கடந்த 2022-ம் ஆண்டிற்கான 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை வில் ஸ்மித் பெற்றார். அப்போது மேடையில் தன் மனைவி குறித்து கேலி செய்து பேசிய நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கைக் கன்னத்தில் அறைந்தார்.
இதற்காக அதே மேடையிலேயே அவர் மன்னிப்பும் கேட்டு அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் மற்றும் சயின்சஸ் உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமாவும் செய்தார். இதையடுத்து ஆஸ்கர் குழுவும் விருது மேடையில் ஒருவரைக் கன்னத்தில் அறைந்தது விதிமீறல் என ஸ்மித் மீது நடவடிக்கை எடுத்தது. இது உலகம் முழுவதும் பேசுபொருளானது.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, வரும் மார்ச் 12ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்கான பிரமாண்ட ஏற்பாடுகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகிறது. விருது வழங்குபவர்கள், விருது வாங்குபவர்கள், தொகுப்பாளர்கள் எனத் திரையுலகமே இவ்விழாவில் கலந்துகொள்ளத் தயாராகி வருகின்றனர். விழா நடக்கும் டால்பி திரையரங்கில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாகப் போடப்படும். இதனால் அந்த நகரமே விழாக் கோலத்தில் இருக்கிறது. இந்தியா சார்பாக தீபிகா படுகோன் விருது வழங்குபவர்களில் ஒருவராக இருக்கிறார்.
இந்நிலையில் ஆஸ்கர் அகாடமி தலைமை நிர்வாகி பில் கிராமர் விழாவின் ஏற்பாடுகள் குறித்தும் வில் ஸ்மித் சர்ச்சை குறித்தும் பேசினார். "கடந்த முறை நடந்த பிரச்னைகள் போல இந்த முறை எதுவும் நடக்காது என்று நம்புகிறோம். அப்போது நடந்த சம்பவம் குறித்து அப்போதே விளக்கம் அளித்து விட்டோம். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வண்ணம் அதற்கான முன் ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்துவருகிறோம்.

அதே சமயம் என்ன நடந்தாலும் அதற்காகத் தயாராகவே இருக்கிறோம். கடந்த முறை நடந்த அசம்பாவிதம் காரணமாக, என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதில் நாங்கள் தெளிவாகவே இருக்கிறோம். நாங்கள் மக்களைச் சந்தோஷப்படுத்தவும், ஒப்பற்ற படைப்புகளைப் பாராட்டவும்தான் இதைச் செய்கிறோம்" என்று கூறியுள்ளார்.