ஆஸ்கர் விழாவில் வில் ஸ்மித் தொகுப்பாளரும் காமெடியனுமான கிறிஸ் ராக்கை அறைந்த சம்பவத்தின் பரபரப்பு இன்னும் ஓயவில்லை. அதன் எதிரொலியாகவோ என்னவோ, ஏற்கெனவே நெட்ஃபிளிக்ஸ் தயாரிப்பில் வில் ஸ்மித் நடிக்க இருந்த படம் தள்ளிப் போகிறது. ஆனால், இது ஆஸ்கர் சம்பவத்தின் விளைவுதானா என உறுதியாகத் தெரியவில்லை.
ஆஸ்கர் விழாவில் கிறிஸ் ராக், வில் ஸ்மித்தின் மனைவியை வைத்து செய்த நகைச்சுவைக்குக் கோபப்பட்டு வில் ஸ்மித் மேடையிலேயே கிரிஸ்ஸை அறைந்தார். இந்நிகழ்வுக்கு மறுநாள் கிறிஸ் ராக்கிடம் அவர் மன்னிப்பு கேட்டு கடிதம் ஒன்றையும் பகிர்ந்தார். ஆஸ்கர் அமைப்பில் இருந்தும் வில் ஸ்மித் வெளியேறிவிட்டார்.
இதனிடையே அவர் நடிக்க இருந்த 'Fast and Loose' என்கிற திரில்லர் படத்தின் இயக்குநராக முன்பு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த டேவிட் லியட்ச் (David Leitch) அதிலிருந்து வெளியேறி நடிகர் ரியான் கோஸ்லிங் நடிக்கும் 'ஃபால் கை' (Fall Guy) என்னும் படத்தை இயக்கச் சென்றுவிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வில் ஸ்மித் படத்துக்குப் புதிய இயக்குநர் யாரும் முடிவு செய்யப்படாத நிலையில் அந்தப் படத்தை நெட்ஃபிளிக்ஸ் கிடப்பில் போடவுள்ளதாக ஹாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் க்ரைம் தாதாவாகவும் உளவு ஏஜென்டாகவும் இரண்டு வேடங்களில் வில் ஸ்மித் நடிக்க இருந்தார்.
இந்தச் சர்ச்சையால், தற்போது ஆப்பிள் டிவி பெரும் பட்ஜெட் கொடுத்து எடுத்துள்ள 'Emancipation' படத்தின் ரிலிஸும் தள்ளிப்போகிறது. இதில் வில் ஸ்மித், கெவின் ஹார்ட்டுடன் இணைந்து நடித்திருக்கிறார். நேஷனல் ஜியோகிராபிக்கின் பயணத்தொடர் ஒன்றின் இரண்டாம் பாகத்திலும் வில் ஸ்மித் பணியாற்ற உள்ளார்.
இந்தப் படைப்புகள் தவிர, இன்னும் சில படங்கள் வில் ஸ்மித் கையிலிருந்து நழுவிப் போகும் என 'ஹாலிவுட் ரிப்போட்டர்' பத்திரிகை தெரிவித்திருக்கிறது.