிறது. அந்தப் படம் கொடுத்த அனுபவம் என்னால் இன்றும் மறக்கமுடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது. அது கொடுத்த திகில், வியப்பு எல்லோராலும் இன்றும் நினைவில் வைத்துக்கொள்ளும்படியானது" என்கிறார் ஸ்கார்சஸி.

மார்ட்டின் ஸ்கார்சஸி
மார்ட்டின் ஸ்கார்சஸி

ஒரு திரைப்படம் அதற்கான உலகத்துக்குள், அதற்கே உரிய தர்க்கங்களுடன் இயங்க வேண்டும். அந்த அடிப்படையில் குறிப்பிடும் மார்ட்டின், ``இங்மர் பெர்க்மேன், கோடார்ட் போன்ற பல இயக்குநர்களின் படங்கள் பார்வையாளர்களைத் தங்களுக்குள் ஈர்த்துக்கொள்ளும் விதத்தில் இருக்கும். அந்த உலகத்தில் நாமும் ஒரு பகுதி வகிக்கும் வண்ணத்தில் இருக்கும். அப்படிப்பட்ட இயக்குநர்களைக் கண்டுதான் நான் திரைப்படம் இயக்க வந்தேன். என்னால் இப்படித்தான் படம் எடுக்க முடியும்" என்றும் கூறுகிறார்.

மார்ட்டி ஸ்கார்சஸி உள்ளிட்ட பல மூத்த இயக்குநர்களின் வருத்தமெல்லாம் சினிமா தற்போது இருக்கும் நிலைதான். இப்படிப் படம் எடுக்கப்பட்டால் மட்டுமே வணிக ரீதியில் வெற்றிபெறும் என ஒரு அடிப்படை சூட்சமத்தை உருவாக்கிவைத்துக்கொண்டும், அதேபோன்று மீண்டும் மீண்டும் படங்களை எடுத்து, சினிமாவை ஒரு பணம் சம்பாதிக்கும் ஊடகமாக மாற்றியிருப்பதும் சரியல்ல என்கின்றனர்.

இது ஒரு கலைவடிவம். இதற்கான இயல்பே அதன் தனித்துவம். நாளடைவில் அந்தத் தனித்துவங்களைக் களைந்துவிட்டு பாதுகாப்பான முறையில் லாபத்தை மட்டுமே வைத்து படமெடுப்பது ஏன் எனக் கேள்வியும் எழுப்பியுள்ளார் மார்ட்டின்.

ரூஸோ சகோதரர்கள்
ரூஸோ சகோதரர்கள்

`என் பாடல்களைப் பயன்படுத்தும் இசையமைப்பாளர்கள் எல்லோரும் ஆண்மை இல்லாதவர்கள்’ என இளையராஜா கூறிய கருத்துக்கு இளம் இசையமைப்பாளர்கள் மெளனம் காத்துவந்தனர். அதைப் போலவே, மார்ட்டினும் ஒரு மூத்த, திரை இயக்க மேதை என்ற வகையில் அவெஞ்சர்ஸ் இயக்குநர்கள் ரூஸோ சகோதரர்கள் மெளனம் காத்துவந்தனர். என்றாலும் அவர்கள் மீது மீண்டும் மீண்டும் எழுப்பப்பட்ட கேள்விகளைத் தொடர்ந்து இறுதியாகப் பதிலளித்துள்ளனர்.

``இங்கே சினிமா யாருக்கும் சொந்தமில்லை. எங்களுக்கும் சொந்தமில்லை, ஸ்கார்சிஸிக்கும் சொந்தமில்லை. மேலும், அவர் சொல்வதையெல்லாம் வைத்துப் பார்த்தால் அவர் இன்னும் எங்கள் படங்களைப் பார்க்கவில்லை என்றே புரிகிறது. படத்தை இதுவரைப் பார்க்காத ஒருவருடன் எப்படி எங்களால் அறிவார்ந்த ஒரு விவாதத்தை எதிர்பார்க்க முடியும்" என்கின்றனர்.