டிஸ்னி மற்றும் பிக்சார் நிறுவனம் இணைந்து தயாரித்து 1995-ல் வெளியான 'டாய் ஸ்டோரி' என்னும் அனிமேஷன் படம் உலகம் முழுவதும் குழந்தைகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் கார்ட்டூன் வடிவிலும் 3டி அனிமேஷன் திரைப்பட வடிவிலும் வெளியாகின. இப்படத்தில் இடம்பெற்ற 'பஸ் லைட்இயர்' (Buzz Lightyear) என்ற கதாபாத்திரம் உலகமெங்கும் பிரபலமானது. அதன் பன்ச் வசனமான "To Infinity and Beyond!" ("முடிவிலி மற்றும் அதற்கு அப்பால்!") பலரின் வாழ்த்துச் செய்திகளிலும் தவறாமல் இடம்பெற்றது.
தொடர்ந்து இக்கதாபாத்திரத்தை மையமாக வைத்து கார்ட்டூன் வடிவில் நிறைய சீரிஸ்கள் எடுக்கப்பட்டன. தற்போது இதே கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு 'லைட்இயர்' என்ற படம் எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் பிக்சார் நிறுவனத்தின் படம் இது. மேலும் IMAX பார்மேட்டில் தயாரிக்கப்பட்டு வெளியாகும் முதல் அனிமேஷன் திரைப்படம் இது என்றும் கூறப்படுகிறது.

இப்படத்தில் தன்பாலின முத்தக்காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், இது அரபு நாட்டின் நம்பிக்கைகளுக்கு எதிராக உள்ளது என்று கூறி சவுதி அரேபியா, எகிப்து, மலேசியா மற்றும் லெபனான் உள்ளிட்ட அரபு நாடுகளைச் சேர்ந்த 14 நாடுகள் மற்றும் இந்தோனேசியா இப்படத்திற்குத் தடை விதித்திருந்தன.
இந்நிலையில் தற்போது, இப்படம் டிஸ்னி+ ஹாட்ஸ் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது. இதில் ஏதும் பிரச்னைகள் வராது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்படத்தில் இடம்பெற்ற தன்பாலின முத்தக்காட்சிகள் டிஜிட்டல் ரிலீஸிலும் நீக்கப்படாததை அடுத்து மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் ஓடிடி-யில் இப்படத்தை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் (18+) பட்டியலில் சேர்த்துள்ளது.

குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட இப்படம் இவ்வாறு 18+ கன்டென்ட்டாக மாறியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இருப்பினும் என்னதான் தடைகள் வந்தாலும் "காட்சிகள் எதுவும் நீக்கப்படாது" என்று இப்படத்தின் தயாரிப்பாளர் கேலின் சுஸ்மான் ஏற்கெனவே கூறியிருந்தார். அதன்படி இதன் காட்சிகள் எதுவும் மாற்றப்படவில்லை.
கூடுதல் சிறப்பாக, ஓடிடி-யிலும் இந்தப் படம் IMAX enhanced வெர்ஷனிலேயே வெளியாகியுள்ளது. இதனால் படத்தில் இடம்பெற்றிருக்கும் பல முக்கியமான காட்சிகள் சாதாரண காட்சிகளைவிட 26% அதிக வெளியைக் கொண்டதாக அமைந்திருக்கும். இப்படி ஒரு விரிவான எஃபெக்ட்டில் படத்தைப் பார்க்கக் கூடுதல் கேட்ஜெட்கள் எதுவும் தேவையில்லை.