Election bannerElection banner
Published:Updated:

`தோர்' ஹீரோ, `கேப்டன் அமெரிக்கா' ஸ்டன்ட் மாஸ்டர், `அவெஞ்சர்ஸ்' இயக்குநர்... எப்படி இருக்கிறது #Extraction?

Extraction
Extraction

பப்ஜி போன்ற வீடியோ கேம்களின் சினிமா வெர்ஷனைப் போல இருக்கிறது. அவ்வளவு உழைப்பைக் கொட்டி மிக நேர்த்தியாக, யதார்த்தமாகப் படமாக்கியுள்ளார்கள். படம் முழுக்க தோட்டா வெடிக்குது, ரத்தம் தெறிக்குது, அமுக்கு டுமுக்கு அமால் டுமால்தான்!

மாஃபியாவுக்கும் மாஃபியாவுக்கும் சண்டை, அதை ஊரே வேடிக்கை பார்க்குது என `எக்ஸ்ட்ராக்‌ஷன்' படத்தை சுருக்கமாகச் சொல்லிவிடலாம்.

இந்தியாவின் மிகப்பெரிய ட்ரக்லார்டான ஓவி மகாஜன் சீனியருக்கும் வங்கதேசத்தின் மிகப்பெரிய ட்ரக்லார்டான அமீர் ஆஷிஃபுக்கும் இடையே பலகாலமாகப் பகையுணர்வு பட்டறையைப் போட்டு படுத்திருக்க, ஒருநாள், ஓவியின் ஒரே மகனான ஓவி மகாஜன் ஜூனியரை ஆஷிஃபின் ஆட்கள் டாக்காவுக்கு கடத்திவிட கதையும் ஆரம்பமாகிறது.

Extraction
Extraction

சிறைப்பறவையாகச் சிறகொடிந்து கிடக்கும் ஓவி மகாஜன் சீனியர், வெளியில் இருக்கும் தன் வலதுகரமான சாஜுவை அழைத்து, தன் மகனைக் காப்பாற்ற முயற்சி எடுக்கச் சொல்கிறான். அப்படி தன் மகனை சாஜு காப்பாற்றவில்லை எனில், சாஜுவின் குடும்பத்தை க்ளோஸ் பண்ணிவிடுவேன் எனவும் மிரட்டுகிறான். `என்னதான்டா ஈஸியா அடிச்சுப்புடுறீங்க' என மனதில் நினைத்துக்கொண்டு, சிறுவனைக் காப்பாற்ற கூலிப்படை ஒன்றை குத்தகைக்கு எடுக்கிறான் சாஜு. அந்தக் கூலிப்படையின் வீரன்தான் நம் ஹீரோ டெய்லர். அதன் பிறகு நடப்பதெல்லாம் தத்தகிட தத்தகிட தத்தோம்!

இந்த சாக்பீஸ்ல இருந்து உழைப்பை கழிச்சுட்டா வெறும் சுண்ணாம்புதான் மிஞ்சும் என்பதுபோல, `எக்ஸ்ட்ராக்‌ஷன்' படத்திலிருந்து சண்டைக் காட்சிகளை மட்டும் எக்ஸ்ட்ராக்ட் பண்ணி எடுத்தால், இரண்டே சீன்கள்தான் மிஞ்சும். படம் முழுக்க தோட்டா வெடிக்குது, ரத்தம் தெறிக்குது, அமுக்கு டுமுக்கு அமால் டுமால்தான்! மிகவும் எளிமையான, பலமுறை பார்த்து பழக்கப்பட்ட ஒரு கதை. அதில் சின்னதாக ஒரு ட்விஸ்ட், எமோஷன் தேவையான அளவு. அவ்வளவுதான் ஆக்ஷன் திரைப்படம் ரெடி எனத் திரைக்கதை ஆசிரியர் ஜோ ரூஸோ நம்பிவிட்டார் போலும். ஆமாம், நம் `அவெஞ்சர்ஸ்: எண்டு கேம்' ரூஸோவேதான். அந்தப் படம் எடுத்த சகோதர்களில் ஒருவரான இவர், இந்த முறை மார்வெல் காமிக்ஸை விட்டுவிட்டு, தங்களின் கிராபிக் நாவலான 'Ciudad'-ஐ தூசு தட்டியிருக்கிறார்கள்.

Extraction
Extraction
ஆறாவது தீவிரவாதி!

படத்தின் இயக்குநரான, சாம் ஹார்க்ரேவுக்கு இயக்குநராக இதுதான் முதல் திரைப்படம். ஸ்டன்ட் இயக்குநராக பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். நம் 'கேப்டன் அமெரிக்கா'வின் ஸ்டன்ட் டபுளே இவர்தான். அதன் காரணமாகவோ என்னவோ, ஆக்‌ஷன் காட்சிகள் எல்லாம் அள்ளு கிளம்புகிறது. பப்ஜி போன்ற வீடியோ கேம்களின் சினிமா வெர்ஷனைப் போல இருக்கிறது. அவ்வளவு உழைப்பைக் கொட்டி மிக நேர்த்தியாக, யதார்த்தமாகப் படமாக்கியுள்ளார்கள். ஆக்‌ஷன் சினிமா காதலர்களுக்கு படம் கண்டிப்பாகப் பிடிக்கும். மற்றவர்களுக்கு நிச்சயம் ஒருவித பிரமிப்பை உண்டு பண்ணும்!

நாயகன் டெய்லர் ரேக்காக, க்றிஸ் ஹெம்ஸ்வொர்த். சண்டைக் காட்சிகளில் மாஸாகவும், மற்ற காட்சிகளில் க்ளாஸாகவும் ஸ்கோர் செய்கிறார். டாக்காவின் தெருக்களில் வங்கதேசத்து ஆர்மியை ஓடவிட்டு, ஒன்மேன் ஆர்மியாக அவர் அடித்து நொறுக்குவதைப் பார்க்கையில் நமக்கு அட்ரினலின் சுரக்கிறது. அவருக்கு அடுத்ததாக, படத்தில் பட்டாசாக நடித்திருப்பது நம் ஊர் ரந்தீப் ஹூடா. சாஜு கதாபாத்திரத்தில் அவரின் பெர்ஃபாமன்ஸைப் பார்க்கையில், `சீக்கிரமே ஹாலிவுட் படங்களில் வில்லனாகப் பார்க்கலாம்' எனப் பாராட்டத்தோன்றுகிறது. ஆனால், இதுவே ஒரு ஹாலிவுட் (நெட்ஃப்ளிக்ஸ்) படம்தான் என்பதால், `சீக்கிரமே, ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வில்லனாகப் பார்க்கலாம்' எனப் பாராட்டிவிடலாம். கடத்தப்பட்ட சிறுவனாக ருத்ராக்ஷ் ஜெய்ஸ்வால் நடிப்பில் குறை ஏதுமில்லை. பங்கஜ் த்ரிபாதி, ப்ரியான்ஸி பெய்ன்யுலி, கால்ஷிஃப்தே ஃபரஹானி போன்றோரின் நடிப்புத்திறனைக் காட்ட இடம் படத்தில் இல்லை.

Extraction
Extraction
`` `அட!' சொல்லவைக்கும் 12 அயல்நாட்டு சினிமா... ரசிக்கலாம், மிதக்கலாம், பறக்கலாம்!'' - வின்சி ராஜ்

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, கலை இயக்கம் ஆரம்பித்து கிராஃபிக்ஸ், ஒப்பனை, ஆடை வடிவமைப்பு எனத் 'தொழில்நுட்பத்துறை எல்லாமே மிகச்சிறப்பாக செயலாற்றி இருக்கிறது. `எங்க ஊரு என்ன இப்படியா இருக்கு' என வங்கதேசத்து மக்கள் கோபித்துக்கொள்ளவும் நிறைய வாய்ப்புள்ளது. உலகத்தில் எந்த மூலையில் எந்த பிரச்னை என்றாலும், வெளீர்னு ஒருவர் கிளம்பிவந்து வில்லன்களை `பளீர் பளீர்' எனப் போட்டுப்பொளக்கும் `ஒயிட் சேவியர்' படம்தான் இதுவும். `பேச்சுல்லாம் கிடையாது ஒன்லி வீச்சுதான்' என கோலிவுட்டுக்கு எப்படி மதுரையோ, அப்படி ஹாலிவுட்டுக்கு இந்தியாவும் வங்கதேசமும் மாறும் காலம் வெகுதூரம் இல்லை! போர் அடித்தால், பரபரவென ஒரு ஆக்ஷன் படம் பார்க்க விரும்பினால் மட்டும் `எக்ஸ்ட்ராக்‌ஷன்' பாருங்கள். எக்ஸ்ட்ரா காரணங்கள் எதுவுமில்லை. படம் நெட்ஃப்ளிக்ஸில் உள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு