Published:Updated:

`ஆங்கிரி பேர்ட்ஸ்’ முதல் `டிடெக்டிவ் பீக்காச்சு’ வரை... படமான கேம்ஸ்!

தொழில்நுட்பம் ஒரு பரிணாம வளர்ச்சியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்க, வீடியோ கேம்களும் கொஞ்சம் கொஞ்சமாக உண்மைத் தன்மையைப் பெறத்தொடங்கின. பல வீடியோ கேம்களின் அமைப்பே திரைப்படங்களுக்கு நிகரான திரைக்கதையோடு வெளியாகின.

Super Mario Bros Movie

அரைகுறையான திரைக்கதை அமைப்பு, முழுமையடையாத உரையாடலமைப்பு, தேவையில்லாத பாடல்கள், சண்டைக்காட்சிகள் என, உலகின் ஒரு பகுதியில் திரைப்படப் படைப்பையே விளையாட்டாக எடுத்துக்கொண்டிருக்கும்போது, மறுமுனையான ஹாலிவுட்டில் விளையாட்டை கொஞ்சம் தீவிரமாக படமாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

1990-களின் தொடக்கத்தில், 'சூப்பர் மேரியோ ப்ரோஸ்', 'மார்ட்டல் காம்பேட்', 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' போன்ற வீடியோ கேம்களை முதன்முதலாகப் படமாக்கத் தொடங்கினர். பின்னர், தொழில்நுட்பம் ஒரு பரிணாம வளர்ச்சியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்க, வீடியோ கேம்களும் கொஞ்சம் கொஞ்சமாக உண்மைத் தன்மையைப் பெறத்தொடங்கின. பல வீடியோ கேம்களின் அமைப்பே திரைப்படங்களுக்கு நிகரான திரைக்கதையோடு வெளியாகின.

Mario

இன்று ஒரிஜினல் ஸ்க்ரீன்-ப்ளே என்ற நிலையைத் தாண்டி நாவல்கள், கார்ட்டூன்கள் மற்றும் சிறுகதைகளை மையப்படுத்தி அடாப்டட் ஸ்க்ரீன்-ப்ளேயுடன் பல ஹாலிவுட் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது பல வீடியோ-கேம்களைத் தழுவி படங்கள் உருவாகின்றன.

2
Angry Birds Game

ஆங்கிரி பேர்ட்ஸ்:

கூட்டமாய் வரும் பன்றிகளை சிங்கிளாய் சிங்கம் வந்து அழிக்க வேண்டிய அவசியமில்லை, கூட்டமாய் குருவிகளும் கிளிகளும் சென்றாலே போதும் என்ற ஒன்லைனோடு வெளியாகி ஒரு சிறிய காலக்கட்டத்திலேயே ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்கள் பலரை அடிமையாக்கியது ஆங்கிரி பேர்ட்ஸ் கேம்.

Angry Birds Movie

அதே 'பறவைகள் Vs பன்றிகள்' என்ற ஒருவரிக் கதையின் அடிப்படையில் ஒரு நேர்த்தியான திரைக்கதை அமைத்து ஒரு அனிமேஷன் படத்தை உருவாக்கியிருந்தனர். கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

3
Tomb Raider Game

டூம்ப் ரெய்டர் படத்தொடர்:

அகில உலக லேடி சூப்பர்ஸ்டார் என்றால் ஏஞ்சலினா ஜோலிதான். பல்லாண்டுக்காலமாக ரகசியங்கள் புதைந்துகிடக்கும் சவக்குழிகளைத் தேடிச் செல்லும் சாகசப் பெண் லாரா க்ராஃப்ட்டாக ஏஞ்சலினா இரண்டு படங்களில் நடித்திருந்தார். டூம்ப் ரெய்டர் வீடியோகேம் சீரீஸை அடிப்படையாக வைத்து 2003-ல் முதல் படம் வெளியாகி, உலக அளவில் பெரும் வசூலைக் குவித்தது.

Alicia Vikander - Tomb Raider Movie

அந்த வெற்றி, அதைப் படத்தொடராக நீட்சியடையச் செய்தது. ஏஞ்சலீனாவைத் தொடர்ந்து அலீஸியா விக்கந்தர், லாரா க்ராஃப்ட்டாக தற்போது நடித்துவருகிறார். இந்தத் தொடரின் அடுத்த பாகம் தற்போது ப்ரீ-புரொடக்ஷனில் இருக்கிறது.

4
Prince Of Persia: Sands of Time Game

பிரின்ஸ் ஆஃப் பெர்ஷியா: சேண்ட்ஸ் ஆஃப் டைம்

வீடியோ கேம்களிலிருந்து உருவான படங்களில் உலக அளவில் ஒரு பெரும் வசூல் சாதனையைச் செய்த முதல் படம் இதுதான். ஒரு சாதாரண மனிதன், பெர்ஷியாவின் இளவரசனாக மாறும் கதை. அதில் கொஞ்சம் டைம்-ட்ராவலைக் கலந்து சுவாரஸ்யமாக்கியிருப்பார்கள்.

Prince Of Persia: Sands of Time Movie

இந்த ஒட்டுமொத்த படமே காலத்தைக் கடந்து முன்னும் பின்னும் செல்லும் திறன்கொண்ட ஒரு மணல் கடிகாரத்தைக் கைப்பற்றுவது குறித்த கதைதான். அதில் லயன் கிங் முதல் பாகுபலி வரை சொல்லப்பட்ட அதே வாரிசு அரசியல் கதையைச் சொல்லியிருப்பார்கள்.

5
Resident Evil Game

ரெஸிடெண்ட் ஈவில் படத்தொடர்:

ஜாம்பி வகைப் படங்களுக்கெல்லாம் இது ஒரு முன்னோடி என்றே சொல்லலாம். 'ரெஸிடெண்ட் ஈவில்' என்ற உலகப் புகழ்ப் பெற்ற ஒரு கேமை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தொடரில் இதுவரை ஆறு பாகங்கள் வெளியாகியுள்ளன.

Resident Evil Movie

சட்டவிரோதமாக ஆராய்ச்சி ஒன்றை மேற்கொள்ளும் ஒரு தனியார் கார்ப்பரேட் நிறுவனத்தைச் சுற்றிதான் இந்தக் கதைகள் நிகழும். இந்தப் படத்தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, இதை மீண்டும் ரீபூட் செய்யவிருக்கிறார்கள்.

6
Assassins Creed Game

அஸ்ஸாசின்ஸ் க்ரீட்:

உலகப் புகழ்பெற்ற வீடியோகேம் என்பதைத்தாண்டி இந்தப் படத்தின் சிறப்பம்சம் இதன் திரைக்கதை ஜாலம். இரண்டு வெவ்வேறு காலகட்டத்தில் நடக்கும் ஒரு கதை, அந்த இரண்டு காலகட்டத்தையும் இணைக்கும் விதத்தில் பின்னப்பட்ட திரைக்கதையும், அதில் ஒவ்வொரு படியாக வெளிவரும் ரகசியங்களுமென மொத்த படமுமே ஒரு புது அனுபவமாகத்தான் இருக்கும்.

Assassins Creed Movie

இந்த 'அஸ்ஸாசின்ஸ் க்ரீட்' கேமின் காஸ்டியூமை 'வேலாயுதம்' படத்திலும், இதன் கான்சப்டை 'ஏழாம் அறிவு' படத்திலும் பயன்படுத்தியிருந்தார்கள் என்பதும் அந்த இரண்டு படங்களுமே ஒரே நாள் வெளியாகின என்பதும் கூடுதல் தகவல்கள்.

7
Detective Pikachu

டிடெக்டிவ் பீக்காச்சு:

போக்கிமான்களை வைத்து பல அனிமேஷன் படங்கள் ஆண்டுக்கணக்காக எடுக்கப்பட்டுவந்தாலும், முதல் முறையாக ஒரு லைவ் ஆக்‌ஷன் படமாக வெளியானது இதுதான். தன் தந்தை மர்மமான முறையில் இறந்துபோனதைப் பற்றி அறிந்துகொள்ள, அவர் இறந்த இடத்திலிருந்து தொடங்கி, பல தடயங்களைத் தேடிச் சென்று, கடைசியில் தன் தந்தை இறக்கவேயில்லை, என்பதைக் கண்டறிகிறான் டிம் குட்மேன் என்ற சிறுவன்.

Detective Pikachu

படம்நெடுக தன்னுடன் இருக்கும் பேசும் வல்லமை கொண்ட துப்பறியும் பீக்காச்சுவுடன் செய்யும் புலனாய்வுகள்தான் படத்தின் முக்கிய அம்சம். இந்த ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு உலகம் முழுக்க கிடைத்த வரவேற்பையடுத்து, இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளது வார்னர் ப்ரோஸ் நிறுவனம். மேலும் போக்கிமான் சினிமாட்டிக் யூனிவர்ஸ் ஒன்றை உருவாக்கும் திட்டத்திலும் உள்ளதாகத் தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு