அமெரிக்கா வந்த முதல் வருடத்திலேயே வில் ஸ்மித்தை நான் ரசிக்கத் தொடங்கிவிட்டேன் எனச் சொல்லலாம். புதிய நாட்டில், பணி முடிந்து வீடு திரும்பும் எனக்கு 'Fresh Prince of Bel Air' என்ற அவரது தொலைக்காட்சி சீரியல் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த அத்தியாங்களைக் கொண்டிருந்தது 25 ஆண்டுகளுக்குப் பின்னரும் நன்றாக நினைவிருக்கிறது.
மேற்கு பிலடெல்பியா நகரில் தனித்தாய்க்கு மகனாக வளரும் பதின்ம வயது கறுப்பினச் சிறுவனை அங்கிருக்கும் தீமைகளில் இருந்து பாதுகாக்க அவன் தாய், கலிபோர்னியாவில் பணக்கார வழக்கறிஞராக இருக்கும் தன் அண்ணன் வீட்டிற்கு அனுப்பி வைக்க, அந்தப் புதிய வாழ்க்கையை எப்படி எதிர் கொள்கிறான் அந்த இளைஞன் என்ற கோணத்தில் அந்த சீரியல் போகும்.
இணையம் பிரபலமாகி வந்த வருடங்களில் வில் ஸ்மித்தின் விக்கிபீடியாவைப் பார்த்து அவரது வாழ்க்கையை அறிந்து கொண்டதும் நினைவிற்கு வருகிறது. நடிகராவதற்கு முன்னால் 'ஃப்ரஷ் பிரின்ஸ்' என்பது ராப்பர் ராப் பாடகராக முயன்றபோது வில் ஸ்மித் தனக்கு வைத்துக்கொண்ட பெயர். ராப்பராக அவரால் அவ்வளவு சிறப்பாக முன்னேறி வரமுடியவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
'Fresh Prince of Bel Air' சீரியலில் வில் ஸ்மித்தால் பாடப்பட்ட தலைப்புப் பாடல் இன்றளவும் பிரபலம் என்பதையும் சொல்லியாக வேண்டும்.
முதல் சீரியலில் கிடைத்த வெற்றியைப் பயன்படுத்தி ஹாலிவுட்டில் தன்னை பலப்படுத்திக்கொண்டார் வில் ஸ்மித். பெரும் பட்ஜெட் படங்களை வணிக வெற்றிக்குக் கொண்டு செல்லும் சூத்திரம் தெரிந்தவராக அறியப்பட்டதால் பணமும் புகழும் குவிய ஆரம்பித்ததில் ஆச்சரியமில்லை. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நடந்த முதல் திருமணம் முறிந்துபோக, சில வருடங்களில் மீண்டும் கறுப்பின நடிகை ஜேடா பிங்கட்டுடன் திருமணமாகி, இந்தத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். பிரபல தம்பதிகளாக இருக்கும் இவர்கள் இருவரும் பாரம்பரிய ஊடகங்களில் தொடர்ந்து அழைக்கப்படுவதோடு, சமூக ஊடகங்களிலும் பரபரப்பாக இயங்குபவர்கள். மிக வெளிப்படையாகப் பேசும் வீடியோக்களைக் கொண்ட வில் ஸ்மித்தின் யூடியூப் சேனல் ஒருபுறம் பிரபலம் என்றால், பல ஆலோசனைகளை வழங்கும் ஜேடாவின் இன்ஸ்டாகிராம் அவரின் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற தளம்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஒரு குயிக் பிரேக் எடுத்து, கிறிஸ் ராக் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னால், அமெரிக்கக் கலாசாரத்தில் பின்னிப் பிணைந்திருக்கும் 'நின்றபடி நகைச்சுவை' (Stand Up Comedy) என்பதன் பின்னணியைப் பார்த்துவிட வேண்டியது அவசியம். இயல், இசை, நாடகம் என்ற நம் முத்தமிழில் மேடைப் பேச்சு என்பது நேரடியாக அடங்காது என்றாலும், சொற்பொழிவு, பட்டிமன்றம் என மேடைப்பேச்சு ஒரு கலைவடிவாக ஏற்கப்பட்டுவிட்டது. திராவிட இயக்கம் மேடைப் பேச்சு என்பதை கலை இலக்கிய வடிவிலிருந்து அரசியல் மேடைகளுக்குக் கொண்டு வந்து அதில் பிரமாண்ட வெற்றியும் பெற்றது. அந்தக் கலையில் திறன் பெற்ற சிலர் தங்களது பேச்சுக்களில் நகைச்சுவையைக் கலந்து கைத்தட்டல்களை அள்ளுவதைப் பார்க்கிறோம்.
அமெரிக்க அரசியலமைப்பின் முதல் திருத்தத்தில் இருக்கும் உரிமைகளில் முக்கியமானது பேச்சுரிமை. கட்டற்ற சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட இந்தத் திருத்தம் அமெரிக்காவை வடிவமைத்ததில் முக்கிய இடம் பெறுகிறது. அதில் மிக முக்கிய இடம் நகைச்சுவைப் பேச்சு வடிவத்திற்கு உண்டு. மார்க் ட்வைன் புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் என்பது பலருக்கும் தெரியும். அவர் சில வருடங்கள் பணிபுரிந்த செய்தித்தாள் நிறுவனத்தின் அலுவலகம் இப்போது வட கலிபோர்னியாவில் அருங்காட்சியமாக இருக்கிறது.

19ம் நூற்றாண்டில் புகழ் பெற்ற நகைச்சுவைப் பேச்சாளாராக உலகையே வலம் வந்திருக்கிறார் என்பதை அங்கிருக்கும் ஆவணங்களிலிருந்து தெரிந்து கொண்டேன். அவரைத் தொடர்ந்து பலர் நகைச்சுவைப் பேச்சாளர்களாக பெரும் பணமும் புகழும் சம்பாதித்தபடி வந்தபடியே இருக்கிறார்கள். சயின்ஃபெல்ட், ட்ரவர் நோவா, டான் சப்பேல், கெவின் ஹார்ட் போன்றவர்களின் நகைச்சுவை நான் நேரில் பார்த்தவற்றில் மிகவும் ரசித்தவை. கோவிட் லாக்டௌனிற்குப் பின்னர் முதல்முறையாக நியூயார்க்கிற்குச் சென்ற அக்டோபரில் பயணம் செய்தபோது மேற்கொண்ட ஒரே பொழுதுபோக்கு - பள்ளி நண்பன் ஜெகன் கண்ணனுடன் ரேடியோ சிட்டி வளாகத்தில் நகைச்சுவையாளர் ஜிம் ஹேவிகனின் நகைச்சுவைப் பேச்சைக் கேட்கச் சென்றது.
பிரிட்டன் மற்றும் அமெரிக்கா இரண்டிலும் பிரபலமாக இருக்கும் ரிக்கி ஜெர்வேஸுடன் நேரடியாகப் பழகி, வணிக ரீதியாகப் பணி புரிந்த அனுபவம், நகைச்சுவைப் பேச்சாளர்கள் எழுதியிருக்கும் சுய சரிதைகள் தேடிப்படிக்கும் பழக்கம் என்பதன் அடிப்படையில், 'நகைச்சுவைப் பேச்சு' என்ற கலையின் தீவிர ரசிகன் நான் எனத் தயக்கமில்லாமல் கூற முடியும்.
நிற்க!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த நகைச்சுவைப் பேச்சுகளில் பல வழிமுறைகள் உண்டு. விகடனில் வரும் ஜோக் போன்ற வடிவத்தை வரிசையாக அதற்கு தேவையான ஏற்றத் தாழ்வுகளுடன் சொல்வது, தனக்கு நடந்த சம்பவங்களைச் சுவையாக விவரிப்பது, சமூகத்தில் இருக்கும் சிக்கல்களை நகைச்சுவை கலந்து விவரிப்பது, மற்றவர்களை கிண்டலும் கேலியுமாகப் பேசுவது என்பது எனப் பல வகைகள் உண்டு. இந்த கேலிப் பேச்சின் ஒரு உச்சம் 'ரோஸ்டிங்க்' எனப்படும் நகைச்சுவை. யாரைக் கிண்டல் செய்ய வேண்டுமோ, அவரை நடுவில் நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு அவரைப் பற்றி வஞ்சப்புகழ்ச்சியும் நக்கலுமாக பலர் பேசுவார்கள். பொதுவாக சில நிமிட நக்கல்களுக்குப் பின்னர் சில வரிகள் நல்லதாகப் பேசி அமர்வது இந்த 'ரோஸ்டிங்' பேச்சாளர்களின் வழக்கம்.

அதிபராவதற்கு முன்னால் டொனால்டு ட்ரம்ப் மேற்படி ரோஸ்டின் நாயகராக இருந்திருக்கிறார். சமீபத்தில் தன் கணவர் நிக் ஜோனாஸ் நாயகராக இருக்கும் போது, நம்மூர்க்காரர் பிரியங்கா சோப்ரா ஒரு பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தார். தனக்கு வயதில் இளையவரான கணவரைப் பற்றி “சமூக ஊடகத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை எனக்கு நிக் சொல்லிக் கொடுத்தார். எப்படி வெற்றிகரமான நடிகராக இருக்க வேண்டும் என்பதை நான் அவருக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும்” என்று சொல்ல அரங்கம் அதிர்ந்தது.
அவமதிக்கும் ஸ்டைலில் நடைபெறும் இந்த ரோஸ்டிங் நிகழ்வின் ஒரு முக்கிய உதாரணம் - வெள்ளை மாளிகைச் செய்திகளை கவரேஜ் செய்யும் ஊடகவியலாளர்கள் அமெரிக்க அதிபரை ஆண்டுதோறும் இதன் நாயகனாக்கி அவரைக் கிண்டல் செய்து தீர்ப்பது. அதிபருக்கும் பேச வாய்ப்பு கொடுக்கப்படும். அதைப் பயன்படுத்தி அவர் ஊடகவியலாளர்களையும், அவர்களது நிறுவனங்களையும் நக்கலாகப் பேசுவது என்பது ஒரு அமெரிக்கப் பாரம்பரியமாக இருந்துவருகிறது.
அதிருக்கட்டும். கிறிஸ் ராக் பற்றிப் பார்த்துவிடலாம்.

நகைச்சுவைப் பேச்சாளராக 80களில் தனது பயணத்தைத் தொடங்கிய கிறிஸ் ராக் தொலைக்காட்சி, திரைப்படம் எனத் தனது தளத்தை விரிவுபடுத்திக்கொண்டார். கறுப்பரினத்தைச் சார்ந்த கிறிஸ் ராக்கின் நகைச்சுவைப் பேச்சுகளில் 'கறுப்பர் அனுபவம்' (Black Experience) என்பது பிரதானமாக இடம்பெறும். பெருவாரியாக ரசிக்கப்படும் கிறிஸ் ராக் 2016ஆம் ஆண்டில் ஆஸ்கர் விருது அளிக்கப்படும் நிகழ்வின் பிரதான ஒருங்கிணைப்பாளராக நிகழ்ச்சியை நடத்தினார். கறுப்பினத்தவர்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என்ற காரணத்தைச் சொல்லி அதற்கு வராமல் புறக்கணித்தார் ஜேடா. அதைக் கிண்டல் செய்து பேசிய கிறிஸ் ராக், வில் ஸ்மித் நடித்துத் தோல்வியைத் தழுவிய சில படங்களையும் குறிப்பிட்டுப் பேசி அவையினரின் சிரிப்புகளைப் பெற்றுக்கொண்டார்.
ஐந்து வருடங்களுக்குப் பின்னர், சென்ற ஞாயிறு அன்று நடந்த ஆஸ்கர் விருது விழாவின் ஒரு பகுதியை வழங்குவதற்காக அழைக்கப்பட்டிருந்தார் கிறிஸ் ராக். சில மாதங்களுக்கு முன்னதாக, அலோபீசியா என்ற நோய்த் தாக்கத்தால் முடி கொட்டத் தொடங்கியிருந்ததால் தலையை முழுக்க மொட்டை போட்டுக்கொள்ளப் போவதாக அறிவித்திருந்தார் ஜேடா. வில் ஸ்மித் மற்றும் ஜேடா அமர்ந்திருக்கும் இடத்தைக் காட்டியபடி “ஜேடா வந்திருக்கிறார். 'G I Jane 2' படத்தைப் பார்க்கப்போகிறேன்” என கிறிஸ் ராக் சொல்ல, முதலில் சிரித்து வைக்கும் வில் ஸ்மித்தின் முகம், அதை ரசிக்காத விதத்தில் கண்களை அசைத்த ஜேடாவைப் பார்த்ததும், நேரடியாக எழுந்து சென்று கிறிஸ் ராக் முகத்தில் அறைந்துவிட்டு, “என் மனைவியின் பெயரை இழுக்காதே!” என ஆக்ரோஷமாகச் சொல்வதை நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த பல கோடி பேருக்கு படு அதிர்ச்சி.

பை தி வே, 90களின் இறுதியில் 'ஜி.ஐ.ஜேன்' என்ற திரைப்படத்தில் ராணுவ வீராங்கனையாக நடித்த பிரபல டெமி மூர் தலைமுடியை முழுக்க வழித்தபடி வருவார். அந்தத் திரைப்படத்தின் இரண்டாம் வடிவு சில மாதங்களில் வரப்போகிறது.
இந்த வருடத்தின் 'சிறந்த நடிகர்' விருதை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதும் மேடை ஏறிய வில் ஸ்மித் உணர்ச்சிவசப்பட்டபடி கண்ணீர் மல்கப் பேசினார். தனது செயலுக்கான விளக்கம் இருந்ததே தவிர அதில் மன்னிப்பு எதுவும் கேட்கவில்லை.
கறுப்பரினத்தைச் சார்ந்த வில் ஸ்மித், மற்றொரு கறுப்பரான கிறிஸ் ராக்கை இப்படிப் பொது வெளியில் தாக்கியது பற்றி ஊடகங்கள் மாய்ந்து மாய்ந்து எழுதியபடி இருக்கின்றன. சம்பவம் நடந்ததற்கு அடுத்த நாள், பன்னிரண்டு வயதான என் மகன் ஆண்ட்ரே “இது பற்றி என்ன நினைக்கிறாய்?” என என்னைக் கேட்டதும் நான் பகிர்ந்துகொண்டதை இங்கே பகிர்கிறேன்.

நகைச்சுவை என்பதற்கு வரையறை இருக்கக் கூடாது என்பது எனது எண்ணம். நகைச்சுவைப் பேச்சு சில தருணங்களில் நாகரித்தின் எல்லையைத் தொடுவது என்பது இயல்பு. அது கேவலமாக இல்லாத வரை ஓகே. கொச்சையாக இருந்தால், அதை பார்வையாளர்கள் தங்களது எதிர்ப்பைக் காட்டுவதன் மூலம் சரி செய்துகொள்வார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னால் இறந்து போன டான் ரிக்கில்ஸ் “அவமதிப்பு நகைச்சுவை” என்பதன் உச்சத்தைத் தொட்டவர். அதிபர் ரொனால்டு ரீகன் பதவியேற்றபோது அவரது பேச்சு எப்படி இருந்தது என்பதை யூடியூபில் “don rickles ronald reagan” என்பதைக் கொடுத்து தேடிப்பாருங்கள். தனக்குப் பிடிக்காத கருத்தை எதிர்த்துப் பேச, எழுத பல தளங்கள் இருக்கும்போது, நேரடியாக பேசியவரின் முகத்தில் குத்துவது என்பது வடிகட்டிய காட்டுமிராண்டித்தனம். அதற்கு நாகரிக சமூகத்தில் இடம் இல்லை.
வன்முறை என்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதில்லை. அதிலும் குறிப்பாக வன்முறையாளர்கள் என முத்திரை குத்தத் துடித்துக்கொண்டிருப்பவர்கள் சூழ்ந்திருக்கும் வெள்ளையர் உலகில் இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதை கறுப்பரின பிரபலங்கள் செய்வது ஏற்றுக்கொள்ளவே முடியாத செயல். இதற்கு நல்ல உதாரணம் 80/90களில் அமெரிக்க கறுப்பின ராப் பாடகர்கள் “கிழக்குக் கரை Vs மேற்குக் கரை” எனப் பிரிந்து சண்டை போட்டுக்கொண்டதைச் சொல்லலாம். நான் கலிபோர்னியா வந்த வருடத்தில், டூபாக் சக்கூர், பிஹ்கி ஸ்மால்ஸ் இருவரும் கொல்லப்பட்டது பரபரப்பான செய்தி. அர்த்தமற்ற அந்தச் சண்டையில் தப்பிப்பிழைத்த ஸ்னூப் டாக், ஜே-சி போன்றவர்கள் வன்முறைக்கு நோ சொல்லிவிட்டு, தங்கள் கலையில் கவனம் காட்ட, இன்று கோடிகளில் புரளும் வெற்றியாளர்களாக வலம் வருகிறார்கள். எனக்கு மிகவும் பிடித்த ராப் பாடகர் கெண்ட்ரிக் லமாரின் பல பாடல்களில் கறுப்பர்-மீது-கறுப்பர் (Black on Black) வன்முறை பற்றிய ஆழ்ந்த கவலை இருப்பதைப் பார்க்க முடியும். தேவையற்ற கோபத்தால், கறுப்பர் இனத்தின் மீது கரியை அள்ளிப் பூசியிருக்கிறார் வில் ஸ்மித்.

இந்தச் சம்பவம் பற்றி பிரபல கூடைப்பந்து வீரர் கரீம் அப்துல் ஜபார் எழுதியிருந்ததை நண்பர் ஒருவர் பகிர்ந்திருந்தார். “கிறிஸ் ராக்கின் முகத்தில் விழுந்த அடி என்பது பெண்கள் ஒவ்வொருவரது முகத்திலும் விழுந்தது" என்கிறார் கரீம். மிகச் சரியான கருத்து. பெண் எனது உடைமை; அதைக் காக்க வேண்டும் என்ற ஆணாதிக்க நிலை ஒரு புறமிருக்க, ஜேடாவிற்கு இருக்கும் பிரபல்யம், சமூக ஊடகத் திறன் ஆகியவற்றைக் கொண்டு அவர் தன்னைப் பாதுகாத்துக்கொண்டிருக்க முடியும். அதோடு, முடி உதிரச் செய்யும் நோய் பற்றிய விழிப்புணர்வையும் கொண்டுவந்திருக்க முடியும். இதற்கெல்லாம் வழியில்லாமல் செய்துவிட்டார் வில் ஸ்மித்.
சம்பவம் நடந்து ஒரு நாள் கழிந்த பின்னர் சம்பிரதாயமான மன்னிப்புக் கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் வில் ஸ்மித். கிறிஸ் ராக் இன்னும் எந்தக் கருத்தையும் வெளிப்படையாகக் கூறவில்லை.

சிறந்த நடிகர் என வில் ஸ்மித் விருதுபெற்றிருக்கும் திரைப்படத்தின் பெயர் - King Richard. பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே செரீனா, வீனஸ் என்ற தன் இரண்டு மகள்களை உலகத்தரம் வாய்ந்த டென்னிஸ் வீராங்கனைகளாக மாற்ற உதவிய கறுப்பரின ரிச்சர்டு வில்லியம்ஸின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் அது. “நீண்ட பயணத்தின் போது பார்க்க வேண்டும் என ‘கிங் ரிச்சர்டு' திரைப்படத்தை ஐ-பேடில் தரவிறக்கம் செய்து வைத்திருக்கிறேன். ஆனால், வில் ஸ்மித்தின் செயலுக்குப் பின்னர் அவர் நடித்த படத்தைப் பார்க்க மனம் வரவில்லை என்பதால் அதை டெலிட் செய்துவிடப்போகிறேன்" என்றேன் ஆண்ட்ரேயிடம் இறுதியாக.