Published:Updated:

Luca: அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பார்வை... குழந்தைகள் சினிமாவில் பிக்சர் சொல்லும் குட்டி மெசேஜ்!

Luca | லூகா
Luca | லூகா

விநோதமானவர்கள், வித்தியாசமானவர்கள் என நாம் ஒதுக்கி வைப்பவர்களுக்கும் அன்பு, ஆசை, பாசம் இருக்கவே செய்கிறது. அவர்களும் நம்மைப் போலவே என்பதை அழுந்தச் சொல்கிறது இந்தப் படம்.

வாழ்வில் என்றும் மங்காத வானவில் காலமாக இருப்பது நமது பால்ய பருவமே. மழை பெய்தால் ஓட்டைத்தாண்டி வீட்டுக்குள் ஒழுகும் மழை நீரில் காகிதக் கப்பல் விடுவது, நன்றாகக் காற்றடிக்கும் மாலை வேளைகளில் பட்டம் விடுவது என எதைப் பற்றியும் கவலையில்லாமல் சுதந்திர தினத்தன்று ‘இந்த வாட்டி என்ன சாக்லேட் தருவாங்க?’ என்ற சிந்தனையில் சுற்றிக்கொண்டிருந்த காலத்தில், இரண்டு கடல் வாழ் குட்டீஸ் (மனிதர்கள் அல்லாத உயிரினம்) 'வெஸ்பா' ஸ்கூட்டியில் பயணிக்க விரும்புகிறார்கள். அவர்கள் மனிதர்களோடு இணைந்து கலக்கும் ஃபேன்டஸி விளையாட்டு தான் ‘லூகா’ (Luca).

இத்தாலியில் போர்ட்டரோஸோ என்னும் அழகிய நகரத்தை ஒட்டிய கடலில் வாழ்ந்து வரும் கடல் வாழ் உயிரினங்கள் கூட்டம் ஒன்று மனிதர்களைக் கண்டு அஞ்சி மறைந்து மறைந்து கடலுக்கடியில் 2 பிஹெச்கே கட்டி சுகபோகமாக வசித்து வருகிறது. மனிதர்களும் அவர்களை வெறுத்து ஒதுக்குகிறார்கள்.

Luca | லூகா
Luca | லூகா
அந்தக் கடல் வாழ் கூட்டத்தில் ஒருவனாக இருக்கிறான் கதையின் நாயகன் லூகா. கடலுக்கு வெளியிலிருக்கும் உலகத்தைக் காண வேண்டும் என்பது லூகாவிற்கு பெருங்கனவாக இருக்கிறது. ஆனால், தப்பித்தவறி கூட கடலைத் தாண்டக் கூடாது என்று லூகாவின் அம்மா ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் போடுகிறார்.

இதில் என்ன கூடுதல் மேஜிக் என்றால் கடலில் வாழும் இவர்கள் கடலை விட்டு வெளியில் வரும்போது உடம்பிலுள்ள நீர் வடிந்தவுடன் மனிதர்களின் தோற்றத்தைப் பெற்றுவிடுவார்கள். அப்படியிருக்கையில், ஒரு நாள் கடலுக்கடியில் எதேச்சையாகக் கடிகாரம் ஒன்று லூகாவின் கைகளுக்கு எட்டவே அதைப் பின்தொடர்ந்து செல்கிறான். அப்போது சந்திக்கும் நண்பன் ஒருவனால் அவன் வாழ்க்கையே மாறுகிறது. அவன்தான் கதையின் மற்றொரு நாயகன் ஆல்பர்டோ (Alberto).

அருகிலுள்ள ஒரு தீவில் வசித்து வரும் ஆல்பர்டோ மனிதர்கள் வாழும் வெளியை அறிமுகம் செய்து வைக்கிறான். இரவில் கடலுக்கு மீன் பிடிக்க வரும் மனிதர்கள் வைத்திருக்கும் பொருள்களைத் திருடிக்கொண்டு வந்து அவனிருக்குமிடத்தில் சேர்த்துச் சேர்த்து வைப்பதுதான் ஆல்பர்டோவின் தலையாய வேலை. அவன் வீட்டில் மாட்டி வைத்திருக்கும் ஒரு ‘வெஸ்பா’ ஸ்கூட்டியின் புகைப்படம் லூகாவை மிகவும் வசீகரிக்கிறது. இருவரும் சேர்ந்து அதில் எப்படியாவது பயணம் செய்யவேண்டுமென்று கனவு காண்கிறார்கள். வீட்டில் சேர்த்து வைத்திருக்கும் பொருள்களை வைத்து ‘வெஸ்பா’வை விதவிதமாக வடிவமைக்கின்றனர்.

இதற்கிடையில், அம்மா கிழித்த கோட்டைத் தாண்டிய லூகா வீட்டில் கையும் களவுமாக மாட்டிக்கொள்ள அவனைச் சிறிது காலம் ஆழ்கடலில் இருக்கும் அவனது மாமா வீட்டிற்கு அனுப்ப லூகாவின் அப்பா, அம்மா பிளான் போடுகின்றனர்.

Luca | லூகா
Luca | லூகா

அந்த பிளானிலிருந்து அவன் எப்படி எஸ்கேப் ஆகி அல்பர்டோவுடன் போர்ட்டரோஸோவிற்குச் செல்கிறான், அங்கு நடக்கும் சைக்கிள் ரேஸில் இவர்கள் வென்றார்களா, ‘வெஸ்பாவில்’ பயணம் செய்தார்களா, லூகா மீண்டும் கடலுக்குச் சென்றானா என லூகா & ஃப்ரெண்ட்ஸ் செய்யும் அல்ட்டிமேட் அட்டூழியங்களே இந்தக் கலகலப்பான அனிமேஷன் படமாக விரிகிறது.

ஸ்டோரிபோர்டு ஆர்டிஸ்ட்டான என்ரிகோ கஸரோஸா (Enrico Casarosa) விற்கு இயக்குநராக இது முதல் படம் என்றாலும், அவர் கையாண்டிருக்கும் நேர்த்தியும், கதையின் சுவாரஸ்யம் குறையாத போக்கும் வாய் நிறைய ஆசாம் சொல்ல வைக்கிறது. ‘பிக்ஸர்’ வழக்கம்போல் தனது பாணியில் ஒரு பக்கா எமோஷனலான அதே சமயம் கலகலப்பான அனிமேஷன் படம் ஒன்றைக் கொடுத்துள்ளது. தொடக்கம் முதல் சமீபத்தில் வெளியான 'தி சோல்' படம் வரை ஒவ்வொருமுறையும் இந்த மீட்டரை பிக்சர் சரியாகப் பிடித்துக் கதை சொல்வது அதற்கு மட்டுமே கைகூடி வரும் மேஜிக்!

இப்படத்தின் கதை பலரது பால்ய கால நினைவுகளை ரீவைண்ட் செய்யலாம். அதற்கு முக்கிய காரணம் அப்படி ஓர் உண்மைக்கதை இதில் ஒளிந்திருப்பது தான். படத்தின் இயக்குநர் என்ரிகோவும் அவரது நெருங்கிய நண்பரும் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளருமான ஆண்ட்ரியா வாரன் (Andrea Warren) ஆகிய இருவரின் சிறுவயது நினைவுகள்தான் லூகாவின் கரு என்கிறார் இயக்குநர். ஜெனோவா நகரத்தில் சிறுவயதில் தனது நண்பருடன் செய்த சேட்டைகளையும், அங்கே வாழும் மக்கள் மத்தியிலிருந்து வந்த கடல் சார்ந்த சில மூட நம்பிக்கைகளையும் வைத்து விளையாடியுள்ளார்.

Luca | லூகா
Luca | லூகா

இதுதொடர்பாக, இத்தாலியின் கடலோரத்தில் அமைந்துள்ள Cinque Terre பகுதிக்குச் சென்று அங்குள்ள இடங்களையும், மக்களின் கலாசாரத்தையும் கொஞ்சம் அலசி ஆராய்ந்து அதேபோல் ‘போர்ட்டரோஸோ’ நகரத்தை உருவாக்கியுள்ளனர். அனிமேஷன் படங்களில் கையாளும் மிகவும் நுட்பமான தொழில்நுட்பத்தை விடுத்து படம் முழுக்க அனைத்து காட்சிகளுக்கும், கதாபாத்திரங்களுக்கும் ஓவியம் போன்ற எஃபெக்ட்டை (பழங்கால கம்ப்யூட்டர் அனிமேஷன் முறை) கொடுக்க வேண்டுமென்று கவனமாக வடிவமைத்திருப்பது கண்களுக்கு புது விருந்தாக இருக்கிறது. இது இயக்குநரின் ரெக்வெஸ்ட்டாம். இதற்காக இயக்குநரே பல்வேறு ஓவியங்களை வரைந்து படக்குழுவினரிடம் விளக்கியுள்ளார். மற்ற டெக்னிக்கல் குழுவைத் தாண்டி அனிமேஷனிற்காக மட்டும் மொத்தம் 63 பேர் வேலைப்பார்த்துள்ளனர்.

கொரோனா போலவே ஒரு வைரஸ், ஹைப்ரிட் குழந்தைகள்... `ஸ்வீட் டூத்' சீரிஸ் பேசும் அரசியல் என்ன?

படத்தில் ஆங்காங்கே இத்தாலிய மொழியில் வரும் குட்டி குட்டி வசனங்கள் அழகு சேர்க்கின்றன. ஒரு காட்சியில் நட்சத்திரம், நிலா பற்றி விளக்கும் காட்சி ரசிக்க வைக்கிறது. கடலிலேயே நீந்திப் பழகிய லூகா, போர்ட்டரோஸோவில் நடக்கும் சைக்கிள் போட்டியில் பங்கேற்பதற்காக எடுக்கும் விடாமுயற்சி, நட்பின் மகத்துவம் எனப் பல விஷயங்களைப் படம் போகிற போக்கில் நங்கூரமிட்டு சொல்கிறது.

Luca | லூகா
Luca | லூகா
விநோதமானவர்கள், வித்தியாசமானவர்கள் என பெரும்பான்மை சமூகம் ஒதுக்கி வைப்பவர்களுக்கும் அன்பு, ஆசை, பாசம் இருக்கவே செய்கிறது. அவர்களும் நம்மைப் போலவே என்பதை அழுந்தச் சொல்கிறது இந்தப் படம். இங்கே கடல் வாழ் உயிரினம் என லூகாவைக் காட்டியிருந்தாலும் நிச்சயம் இதை ஆஃப்ரோ அமெரிக்கர்கள், தன்பாலின ஈர்ப்பாளர்கள், திருநர்கள் எனத் தினம் தினம் ஒடுக்குமுறையைச் சந்திக்கும் அனைவருக்கும் நாம் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம்.

அனிமேஷன் பட விரும்பிகளை, குழந்தைகளை, ஃபீல்குட் பட விரும்பிகளை ‘லூகா’ நிச்சயம் கவரும் என்பதில் சந்தேகமில்லை. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் கரையொதுங்கியுள்ளது. வொர்க் ஃப்ரம் ஹோம், ஆன்லைன் கிளாஸ் வீக்கெண்ட்டில் குடும்பத்துடன் ஜாலியாக அமர்ந்து பார்க்க ஒரு சிறப்பான தரமான படம்.

ஒருவேளை நீங்கள் படத்தை பார்த்திருந்தால் படம் குறித்த உங்கள் கருத்துக்களைக் கீழே கமெண்ட் பண்ணுங்க பாஸ்!

அடுத்த கட்டுரைக்கு