Published:Updated:

அமெரிக்காவின் கறுப்பு - வெள்ளை அரசியல்... ஸ்பைக் லீயின் #Da5Bloods எப்படியிருக்கிறது?! #BlackLivesMatter

கார்த்தி
Da 5 Bloods
Da 5 Bloods ( Netflix )

ஃபிளாஷ்பேக் காட்சிகளில் லீ செய்திருப்பது வித்தியாசமான ஒரு முயற்சி. ஐரிஷ்மேனில் வருவது போல, இதில் கோடிகளை செலவு செய்து ஜோ பெஸ்ஸியையும், ராபர்ட் டீ நீரோவையும் இளமையாக்கவில்லை. #Da5Bloods

உலகப் பஞ்சாயத்துகளை எல்லாம் அசால்ட்டாக டீல் செய்துகொண்டிருந்த அமெரிக்காவின் உள்ளூர்ப் பஞ்சாயத்துகளை இப்போது உலகமே வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருக்கிறது. சூப்பர் பவர் என்கிற பிம்பம் உடைந்துகொண்டிருக்கிறது. வரலாறுகளை ஆளும் வர்க்கம் அவர்களுக்கு ஏற்றாற் போல் மாற்றி எழுதிக்கொள்ளலாம். ஆனால், என்றும் வரலாறு மாறாது. தக்க சமயத்தில், அது தன் உண்மை நிலையை வெளிக்காட்டியே தீரும். #GeorgeFloyd கொலைக்கும் அமெரிக்க, ஐரோப்பியக் கண்டங்களில் சிலைகளை தகர்த்தெறிவதற்கும் இருக்கும் தொடர்புகளைத்தாண்டி தற்போது ஏன் எனும் கேள்வி சிலருக்கு எழலாம். ஆனால், வரலாறு அப்படியானதுதான். மிகவும் வலிமையானது. தமிழகத்தில் நிகழ்ந்த ஓராயிரம் பிரச்னைகளுக்கு செவி மடுத்து வீதிக்கு வரத் தயங்கிய மக்கள், எதற்கென்றே புரியாமல் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குக் கூடினர்.

Da 5 bloods
Da 5 bloods
netflix

Confederate தலைவர்கள், அடிமைகளை ஆண்டவர்கள் என எந்த ஆண்டவர் மீதும் கருணையில்லாமல், பாரபட்சமின்றித் தற்போது அமெரிக்க, ஐரோப்பிய தேசங்களில் சிலைகள் துண்டாடப்படுகின்றன. கிறிஸ்டோபர் கொலம்பஸின் காலம் வரை மனிதன் மூர்க்கத்துடன் நியாயம் கேட்கத் தொடங்கிவிட்டான் என்பதற்கான அபாயச் சங்கு, தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாய் வீழ்ந்துகிடக்கும் அவரின் சிலை. தலைவர்கள் மாளிகையின் விளக்குகளை அணைத்துவிட்டு, பதுங்கிக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். தொடர்ச்சியாக சிலரைக் கொட்டிக்கொண்டே இருந்தால், வளைந்த முதுகுகள் நிமிரத் தொடங்கும். வளைந்தவர்களின் நிஜ உயரத்தையும், அடர்த்தியையும் ஆளும் வர்க்கத்தால் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. அதுதான் இப்போது அமெரிக்காவில் நடந்துகொண்டிருக்கிறது. #BlackLivesMatter

வியட்நாம் போரின் போது, அங்கு அமெரிக்காவுக்காக சண்டையிட்ட நான்கு வீரர்கள், தங்கள் அணித் தலைவனின் உடலைத் தேடி பல ஆண்டுகளுக்குப் பின்னர் வியட்நாம் வருகின்றார்கள். ஆனால், தேடுதல் வேட்டை உடலுக்கானது மட்டுமல்ல. மண்டை ஓட்டின் தேடுதலுக்கிடையே தங்க வேட்டையை நிகழ்த்த முடிவு செய்யும் 5 Bloods குழுவுக்கு என்ன நடந்தது என்பதைச் சொல்கிறது இந்த #Da5Bloods. ஆனால், இந்தப் புனைவின் வழி, எண்ணற்ற உண்மைச்சம்பவங்களைப் டாக்குமென்ட்ரி பாணியில் திரைக்கதைக்குள் தைத்ததில், வேறு கட்டத்துக்குப் படத்தை அழைத்துச் சென்றிருக்கிறார் லீ.

Da 5 bloods
Da 5 bloods
Netflix

ஜான் ஹஸ்டன் இயக்கிய 'The Treasure of the Sierra Madre' போல் மண்ணுள் புதைந்த புதையல் பற்றிய படம் எனப் பொதுவாக தோற்றம் அளித்தாலும், அதனுள் அங்கிள் சாமுக்கு எதிரான அரசியல் பார்வையை முன்வைத்து நகர்கிறது இப்படம். தங்கத்தைத் தேடும் புதையல் குறித்த சுவாரஸ்யத்தை நம் கண்கள் பார்க்க மறந்து, அடுத்து அரசியல் ரீதியாக எந்த சவுக்கை எடுத்து விளாசப்போகிறார் என நம் செவிகள் சுவாரஸ்யத்தை நோக்கி ஓடுகின்றன. வியட்நாம் போர் காலங்களில் கறுப்பின மக்களுக்கு நேர்ந்த அநீதிகளையும், அது போருக்குப் பிந்தைய காலங்களில் அவர்களுக்குத் தரும் மன அழுத்தத்தையும் பற்றிப் பேசுகிறது da 5 Bloods. மொஹம்மது அலி காணொலியுடன் ஆரம்பிக்கும் நொடியிலேயே, படம் எத்தகைய தாக்கத்தினை நம்முள் செலுத்தவிருக்கிறது என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது. வியட்நாமில் அமெரிக்காவுக்காகக் கறுப்பர்கள் போரிட்டுக்கொண்டிருந்த அதே வேளையில், அமெரிக்காவில் வெள்ளையர்கள் கறுப்பின மக்களுக்கு எதிராகக் காய்களை நகர்த்துகின்றனர்.

பால் (டெல்ராய் லிண்டோ), ஓட்டிஸ் (கிளார்க் பீட்டர்ஸ்), மெல்வின் (இஸையா ஒயிட்லாக் ஜூனியர்), எட்டி (நாம் லூயிஸ்) இந்த நான்கு சீனியர் சிட்டிசன்கள் தங்கள் பால்ய காலத்தில் விட்டுச் சென்ற புதையலுக்காக ஹோ சி மின் நகருக்குள் மீண்டும் வருகிறார்கள். வயதுக்கே உரித்தான கோபமும், அறச்சீற்றமும், ஈகோவும் அவர்களுக்குள் எட்டிப் பார்க்கின்றன. பணமென வந்தபின், கம்யூனிசம் என்ன கேப்பிட்டலிஸம் என்ன என எல்லோரும் அதிகாரத்தின் ருசியைக் காணத்தொடங்கத்தான் செய்வார்கள். சிலருக்குள் பண போதையின் மமதை தலைக்கு ஏறுகிறது. நியாயவான் அங்கேயே தேங்கிப்போகிறார்கள். யார் இறுதியில் மீள்கிறார்கள் என்பதை 154 நிமிட சினிமாவாக கொடுத்திருக்கிறார் ஸ்பை லீ.

அமெரிக்க சிவில் வாரில், 1,86,000 கறுப்பினத்தவர்கள் அமெரிக்காவுக்காக சண்டையிட்டார்கள். இரண்டாம் உலகப்போரில் 8,50,000 கறுப்பர்கள் அமெரிக்காவுக்காக சண்டையிட்டனர். விடுதலைதான் பரிசு. ஆனால் தரப்படவில்லை. தற்போது, அடுத்து வியட்நாம் போருக்கு எங்களை இழுத்துச் செல்கிறார்கள். காவல்துறையின் இனவாத அடக்குமுறையைத் தாண்டி, ஒரு மண்ணும் இதுவரையில் எங்களுக்குப் பரிசாகக் கிடைத்ததில்லை.
பாபி சீல் (1968)
விடாக்கண்டன் அமிதாப், கொடாக்கண்டன் ஆயுஷ்மான்... பாலிவுட்டின் OTT ரிலீஸ் #GulaboSitabo எப்படி?

இறுதியில் வரும் சில காட்சிகள் தவிர்த்து, எந்தவொரு நொடியும் படத்தில் அதிகமாக இல்லை. பக்காவான எடிட்டிங். இரண்டு காலநிலைகளில் நகரும் கதைக்கு ஏற்றாற்போல், இரண்டு விதமான aspect Ratio காட்சிகள். இடையிடையே வரும் மால்கம் எக்ஸ், மார்ட்டின் லூதர் கிங் உண்மைச் சம்பவங்கள் என ஆயிரம் அன்பு முத்தங்கள் லீ. நார்மன்தான் எங்களின் மார்ட்டினும், மால்கமும் என்பார்கள் அந்த சீனியர்கள். சில காட்சிகளே வந்தாலும், அழுத்தமான ஒரு குழுத்தலைவராக மனதில் பதிகிறார் நார்மனாக நடித்திருக்கும் சாட்விக் போஸ்மேன். ('பிளாக் பேந்தர்' நாயகன்). படத்தில் வியட்நாம் கைடாக நடித்திருக்கிறார் ஜானி ('ஓக்கே', 'ஏழாம் அறிவு' டோங் லீ). அதேபோல் ட்ரம்புக்கு எதிராக அத்தனை கருத்துகளை அழுத்தமாக முன்வைத்திருக்கும் டெல்ராய் லிண்டோவை, ட்ரம்பின் ஆதரவாளராக காட்டியிருப்பது லீ-யின் குறும்பிஸம். அதே சமயம் ட்ரம்பின் ஆதரவாளர் என்பதற்காக அந்தக் கதாபாத்திரத்தைக் கோமாளியாக சித்திரிக்கவில்லை லீ. மாறாக, ஒரு கறுப்பினத்தவர் எப்படி ட்ரம்பின் ஆதரவாளராக மாறியிருக்க முடியும் என்பதை நமக்கு கேள்வியாக எழுப்புகிறது பாலின் கதாபாத்திரம்.

ஃபிளாஷ்பேக் காட்சிகளில் லீ செய்திருப்பது வித்தியாசமான ஒரு முயற்சி. ஐரிஷ்மேனில் வருவது போல, இதில் கோடிகளைச் செலவு செய்து ஜோ பெஸ்ஸியையும், ராபர்ட் டீ நீரோவையும் இளமையாக்கவில்லை. மாறாக இளமையான சாட்விக் போஸ்மேனுடன், இந்த நான்கு முதியவர்களையும் உலவவிட்டிருக்கிறார். சாட்விக் போஸ்மேன் இவர்களுக்கு இடையே மகன் போலத் தோற்றமளிக்கிறார். ஆனால், இவர்களின் தலைவராக, மார்ட்டின் லூதர் கிங்கின் கொலைக்குப் பின், சாட்விக் பேசும் காட்சி அத்தனை உளப்பூர்வமானது.

சூரியனே எதிரி!

ஸ்பைக் லீயின் படங்களில் இருக்கும் நக்கல்கள் இதிலும் நிறைய இடங்களில் குறிப்பாக வசனங்களில் தெறிக்கின்றன. எங்களுக்கு ஹோ சி மின் நவீன வியட்நாமின் தந்தை மாதிரி, உங்களுக்கு வில்லியம் ஜார்ஜ் என்பார் ஒரு வியட்நாமிஸ். உலகம் முழுக்கவே இத்தகைய பொய்ச் செய்திகள் இருக்கின்றன என்பதாக சிரித்துக்கொண்டே புஷ்ஷிடம் நூற்றுக்கும் மேற்பட்ட அடிமைகள் இருந்தார்கள் என்பார் ஒரு மூத்த ராணுவ வீரர். நெட்ஃபிளிக்ஸ் தரும் கட்டற்ற சுதந்தரத்தில் எதிர்பார்ப்பது இத்தகைய முயற்சிகளைத்தான். "அய்யா சாமி, இந்தப் பாவத்துக்கு எல்லாம் நான் ஆளாக மாட்டோம். நாங்க யாருக்கும் அந்த ஆசாமிக்கு ஓட்டுப் போடலப்பா" என டேவிட் சொல்வதெல்லாம் உச்சக்கட்ட அட்ராசிட்டி. சில ஆண்டுகளாக, ஸ்பைக் லீ என்னும் பெயர் வெறும் கிரவுட் புல்லராக மட்டும் இருந்தது. 2018-ம் ஆண்டு வெளீயான 'BlacKkKlansman' படத்தின் மூலம், மீண்டும் முத்திரை பதித்தார் லீ. டேனி பில்சன், பால் டி மியோ, லீ, கெவின் கூட்டணியில் எழுதப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் திரைக்கதையின் மூலம், லீ தன் அடுத்தகட்ட பாய்ச்சலுக்குத் தயாராகியிருக்கிறார்.

Da 5 bloods படம் முழுக்க அழுத்தமான காட்சியமைப்புகள் விரவி இருக்கின்றன. படத்தில் வரும் நிஜ ஃபுட்டேஜ்களிலும் சரி, படத்திலேயே பல காட்சிகளிலும் சரி வன்முறை சற்று தூக்கல்தான். ஆனால், நிஜத்தோடு ஒப்பிடுகையில், சினிமா அவ்வளவு மோசம் இல்லை என்பதால், அதை ஏற்றுக்கொள்ள வேண்டியதிருக்கிறது. ஏனெனில், ஜார்ஜ் ஃபிளாய்டைக் கொன்றது போல், யாரும் சினிமாவில் 8 நிமிடங்களுக்குத் தொடர்ச்சியாகக் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் மீது , தன் முழக்காலை வைத்து நசுக்கப்போவதில்லை. "Bloods Dont die, They multiply" என்பார் ஓட்டீஸ். ஆம், போராளிகள் ஒருபோதும் மரணிப்பதில்லை.

க்ளின்ட் ஈஸ்ட்வுட்டின் படங்களில் வரும் போர் காட்சிகளில், கறுப்பினத்தவர்களை பெயருக்குக்கூட பயன்படுத்துவதில்லை என வருத்தம் தெரிவித்திருந்தார் லீ. எல்லாவற்றுக்கும் சேர்த்து இதில் சிறப்பாகச் சம்பவம் செய்திருக்கிறார். வரலாற்று நிகழ்வுகளை யாரும் மாற்ற முடியாது. ஏதேனும் ஒரு நாள், யாரோ ஒருவர் உண்மையைச் சொல்லத்தான் போகிறார்கள். தற்போதைய அமெரிக்காவின் சூழலுக்கு இதைவிட அழுத்தமாகவும், கன்வின்சிங்காகவும் ஒரு படம் வெளியாக வாய்ப்பில்லை. உங்களிடம் இரண்டரை மணி நேரமும், நெட்ஃபிளிக்ஸ் அக்கவுன்ட்டும் இருந்தால் இந்தப் படத்தைத் தயவு செய்து பார்க்கவும்.

அடுத்த கட்டுரைக்கு