Published:Updated:

"கனவுகள் நனவாகும் என்பதற்கு இதுவே சான்று!"- ஆஸ்கர் வென்ற முதல் ஆசியப்பெண் மிச்செல் இயோவின் மெசேஜ்

மிச்செல் இயோ

சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்ற முதல் ஆசியப்பெண் என்ற சாதனையை மிச்செல் இயோ (Michelle Yeoh) படைத்துள்ளார்.

Published:Updated:

"கனவுகள் நனவாகும் என்பதற்கு இதுவே சான்று!"- ஆஸ்கர் வென்ற முதல் ஆசியப்பெண் மிச்செல் இயோவின் மெசேஜ்

சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்ற முதல் ஆசியப்பெண் என்ற சாதனையை மிச்செல் இயோ (Michelle Yeoh) படைத்துள்ளார்.

மிச்செல் இயோ

95வது ஆஸ்கர் விருது விழா இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி தியேட்டர் அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியைப் பிரபல டிவி தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார். தீபிகா படுகோன், எமிலி பிளன்ட், சாமுவேல் எல். ஜாக்சன், டுவைன் ஜான்சன், மைக்கேல் பி. ஜோர்டன், ஜானெல்லே மோனே, ஸோ சல்டானா, ஜெனிஃபர் கான்னெல்லி, ரிஸ் அஹமட், மெலிசா மெக்கார்த்தி  உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக இதில் கலந்துகொண்டனர். 'RRR', 'The Elephant Whisperers' ஆகிய இரண்டு இந்தியப் படைப்புகள் ஆஸ்கர் விருதினை வென்றிருக்கிறது.

மிச்செல் இயோ
மிச்செல் இயோ

அவற்றையும் தாண்டி பல்வேறு படங்களும் விருதினை வென்றுள்ளது. பல கலைஞர்களும் விருதினை வென்று சாதித்திருக்கின்றனர். அந்த வகையில் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை ‘Everything Everywhere All At Once’ திரைப்படத்திற்காக மலேசியாவைச் சேர்ந்த மிச்செல் இயோ வென்றிருக்கிறார். Police Story 3: Super Cop, The Heroic Trio, Tomorrow Never Dies, Crouching Tiger Hidden Dragon போன்ற படங்களில் நடித்து உலக அரங்கில் பல்வேறு ரசிகர்களைச் சேர்த்தவர் மிச்செல்.

கேட் பிளான்செட் ( Tár), அனா டி அர்மாஸ் (Blonde) ஆண்ட்ரியா ரைஸ்பரோ (To Leslie), மிச்செல் வில்லியம்ஸ் (The Fabelmans) ஆகியோரும் சிறந்த நடிகைக்கான பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டிருந்த நிலையில் மிச்செல் இயோ இவ்விருதினை வென்றிருக்கிறார்.

ஆசியா சார்பில் 1935-ம் ஆண்டு ‘The Dark Angel’ என்ற படத்திற்காக மெர்லே ஓபரான் சிறந்த நடிகைக்கான பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டபோது அவர் விருதை வெல்லவில்லை. இதன் மூலம் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்ற முதல் ஆசியப்பெண் என்ற சாதனையை மிச்செல் இயோ படைத்துள்ளார்.

மிச்செல் இயோ
மிச்செல் இயோ

விருதினை வென்ற பின் பேசிய மிச்செல் இயோ, ”என்னைப்போல் இருக்கும் ஒவ்வொரு பெண்களுக்கும் இது ஒரு நம்பிக்கையைக்  கொடுக்கும். கனவுகள் நனவாகும் என்பதற்கு இதுவே ஒரு சான்று. பெண்கள் தங்கள் கரியர் முடிந்துவிட்டது என்று எப்போதும் நினைக்கக் கூடாது. உங்களிடம், 'உங்களின் சாதனைக்காலம் முடிந்தது' என்று எவரையும் சொல்லவிடாதீர்கள். உலகிலுள்ள அனைத்து அம்மாக்களுக்கும் இதை நான் அர்ப்பணிக்கிறேன். உண்மையில் அவர்கள்தான் சூப்பர் ஹீரோக்கள். அவர்கள் இல்லாமல் நாங்கள் யாரும் இன்று இந்த விருது விழாவில் இருந்திருக்க முடியாது. அகாடமிக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார். 

சிறந்த நடிகைகளுக்கான பிரிவில் The Woman King, Till ஆகிய  படங்களில் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஆஃப்ரோ அமெரிக்கப் பெண்களான வயோலா டேவிஸும், டேனியல் டெட்வைலரும் பரிந்துரைக்கப்படாதது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.