திரையுலகம் எதிர்பார்த்துக் காத்திருந்த 95வது ஆஸ்கர் விருது விழா வெகுவிமர்சையாக நடந்து முடிந்துவிட்டது. நேற்று முழுவதும் ஆஸ்கரும் அதைப் பற்றிய சுவாரஸ்யத் செய்திகளும்தான் பெரும் பேசுபொருளாக இருந்தன.
ஆண்டுதோறும் ஆஸ்கர் நடப்பது வழக்கமான ஒன்றாக இருந்தாலும் இந்தியாவிற்கு இந்த 95வது ஆஸ்கர் ஸ்பெஷலாக அமைந்தது. இந்தியத் திரையுலகம் சார்பில் 'RRR' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் மற்றும் 'The Elephant Whisperers' ஆவணக்குறும்படம் ஆகிய இரண்டும் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளன. இவை தவிர சிறந்த இயக்குநர், சிறந்த திரைப்படம், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த நடிகர், நடிகை என உலகம் முழுவதும் உள்ள திரையுலகக் கலைஞர்களுக்கு அவர்களின் திறமைகளைக்கு மகுடம் சூடும் வகையில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.

இதற்கிடையில் அகாடமி விருதுகளைத் தவிர விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கும் ஏராளமான விலையுயர்ந்த பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம்.
1990 முதல் ஆஸ்கர் விழாவில் விருது வென்றவர்களுக்கு மட்டுமல்லாமல் பங்கேற்ற விருதாளர்கள், தொகுப்பாளர்கள் மற்றும் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்குப் பரிசுகள் வழங்கும் பாரம்பரியத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது 'அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ்'.
அந்த வகையில் ஆஸ்கர் விருது பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு கடந்த ஆண்டு 'ஸ்வாக் பேக் (swag bag)' என்ற பரிசுப் பைகள் தரப்பட்டன. அதில் மேக்அப் பொருள்கள், சாக்லேட்கள், பிஸ்கட்கள், அழகு சம்பந்தமான இலவச சிகிக்சைத் திட்டங்கள் மற்றும் அவர்களின் வீட்டைப் புதுப்பிப்பதற்கான இலவச சேவைகளுக்கான கூப்பன்கள் என சுமார் ரூ.76 லட்சம் ($100K) மதிப்புள்ள பல பரிசு பொருள்கள் வழப்பட்டன.
அந்த வகையில் இந்த ஆண்டு சுமார் ஒரு கோடி மதிப்பிலான 60க்கும் மேலான பரிசுபொருள்கள் சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை, சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் மற்றும் சிறந்த துணை நடிகை எனும் பிரிவில் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளன.
அதில் 'The Lifestyle' எனும் கனடாவில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள மிகப்பெரிய எஸ்டேட்டில் தங்கி கனடாவின் சுற்றுலாவை ரசிப்பதற்கான ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு மட்டுமே சுமார் 32 லட்சம் என்று கூறப்படுகிறது. அதேபோல புகழ்பெற்ற சுற்றுலா இடமான இத்தாலிய கலங்கரை விளக்கத்தில் எட்டு பேர் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆஃபரின் மதிப்பு சுமார் 7 லட்சம் ($9,000) என்கிறார்கள். தங்களின் வீட்டை மறுசீரமைக்க விரும்புவோர் மைசன் கன்ஸ்ட்ரக்ஷனின் $25,000 மதிப்புள்ள திட்ட மேலாண்மை கட்டணத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், தங்களின் தலைமுடியைச் சீரமைத்துக்கொள்ளவும், அழகை மேம்படுத்திக் கொள்ளவும் சில மருத்துவச் சேவைகள் இலவசமான வழகப்படுகின்றன.
இதுதவிர சருமப் பராமரிப்புக்கான பொருள்கள், பட்டுத் தலையணை, பயணத் தலையணை, 18 டாலர் மதிப்புள்ள ஜப்பானிய பால் ரொட்டி, வாசனைப் பொருள்கள், பொம்மைகள், காலணிகள் உள்ளிட்ட ஏராளமான விலையுயர்ந்தப் பொருள்களும் இதில் அடங்கும்.
இதேபோல விருது விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் வெவ்வேறு விதமான கிஃப்ட் பேக்குகள் (Goodie Bags) வழங்கப்பட்டுள்ளன.