Published:Updated:

Oscars 2021: அதிக விருதுகளை வென்றது யார், கொரோனா கட்டுப்பாடுகளோடு நடந்த ஆஸ்கர் விழாவின் ஹைலைட்ஸ்!

93வது அகாடமி விருதுகள்-  க்ளோயி ஸாவ்
93வது அகாடமி விருதுகள்- க்ளோயி ஸாவ் ( Chris Pizzello )

எப்போதும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் டால்பி தியேட்டரில் நடக்கும் விழா, இந்த முறை இரண்டு இடங்களில் நடைபெற்றது. டால்பி தியேட்டர் மற்றும் யூனியன் ஸ்டேஷன் ஆகிய இரண்டு இடங்களிலும் மக்கள் குழுமியிருந்தனர்.

93-வது அகாடமி விருதுகள் நடந்து முடிந்திருக்கின்றன. கொரோனா பரவல், வருடத்தில் பாதிக்கும் மேற்பட்ட நாள்கள் திரையரங்குகள் செயல்படாமல் போனது, பெரும்பாலான படங்கள் ஓடிடி-யிலும், பல்வேறு ஸ்ட்ரீமிங் தளங்களிலும் வெளியானது என நிறைய இன்னல்களைச் சந்தித்தது ஹாலிவுட். பல்வேறு நாடுகளிலும் இதே நிலைதான். இதனால் எப்போதும் பிப்ரவரி மாதத்தில் நடக்கும் விழா இரண்டு மாதங்கள் தள்ளிப்போய் ஏப்ரல் 25 மாலை (இங்கே ஏப்ரல் 26 அதிகாலை) நடந்திருக்கிறது.

மூத்த நடிகர் ஆந்தனி ஹாப்கின்ஸ் சிறந்த நடிகருக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றது, புகழ்பெற்ற இயக்குநர் டேவிட் ஃபின்சரின் 'மேங்க்' திரைப்படம் 10 விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது, சீனப் பெண் இயக்குநரான க்ளோயி ஸாவ்வின் 'நோமேட் லேண்ட்' படம் ஆறு பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டது என சில ஹைலைட்டான விஷயங்கள் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருந்தன. இருந்தும் ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்கள், குறிப்பாக வணிக ரீதியில் ஈர்க்கும் முகங்கள் இல்லாதது ஒரு பிரச்னையாகவே பார்க்கப்பட்டது. இதற்கு காரணம் கொரோனா காரணமாக பல்வேறு பெரிய படங்கள் தங்களின் ரிலீஸை வருடக்கணக்காகத் தள்ளிவைத்ததுதான். சரி, இந்த வருடம் ஆஸ்கர் விருது விழாவில் என்ன நடந்தது?

Nomadland
Nomadland

எப்போதும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் டால்பி தியேட்டரில் நடக்கும் விழா, இந்த முறை இரண்டு இடங்களில் நடைபெற்றது. டால்பி தியேட்டர் மற்றும் யூனியன் ஸ்டேஷன் ஆகிய இரண்டு இடங்களிலும் மக்கள் குழுமியிருந்தனர். வெளிநாடுகளில் பாரிஸ் மற்றும் லண்டன் நகரிலிருந்தும் பங்கேற்றனர். இதற்காக பல்வேறு பாதுகாப்பு நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டதாய் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், இந்த முறையும் ஆஸ்கர்ஸ் தொகுப்பாளரின்றி நடைபெற்று முடிந்திருக்கிறது.

பல்வேறு பிரிவில் வெற்றி பெற்றவர்களின் விவரம் இதோ...

சிறந்த இயக்குநர் - க்ளோயி ஸாவ்

சிறந்த திரைப்படம் - நோமேட்லேண்ட்

சிறந்த நடிகை - ஃப்ரான்சிஸ் மெக்டார்மண்ட் (நோமேட்லேண்ட்)

சிறந்த நடிகர் - ஆந்தனி ஹாப்கின்ஸ் (தி ஃபாதர்)

சிறந்த துணை நடிகர் - டேனியல் கலூயா (ஜூடாஸ் அண்ட் தி ப்ளாக் மெஸ்ஸைய்யா)

சிறந்த துணை நடிகை - யூ ஜங் யூன் (மினாரி)

சிறந்த சர்வதேசத் திரைப்படம் - அனதர் ரவுண்ட் (டென்மார்க்)

சிறந்த தழுவல் திரைக்கதை - தி ஃபாதர்

சிறந்த திரைக்கதை - ப்ராமிஸிங் யங் வுமன்

சிறந்த அனிமேஷன் திரைப்படம் - ஸோல் (Soul)

சிறந்த பாடல் - ஃபைட் ஃபார் யூ (ஜூடாஸ் அண்ட் தி ப்ளாக் மெஸ்ஸைய்யா)

சிறந்த இசை - ஸோல்

சிறந்த படத்தொகுப்பு - சவுண்ட் ஆஃப் மெடல்

சிறந்த ஒளிப்பதிவு - மேங்க்

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - மேங்க்

சிறந்த கிராஃபிக்ஸ் - டெனட்

சிறந்த ஆவணப் படம் - மை ஆக்டோபஸ் டீச்சர்

சிறந்த ஆவணக் குறும்படம் - கோலெட்

சிறந்த அனிமேஷன் குறும்படம் - இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ

சிறந்த குறும்படம் - டூ டிஸ்டன்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ்

சிறந்த ஒலி - சவுண்ட் ஆஃப் மெடல்

சிறந்த ஒப்பனை, சிகை அலங்காரம் - மா ரெய்னீஸ் ப்ளாக் பாட்டம்

சிறந்த ஆடை வடிவமைப்பு - மா ரெய்னீஸ் ப்ளாக் பாட்டம்

குறிப்பிடத்தக்க சில நிகழ்வுகள்:

கடந்த வருடம் யாரும் எதிர்பார்க்கா வண்ணம் வேற்று மொழிப்படமான 'பாரசைட்' பல விருதுகளை வென்றாலும், இந்த முறை பெரும்பாலும் எதிர்பார்த்தவர்களே வெற்றி பெற்றுள்ளனர். சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர் என முக்கியப் பிரிவுகளில் 'நோமேட்லேண்ட்' படம் வெல்லும் என நினைத்த நிலையில் அது அப்படியே நடந்திருக்கிறது. சிறந்த இயக்குநர் விருது வெல்லும் முதல் சீனப் பெண் மற்றும் முதல் 'Woman of Colour' என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் க்ளோயி ஸாவ். அதோடு இந்த விருதைப் பெறும் இரண்டாவது பெண் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நோமேட்லேண்ட் -  ஃப்ரான்சிஸ் மெக்டார்மண்ட், க்ளோயி ஸாவ்
நோமேட்லேண்ட் - ஃப்ரான்சிஸ் மெக்டார்மண்ட், க்ளோயி ஸாவ்
Chris Pizzello

இந்தப் படத்துக்காகச் சிறந்த நடிகை விருதை வென்ற ஃப்ரான்சிஸ் மெக்டார்மண்ட் பேசுகையில், "விரைவில் ஒருநாள், உங்களுக்குத் தெரிந்த அனைவரையும் திரையரங்குக்குக் கூட்டிச் செல்லுங்கள். அதன் இருட்டில், அருகருகே அமர்ந்து, இன்று இங்கே பரிந்துரைக்கப்பட்டிருக்கும் அனைத்து படங்களையும் பாருங்கள்" எனப் பேசியுள்ளார். திரையரங்குகள் முன்பு போலச் செயல்பட முடியாத நிலையில் இருப்பதைக் குறிப்பிட்டுப் பேசிய அவரின் இந்த உரை உருக்கமான ஒன்றாக அமைந்தது. விரைவில் இயல்பு நிலை திரும்பவேண்டும் என்பதுதான் சினிமா உலகின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

ஆந்தனி ஹாப்கின்ஸ் - 'தி ஃபாதர்'
ஆந்தனி ஹாப்கின்ஸ் - 'தி ஃபாதர்'

சிறந்த நடிகருக்கான விருதை, மறைந்த 'பிளாக் பேந்தர்' நடிகர் சாட்விக் போஸ்மேன், 'மா ரெய்னீஸ் ப்ளாக் பாட்டம்' படத்துக்காக வெல்வார் என நினைத்திருந்த நிலையில், ஆந்தனி ஹாப்கின்ஸ் 'தி ஃபாதர்' படத்துக்காக வென்றிருக்கிறார். நிகழ்வுக்கு அவர் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணம் உலகையே உலுக்கியது. அத்தகைய ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் மரணத்தை தழுவியெடுக்கப்பட்ட சயின்ஸ் ஃபிக்ஷன் குறும்படமான 'டூ டிஸ்டன்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ்' படம் சிறந்த குறும்படத்துக்கான விருதை வென்றிருக்கிறது.

'ஜூடாஸ் அண்ட் தி ப்ளாக் மெஸ்ஸைய்யா' படத்துக்காகச் சிறந்த துணை நடிகர் விருதைச் சிறப்பாக நடித்த டேனியல் கலூயா தட்டிச் சென்றிருக்கிறார். வேற்றுமொழி படத்துக்கான விருதில் எதிர்பார்க்கப்பட்டதுபோல தாமஸ் விண்டர்பெர்க்கின் 'அனதர் ரவுண்டு' (ட்ரூக்) படம் வென்றிருக்கிறது. எப்போதும் தங்களின் உடம்பில் குறிப்பிட்ட சதவிகித அல்கஹால் அளவு இருக்குமாறு பார்த்துக்கொள்ளும் நான்கு பள்ளி ஆசிரியர்களின் வாழ்வைப் பேசிய படத்தில் மேட்ஸ் மிக்கல்சன் சிறப்பாக நடித்திருப்பார்.

டேனியல் கலூயா
டேனியல் கலூயா
Chris Pizzello

இயக்குநர் டேவிட் ஃபின்ச்சரின் 'மேங்க்' படம், க்ளாசிக் படமான 'சிட்டிசன் கேன்' படத்துக்குத் திரைக்கதை எழுதிய குடிக்கு அடிமையான எழுத்தாளர் ஹெர்மன் மன்கிவிக்ஸ்ஸின் (Herman J. Mankiewicz) வாழ்க்கை அனுபவங்களைப் பேசியது. 1941-ல் வெளியான இந்த 'சிட்டிசன் கேன்' படம் அப்போது சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை மட்டுமே வென்றது. எழுத்தாளர் ஹெர்மன் மன்கிவிக்ஸ் இந்த விருதைப் படத்தின் இயக்குநர் ஆர்சன் வெல்ஸ் (Orson Welles) உடன் பகிர்ந்துகொண்டார். ஹெர்மனின் அனுபவங்களையும் 'சிட்டிசன் கேன்' படம் உருவான விதத்தையும் வைத்து எடுக்கப்பட்ட 'மேங்க்', தற்போது 'சிட்டிசன் கேன்' படத்தை விடவும் ஒரு ஆஸ்கர் அதிகமாக வென்றிருக்கிறது. 1930 - 40களின் ஹாலிவுட்டை கண்முன் நிறுத்தியதற்காகச் சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த ஒளிப்பதிவு ஆகிய பிரிவுகளில் இந்தப் படம் ஆஸ்கரை வென்றிருக்கிறது.

இந்த வருடம் ஆஸ்கர் விருதுகள் வென்ற படங்களில் உங்களின் ஃபேவரைட் எது? கீழே கமென்ட்டில் சொல்லுங்கள்...
அடுத்த கட்டுரைக்கு