தன்னைப் பொறுத்தவரை மார்வெல் எடுப்பதெல்லாம் சினிமாவே இல்லை எனக் கூறியுள்ளார் ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மார்ட்டின் ஸ்கார்சஸி. வருகிற நவம்பர் இறுதியில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்திலும், சில குறிப்பிட்ட திரையரங்குகளிலும் வெளியாகவிருக்கும் அவருடைய படமான 'தி ஐரிஷ்மேன்' குறித்த பேட்டியொன்றில் இந்தக் கருத்தை அவர் பதிவு செய்திருந்தார்.

ஹாலிவுட்டின் கிளாசிக் படங்களான, 'குட்ஃபெல்லாஸ்', 'ஷட்டர் ஐலேண்டு', 'டேக்ஸி ட்ரைவர்' உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியவர், ஸ்கார்சஸி. இவர் படம் ஒன்று வெளியாகிறது என்றாலே உலக சினிமா ரசிகர்கள் குஷியாகிவிடுவார்கள். அதிலும் ராபர்ட் டி நிரோ, லியோனார்டோ டிக்காப்ரியோ அந்தப் படங்களில் இருந்தால் சொல்லவே தேவையில்லை, அத்தனை எதிர்பார்ப்பையும் அந்தப் படத்தின் மீது இறக்கிவிடுவார்கள் ரசிகர்கள்.
அவருடைய சினிமாக்களுக்கு எந்தளவுக்கு எதிர்பார்ப்பு இருக்குமோ, சினிமா குறித்து அவர் வைக்கும் கருத்துகள் மீதும் அதே அளவு ஈர்ப்பு இருக்கும். "ஸ்கார்சஸியே சொல்லிவிட்டார், அப்படியென்றால் இது சரியாகத்தான் இருக்கும்" எனக் கூறிவிடுவார்கள், உலக சினிமா ரசிகர்கள். அப்படி அவர் கூறியிருக்கும் கருத்துதான் இம்முறை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ``ஒரு திரைப்படம் மக்களின் உளவியல், வாழ்க்கை போன்றவற்றைப் பிரதிபலிக்க வேண்டும். மார்வெல் படங்களை நானும் பார்க்க முயல்கிறேன். என்னால் அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்க முடியவில்லை" எனக் கூறியுள்ளார் மார்ட்டின்.
சினிமா என்றால் கண்டிப்பாக சீரியஸாக இருக்கவேண்டுமா என்ன. ஒரு தரப்பு, அது தீவிரமான கலையாக இருந்தாலும், பெரும்பான்மையானோருக்கு அது பொழுதுபோக்குதானே என்ற எதிர்கருத்து எழுந்துள்ளது. என்றாலும், ஸ்கார்சஸி சொல்வதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டாம். தவறென்று தெரிந்தால், அவரே அவர் கருத்தை மாற்றிக்கொள்வார். சினிமா தியேட்டர்களில் மட்டுமே பார்க்கவேண்டிய கலை எனக் கூறியவர் தானே கடைசியில் நெட்ஃப்ளிக்ஸுக்குப் படம் எடுக்க வந்துவிட்டார். அப்படியென்றால் இந்தக் கருத்தும் மாறிவிடும் என்று கூறி ஸ்கார்சஸியின் இந்தக் கருத்தைக் கடந்து செல்கின்றனர் ரசிகர்கள்.