சினிமா
Published:Updated:

NOMADLAND - வாழ்க்கை என்னும் வாகனம்!

NOMADLAND
News
NOMADLAND

தனிமையும், வறுமையும் கூடிய பெரும்துயர் வாழ்வில், எதுவும் தன்னை அசைத்துப் பார்க்க அவர் அனுமதிப்பதில்லை.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்


இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச் செய்கிறது. இந்த உலகம் இப்படியான பல்வேறு பண்பாடுகளாலும், உறவுமுறைகளாலும், சமூக அழுத்தங்களாலும் பின்னிப் பிணைந்திருக்கிறது. இதுனூடே தான் வாழ்க்கை குறித்த புரிதல் மனித மனங்களில் அல்லாடிக்கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுகளுக்கு ஆறு பரிந்துரைகளைப் பெற்றிருக்கிற Nomadland திரைப்படத்தின் பேசுபொருளும் இதுதான்.

NOMADLAND - வாழ்க்கை என்னும் வாகனம்!

2009ம் ஆண்டு மாபெரும் பொருளாதார மந்தநிலை (Great Recession) உலகின் இயக்கத்தை நிலைகுலையச் செய்தது. அதன் விளைவால் 2011ம் ஆண்டு அமெரிக்காவின் நெவேடா மாகாணத்தில் கணவருடன் இணைந்து சின்னச்சின்ன வேலைகளைச் செய்துவரும் 60 வயது ஃபெர்ன் வேலையிழக்கிறார். கணவரும் மரித்துப் போக, தனக்கு வேண்டாத பொருள்களையெல்லாம் விற்று, வேன் ஒன்றை வாங்குகிறார். வீடற்றவரான ஃபெர்னுக்கு இனி எல்லாமே இந்த வேன்தான். இலக்கற்று திரியும் நாடோடி வாழ்வு. ஆனாலும் வேலை என்று ஏதேனும் செய்தால்தான் மீதமுள்ள வாழ்க்கையை எவரிடமும் யாசிக்காமல் கழிக்க முடியும். ஃபெர்ன் சந்திக்கும் மனிதர்களும், அவர்கள் வாழ்க்கைக்குத் தரும் உந்துசக்திகளும் தான் Nomadland.

வயது முதிர்ந்த ஃபெர்ன், தான் சந்திக்கும் மனிதர்களில் சிலரை இழக்க ஆரம்பிக்கிறார். தனிமையும், வறுமையும் கூடிய பெரும்துயர் வாழ்வில், எதுவும் தன்னை அசைத்துப் பார்க்க அவர் அனுமதிப்பதில்லை. ஆனாலும், அந்த வாகனமும், அதிலிருக்கும் பொருள்களும் வாழ்வின்மீதான பற்றுதல்களை அதிகப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. வாகனத்தில் ஒரு பிரச்னை என்கிற போதும், அதை விற்க மனமின்றி, தான் சந்திக்கவே விரும்பாத தங்கையிடம் சென்று கடன் பெறுகிறார். தெரிந்தவர்கள் வந்து தங்களோடு தங்கிவிட நிர்ப்பந்திக்கும்போதும், அதை சிரித்த முகத்துடன் மறுத்து கடின வாழ்க்கைக்குத் தயாராகிறார். அமெரிக்காவின் கடும்குளிரிலும், தன் முடிவை மாற்றிக்கொள்ள மறுக்கிறார் ஃபெர்ன். வாழ்க்கையில் எல்லாம் முடிந்தபின் என்ன இருக்கிறது என்னும் கேள்விக்கு ‘வாழ்தல்’ என்னும் பதிலைச் சொல்கிறது ஃபெர்னின் வாழ்வு.

NOMADLAND - வாழ்க்கை என்னும் வாகனம்!

லிண்டா, ஸ்வங்கி, பாப் என படத்தில் நிஜ நாடோடிகள் பலர் தாங்களாகவே வந்துபோகிறார்கள். அவர்களின் கதைகளும் திரைக்கதையாக உருமாறியிருக்கின்றன. வாழ்க்கையை முடித்துக்கொண்ட மகன் பற்றி ஒரு காட்சியில் விவரிக்கும் பாப், ‘எப்படியும் அவனை என் மீதமிருக்கும் வாழ்க்கைப் பயணத்தில் மீண்டும் சந்திப்பேன்’ என்பார். நாள்களோ, வாரங்களோ, ஆண்டுகளோ கடந்து போகலாம். ஆனால், நாம் தொலைத்த மனிதர்களும், வாழ்வும், வேறொரு உருவத்தில் எங்கோ மீண்டும் நம்மை நோக்கி வரக்காத்திருக்கின்றன என்பதை ஆத்மார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறார்கள். தன் வாழ்க்கையின் முக்கிய பொக்கிஷங்களாக ஃபெர்ன் கருதும் விஷயங்களை ஒரு காட்சியில் ஒருவர் உடைத்துவிடுவார். உடைந்து நொறுங்கிப்போகும் ஃபெர்ன், பின் வேறொரு காட்சியில் அவை எல்லாவற்றையும் எந்த சஞ்சலமும் இன்றி விற்க நேர்கிறது.

ஃபெர்னாக நடித்திருக்கும் 63 வயதான ஃபிரான்சஸ் மெக்டொர்மாண்டு ஏற்கெனவே இருமுறை சிறந்த நடிகைக்கான ஆஸ்கரை வென்றிருக்கிறார். Three Billboards Outside Ebbing, Missouri படத்தில் பாலியல் வன்புணர்வால், கொலை செய்யப்பட்டு இறந்துபோன மகளுக்காகப் போராடுவார் மெக்டொர்மாண்டு. அதில் சீற்றம் மிகுந்த ஒரு தாய்தான் இறுதிவரை நம் கண் முன் தெரிவார். Nomadlandல் அமேசான் வேலை, பர்கர் கடை என பல்வேறு இடங்களில் வேலை செய்வார் ஃபெர்ன். ஆம், அங்கு மெக்டொர்மாண்டு திரையிலிருக்க மாட்டார். அதுதான் அவர். Fargo, Three Billboards தொடங்கி, இந்த முறையும் ஆஸ்கர் அவருக்குத்தான் என்கிறார்கள்.

NOMADLAND - வாழ்க்கை என்னும் வாகனம்!

சென்ற முறை ஆஸ்கர் வென்றதும், அந்த அரங்கி லிருக்கும் எல்லா பெண்களையும் எழுந்து நிற்கச் சொன்னார் மெக்டொர்மாண்டு. வெறுமனே விருதை வென்றுவிட்டு விலகிச்செல்ல விரும்பவில்லை அவர். ‘‘பெண்களுக்கென்று கதைகள் இருக்கின்றன. எங்களுக்கு நிதியுதவி செய் யுங்கள். வெறுமனே பார்ட்டி களில் மட்டும் எங்களைப் பற்றி பேசாதீர்கள். எங்களுக்கான சமமான வாய்ப்பை வழங் குங்கள்’’ என அறச்சீற்றம் கொண்டார்.

சீனப் பெண் இயக்குநரான க்ளோ ஜா தான் Nomadlandன் இயக்குநர். சீனாவின் அடக்கு முறைகளைப் பற்றி க்ளோ ஒருமுறை பேசியதால், Nomadland திரைப்படத்துக்கும், க்ளோ குறித்த செய்திகளுக்கும் முற்றிலுமாகத் தடை விதித்திருக்கிறது சீனா. இந்தப் படத்துக்காக இதுவரையில் 34 விருதுகளைப் பெற்றிருக்கிறார் க்ளோ. வெனிஸில் தங்க சிங்கம், டொரொண்டோவில் பீப்பிள்ஸ் சாய்ஸ், கோல்டன் குளோபில் சிறந்த இயக்கம், சிறந்த நடிப்பு என செல்லும் இடமெல்லாம் அன்பின் கோப்பைகளை பெற்றுவருகிறது NomadLand. இந்த மாத இறுதியில் ஆஸ்கரிலும், நாடோடி வாழ்வு இதயங்களை நனைக்கும் என நம்பலாம்.