`ஆஸ்கர் விருதுகள் 2023' என்று அழைக்கப்படும் 95வது அகாடமி விருதுகள் தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி தியேட்டர் அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரபல டிவி தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்வில் மூன்று விருதுகளின் பரிந்துரைப் பட்டியலில் இந்தியப் படைப்புகள் இடம்பெற்றிருந்தன.

சிறந்த ஆவணப்படம் பிரிவில் சௌனக் சென் இயக்கிய 'All that Breathes', சிறந்த ஆவணக்குறும்படம் பிரிவில் கார்த்திகி கோன்சால்விஸ் இயக்கிய 'The Elephant Whisperers' மற்றும் சிறந்த பாடல் பிரிவில் கீரவாணி இசையில் 'RRR' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் ஆகியவை இடம்பெற்றிருந்தன.
விழாவினைத் தொடங்கி வைத்த ஜிம்மி கிம்மல், மேடையில் யாரேனும் அதிக நேரம் பேசினால் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆடியவாறே வரும் நடனக்குழுவினர், அவர்களை அப்படியே வெளியே அழைத்துச் சென்றுவிடுவர் என்று நகைச்சுவையாகத் தெரிவித்தார்.
முன்னதாக தொடங்கிய ரெட் கார்பெட் நிகழ்வில் 'RRR' படக்குழுவினர் இடம்பெற்றிருந்தனர். இயக்குநர் ராஜமௌலி, ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோர் விழாவை அலங்கரித்தனர். 'நாட்டு நாட்டு' பாடல் நிச்சயம் ஆஸ்கர் வெல்லும் என்று கீரவாணி நம்பிக்கைத் தெரிவித்தார்.
இந்த வருடம் கூடுதல் சிறப்பாக, பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஆஸ்கர் விருதினை வழங்குபவர்களில் ஒருவராக இடம்பெற்றிருக்கிறார். ரெட் கார்பெட் நிகழ்வில் இடம்பெற்றிருந்த தீபிகா, கறுப்பு நிற உடையில் நடந்துவந்து அனைவரையும் கவர்ந்தார்.

விருதுகள் வழங்கப்படும் நிகழ்வு தொடங்கப்பட்ட நிலையில், 'சிறந்த ஆவணப்படம்' பிரிவில், விருது வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியப் படைப்பான 'All that Breathes' விருதினைத் தவறவிட்டிருக்கிறது. அந்தப் பிரிவில் 'Navalny' என்ற படைப்பு வென்றிருக்கிறது.
அடுத்தடுத்த பிரிவுகளுக்கான விருதுகள், இசை நிகழ்ச்சிகள் என ஆஸ்கர் விருது விழா களைகட்டி வருகிறது. `RRR' படத்தின் `நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் வெல்லவேண்டும் என்பதே இந்தியர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்தக் கனவு சாத்தியமாகுமா?