பலத்த எதிர்பார்ப்புக்கிடையே நாளை வெளியாகவிருக்கிறது ஸ்பைடர்மேன் படத்தின் அடுத்த பாகம் Spider-Man: No Way Home. டாம் ஹாலண்ட், பெனடிக்ட் கம்பர்பேட்ச், ஜெண்டயாவுடன் கடந்த இருபது ஆண்டுகளில் வெளியான பல ஸ்பைடர்மேன் படங்களின் வில்லன்களும் இதில் வரிசைகட்டி களமிறங்குகிறார்கள். 'அவெஞ்சர்ஸ்: எண்டு கேம்' திரைப்படத்துக்குப் பிறகு அதிக டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டிருப்பது இந்த ஸ்பைடர்மேன் படத்துக்குத்தான். சென்னையில் காலை ஐந்து மணியிலிருந்தே பல திரையரங்குகளில் ஹவுஸ்புல் போர்டு தொங்குகின்றன. அப்படி இந்தப் படத்தில் என்ன ஸ்பெஷல்?

பீட்டர் பார்க்கர் யார் என்னும் கேள்விக்கான விடை எல்லோருக்கும் தெரிந்துவிட, அதிலிருத்து மீள டாக்டர் ஸ்ட்ரேஞ்சின் உதவியை நாடுகிறார் ஸ்பைடர்மேன். ஆனால், ஏதோ கோளாறில் எல்லா உலகங்களிலிருந்தும் ஸ்பைடர்மேன் வில்லன்கள் பீட்டர் பார்க்கரின் உலகுக்குள் வந்துவிடுகிறார்கள். யாரையும் கொல்லாத பீட்டர் பார்க்கர், எப்படி இந்த புதிய வில்லன்களை சமாளிக்கிறார் என்பதுதான் கதை. பழைய வில்லன்கள் வருகிறார்கள் என்றால், நம் பழைய ஹீரோக்கள்? ஆம், அங்கு தான் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கடந்த இரு தசாப்தங்களில் ஸ்பைடர்மேன் ரசிகர்கள் பார்க்கும் மூன்றாவது பீட்டர் பார்க்கர்தான் டாம் ஹாலண்ட். 2002ம் ஆண்டு வெளியான ஸ்பைடர்மேனின் ஹீரோவான டோபி மகியூருக்கு இன்றளவும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்தப் படத்தில் நாயகியாக கிறிஸ்டன் டன்ஸ்ட் நடித்திருப்பார். அதில்தான் க்ரீன் கோப்லினாக வில்லியம் டேஃபோ அசத்திருப்பார். டோபியின் மூன்று பாகங்கள் முடிந்ததும், ஆண்ட்ரூ கார்ஃபீல்டை வைத்து அமேசிங் ஸ்பைடர் மேன் என அடுத்த தொடர் படங்களை எடுத்தது சோனி. அதில் எம்மா ஸ்டோன் நாயகி. ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் நடித்த படங்களிலும் புது புது வில்லன்கள் அவதரித்துக்கொண்டிருந்தனர். இவர்கள் எல்லோரும் இந்தப் புதிய படத்தில், பல உலகங்கள் இணைவதால் தோன்றுவார்களா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. அதற்குத்தான் இத்தனை எதிர்பார்ப்பும்!

முந்தைய பாகங்களைப் போல் அல்லாமல், டாம் ஹாலண்ட் நடிக்கும் இந்த மூன்றாவது பாகத்தில் காமெடி குறைவு என்கிறார்கள் ப்ரீமியரில் இந்தப் படத்தைப் பார்த்த விமர்சகர்கள். முந்தைய பீட்டர் பார்க்கரைப் போல இந்த வில்லன்களைக் கொல்வதில் டாம் ஹாலண்டுக்கு விருப்பமில்லை. அதனால், இவர்களின் பிரச்னைகளுக்கான தீர்வைக் கண்டறிய முனைகிறார். ஆனால், அதற்கு முட்டுக்கட்டை போடுகிறார் டாக்டர் ஸ்ட்ரேஞ். எல்லாவற்றையும் எப்படி முடித்துவைக்கிறார் பீட்டர் பார்க்கர் என்பதைத்தான் திரைப்படமாக எடுத்திருக்கிறார்களாம்.
எல்லாம், சரி. இருபதாண்டு காத்திருப்பு. இவ்வளவு எதிர்பார்ப்பு எல்லாவற்றுக்குமான பதில் படத்தில் இருக்கிறதா எனக் கேட்கிறீர்களா? அதற்கான ஸ்பாய்லர் இல்லாத ஒரு வார்த்தை பதில் 'ஆம்'.