Published:Updated:

அவதார் வசூலை முறியடிக்கத் திட்டமா?... ரீ-ரிலீஸ் செய்யப்படும் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்

மு.ராஜேஷ்

தற்போது மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படுவதால் அவதாரின் வசூல் சாதனையை அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்
அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்

இந்த வருடம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி உலகம் முழுக்க வெளியானது. தொடக்கம் முதலே வசூலை வாரிக்குவித்த இந்தத் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் பட்டியலில் வேகமாக முன்னேறியது. வெறும் 11 நாள்களில் 21 ஆண்டுகளுக்கும் மேலாக இரண்டாம் இடத்தில் இருந்து வந்த டைட்டானிக் படத்தின் வசூலை முறியடித்து சாதனை படைத்தது. அதற்காக அந்தப் படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்
அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்

அதைத் தொடர்ந்து அவர் இயக்கிய அவதார் படத்தின் வசூலை முந்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் படிப்படியாக அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் வசூல் குறைந்து கொண்டே வந்ததால் பின் தங்கியது. இந்நிலையில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் மீண்டும் திரைக்கு வர தயாராகியிருக்கிறது. அதை மார்வெல் ஸ்டூடியோஸின் தலைவர் கெவின் ஃபெய்ஜ் (Kevin Feige) உறுதிப்படுத்தியிருக்கிறார்.

"அது நீட்டிக்கப்பட்ட காட்சிகளாக இருக்காது. படம் முடிவடைந்ததும் கிரெடிட் சீன்களுக்குப் பின்னர் நீக்கப்பட்ட காட்சிகள், சிறிய புகழ் அஞ்சலி, மற்றும் சில ஆச்சரியங்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன" என அவர் தெரிவித்திருக்கிறார். வரும் 28-ம் தேதி எண்ட் கேம் அமெரிக்காவில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

தற்போது பாக்ஸ் ஆபீஸ் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் தற்போது வரை 2.744 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூல் செய்திருக்கிறது.

அவதார் திரைப்படம் 2.788 அமெரிக்க டாலர்களை வசூல் செய்து முதலிடத்தில் இருக்கிறது. தற்போது மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படுவதால் அவதாரின் வசூல் சாதனையை அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.