Published:Updated:

`ஜோக்கர்', `பாராசைட்', `ஜூடி'... ஆஸ்கர் வென்ற படைப்பாளிகளும் அவர்களின் கதைகளும்!

Oscar 2020
Listicle
Oscar 2020 ( ஆஸ்கர் )

ஊகித்ததுபோலவே சில பிரிவுகளில் கலைஞர்களுக்கும் படங்களுக்கும் ஆஸ்கர் விருதுகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. அப்படிச் சில முக்கியமான பிரிவுகளில் யார் யார் விருதினைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.


1
Joaquin Phoenix, Oscar - Best actor

சிறந்த நடிகர் - வாக்கீன் பீனிக்ஸ் (ஜோக்கர்)

விருதுகளில் தலை சிறந்து விளங்கும் விருது ஆஸ்கர் விருது. அந்த வகையில் ஒவ்வொரு வருடம் ஆஸ்கர் விருதுக்கென்றே சில படங்கள் வெளியாகும். 2019-ல் அப்படியான படங்களுக்கும் பஞ்சமேயில்லை. `ஜோக்கர்', `1917', `பாராசைட்', `ஃபோர்டு vs ஃபெராரி', `ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்', `ஜோஜோ ராபிட்', `தி ஐரிஷ் மேன்', மேரேஜ் ஸ்டோரி', `லிட்டில் வுமன்' போன்ற பல படங்கள் வெளியாகின.

இந்திய மொழி சினிமாக்களில் தெற்கே `வடசென்னை', `சூப்பர் டீலக்ஸி'ல் ஆரம்பித்து, வடக்கே `அந்தாதூன்', `கல்லி பாய்' போன்ற 28 இந்தியப் படங்கள் ஃபிலிம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டன. இப்படி வெவ்வேறு நாடுகளிலிருந்தும் குறிப்பிட்ட சில படைப்புகள் ஆஸ்கர் நாமினேஷனுக்காக அனுப்பப்பட்டிருந்தன.

ஊகித்ததுபோலவே சில பிரிவுகளில் கலைஞர்களுக்கும் படங்களுக்கும் ஆஸ்கர் விருதுகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. அப்படிச் சில முக்கியமான பிரிவுகளில் யார் யார் விருதினைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

இப்படம் வெளியானபோதே வாக்கீனுக்கு ஆஸ்கர் விருதினை ஒதுக்கி வைத்திருப்பார்கள் போல. படத்தைப் பார்த்துவிட்டு திரையரங்கிலிருந்து வெளியே வரும்போதே `இவருக்குத்தான் ஆஸ்கர்' என்பதை ரசிகர்களும் உறுதி செய்துவிட்டார்கள். DC காமிக்ஸைச் சேர்ந்த `ஜோக்கர்' கதாபாத்திரம் இதுவரை அனிமேஷன் உட்பட பல்வேறு பரிமாணங்களில் வந்திருக்கிறது. அதிலும், கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய `பேட்மேன் தி டார்க் நைட்' படத்திற்குப் பிறகு இந்தக் கதாபாத்திரத்தின் மீதான ஈர்ப்பு இன்னும் அதிகமாகிவிட்டது. ஏனென்றால் அதில் நடித்த ஹீத் லெட்ஜர் அந்தக் கதாபாத்திரத்துக்குள் இருந்த அடர்த்தியை, தன் அசாத்திய நடிப்பின் மூலம் வெறித்தனமாய் வெளிக்காட்டியிருந்தார். இதற்காக சிறந்த துணை நடிகர் பிரிவில் ஆஸ்கரையும் வென்றார்.

இப்படியான எதிர்பார்ப்போடுதான் வாக்கீன் நடித்த ஸ்டாண்டு அலோன் படமான `ஜோக்கர்' வெளியானது. `ஹேங் ஓவர்' படத்தை இயக்கியிருந்த டாட் ஃபிலிப்ஸ்தான் இப்படத்தையும் இயக்கியிருந்தார். `சூடோபல்பர்' எனும் மனநிலை சார்ந்த நோயாளியாக நடித்து வெளுத்து வாங்கியிருந்தார் வாக்கீன். இவரது சிரிப்பில் மொத்த திரையரங்கும் அதிர்ந்தது. ஜோக்கரோடு சேர்த்து இதுவரை 4 முறை ஆஸ்கருக்காகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார் வாக்கீன். ஆனால், விருது வெல்வது இதுவே முதல் முறை. வாழ்த்துகள் வாக்கீன்.


2
Renee Zellweger - Best Actress

சிறந்த நடிகை - ரெனி ஜெல்வெகர் (ஜூடி)

அமெரிக்காவைச் சேர்ந்த நடிகையான ரெனி, 90-களிலிருந்து திரைத்துறையில் பயணித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் `ஜூடி'. இப்படம், அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை மற்றும் பாடகியான ஜூடி கார்லேண்ட் என்பவரின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கக்கப்பட்ட திரைப்படம். மர்மம் நிறைந்த இவரது வாழ்க்கைப் படத்தில், ஜூடி கார்லேண்டாக நடித்தவரே ரெனி. இதற்கு முன் சிறந்த துணை நடிகை பிரிவில், `கோல்ட் மவுன்டெயின்' படத்திற்காக 2004-ல் ஆஸ்கர் விருது பெற்றிருக்கிறார். ஆஸ்கரோடு சேர்த்து பல்வேறு விருதுகளை வென்றிருக்கிறார் இவர். அப்ளாஸ் ரெனி.


3
Brad pitt -Best Supporting Actor

சிறந்த துணை நடிகர் - பிராட் பிட் (ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்)

குவின்டின் டாரன்டினோ இயக்கத்தில், கடந்த ஆண்டு வெளியான காமெடி டிராமா படம் `ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்'. லியனார்டோ டீகேப்ரியோ, பிராட் பிட், மார்கட் ராபி, எமிலி ஹிர்ஸ்க் போன்ற பலர் இதில் நடித்திருந்தனர். இப்படம் பலரது பாராட்டுகளைப் பெற்றிருந்தாலும், சில சர்ச்சைகளையும் சந்தித்தது. பிராட் பிட் இதுவரை ஓரிரு முறை ஆஸ்கருக்கு நாமினேட் ஆகியிருக்கிறாரே தவிர ஒரு முறைகூட விருது பெறவில்லை. `12 இயர்ஸ் ஆஃப் ஸ்லேவ்' எனும் படத்திற்கு பெஸ்ட் பிக்சர் பிரிவில் தயாரிப்பாளராக விருது பெற்றிருக்கிறார் பிராட் பிட். ஆனால், முதல் முறையாக துணை நடிகர் பிரிவில் ஆஸ்கரைப் பெற்றிருக்கிறார் பிராட். குடோஸ் பிட்!


4
Laura Dern - Best Supporting Actress

சிறந்த துணை நடிகை - லாரா டெர்ன் (மேரேஜ் ஸ்டோரி) 

நெட்ஃப்ளிக்ஸில் வெளியான `மேரேஜ் ஸ்டோரி' படத்திற்கு, இணைய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து சில தியேட்டர்களில் மட்டும் திரையிடப்பட்டது `மேரேஜ் ஸ்டோரி'. ஸ்கார்லட் ஜொஹான்ஸனின் நடிப்பும், நோவா பௌம்பேக்கின் எளிமையான இயக்கமும் பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. தவிர, இப்படத்தில் நடித்திருந்த அனைவரும் தங்களுடைய பெஸ்ட்டைக் கொடுத்திருந்தனர். இதில் துணை நடித்த லாரா டெர்னுக்கே இந்த வருடத்திற்கான சிறந்த துணை நடிகை ஆஸ்கர் விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுவே இவருக்கு முதல் ஆஸ்கர் விருது என்பதும் கூடுதல் ஸ்பெஷல்.


5
Parasite -Bong Joon Ho

சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம், சிறந்த திரைக்கதை -பாராசைட் (பாங்க் ஜூன் ஹோ, ஹான் ஜின்)

கடந்த வருடம் மே மாதத்தில் ரிலீஸானது `பாராசைட்'. கொரின் பட இயக்குநர்களில் மிக மிக முக்கியமானவர் பாங்க் ஜூன் ஹோ. இவர் இயக்கிய `மெமரீஸ் ஆஃப் மர்டர்', `தி ஹோஸ்ட்', `ஸ்னோபியர்சர்', `ஓக்ஜா' என அனைத்துப் படங்களுமே அதிக கவனம் பெற்றவை. இந்த வரிசையில் 2019-ல் இவர் இயக்கத்தில் வெளிவந்த `பாராசைட்' படமும் அனைவராலும் கவனிக்கப்பட்டது. மேல்தட்டு மக்களையும், கீழ்த்தட்டு மக்களையும் ஒரு புள்ளியில் இணைத்து, வன்முறை கலந்து `பாராசைட்'டின் கதையைச் சொல்லியிருந்தார் பாங்க் ஜூன் ஹோ. அந்த வகையில் சிறந்த படம், இயக்குநர், திரைக்கதை (பாங்க் ஜூன் ஹோ மற்றும் ஹான் ஜின்), வெளிநாட்டுத் திரைப்படம், என நான்கு பிரிவுகளில் இப்படம் விருதுகளைக் குவித்திருக்கிறது.

மேலே குறிப்பிட்டிருந்த படங்களைத் தவிர `1917', `ஜோஜோ ராபிட்', `ஃபோர்டு vs ஃபெராரி', `தி ஐரிஷ்மேன்', `லிட்டில் வுமன்' போன்ற சில படங்களும் டெக்னிக்கல் பிரிவுகளில் விருதினைப் பெற்றிருக்கிறது.

ஆஸ்கர் விருது முழுப் பட்டியலைப் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்!